சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் தூக்கம் அவசியமான ஒன்று. நம்முடைய உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு சரியான தூக்கம் தேவைப்படுகிறது. குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்த தூக்கம் ஆரோக்கியமான மனிதனுக்கு அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தூக்கம் எப்படி ஆரோக்கியத்துடன் தொடர்புடையதோ, அதேபோலவே வாஸ்துவில் நல்ல நிம்மதியான வாழ்க்கைக்கு நாம் படுத்து தூங்கும் திசை முக்கியமாக கருதப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரங்களின்படி, நாம் செய்யும் சிறிய தவறுகள் கூட நமது வாழ்க்கையில் பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்பது காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஒருவருடைய குடும்பத்தில் நிம்மதியின்மை, ஒற்றுமையின்மை, பொருளாதார நெருக்கடி ஆகிய பிரச்சினைகள் வருவதற்கு கூட அவர் தூங்கும் திசையும் காரணமாக உள்ளது என்கிறது வாஸ்து குறிப்புகள். வாஸ்துவின்படி தலை, கால்களை சரியான திசையில் வைத்து உறங்குவது நல்லது. எந்த திசையில் தூங்குவது சுபம், எது அசுபமானது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
தெற்கு திசையை நோக்கி பாதங்களை வைத்து தூங்குவதை வாஸ்து சாஸ்திரம் தவறு என சொல்கிறது. ஏனெனில் தெற்கு திசையில் தான் எமன் அல்லது எதிர்மறை சக்தி இருக்குதாம். ஆகவே இந்த திசையில் கால் வைத்து தூங்கக் கூடாது. இதே போலவே கிழக்கு நோக்கியும் கால்களை வைத்து உறங்கக்கூடாது. ஏனென்றால் சூரியன் கிழக்கில் உதிக்கிறது. இந்த திசையில் கால்களை நீட்டினால் நமக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என நம்பப்படுகிறது. இதனால் வாழ்வில் மோசமான விளைவுகள் ஏற்படும். பயம், குழப்பம், கெட்ட கனவுகள் வருகிறதா? முதலில் தூங்கும் திசையை சரி பார்த்து கொள்ளுங்கள்.