
அன்னை துர்கா தேவியின் 9 அவதாரங்களில் முதன்மையானவராக வணங்கப்படுபவர் ஷைலபுத்ரி. இவர் பார்வதி தேவியாகவும் அறியப்படுகிறார். ‘ஷைல’ என்றால் ‘மலை’, ‘புத்ரி’ என்றால் ‘மகள்’ என்று பொருள். இதனால் இவர் ‘மலையின் மகள்’ என்று அழைக்கப்படுகிறார். இமயமலையை ஆண்ட மன்னன் இமவானின் மகளாகவும், ஈசனின் மனைவியாகவும், பார்வதி தேவியின் வடிவமாகவும் கருதப்படுகிறார். ஷைலபுத்ரியின் கதை புராணங்களில் குறிப்பாக தேவி மஹாத்மியம், சிவபுராணம், ஸ்கந்த புராணம் போன்றவற்றில் விவரிக்கப்பட்டுள்ளது. பார்வதி தேவியின் முதல் அவதாரமாக விளங்கும் ஷைலபுத்ரியின் தோற்றம் மற்றும் பண்புகள் குறித்து இங்கு காணலாம்.
புராணங்களின்படி ஷைலபுத்ரி முன்னர் தட்சன் என்கிற மன்னனின் மகளாக சதி என்கிற பெயரில் பிறந்து, சிவபெருமானை மணந்தார். தட்சன் தனது இல்லத்தில் ஒரு யார் யாகத்தை ஏற்பாடு செய்து அனைத்து கடவுள்களையும் அழைத்தார். ஆனால் தனது மருமகனான சிவபெருமானை தட்சன் அழைக்கவில்லை. தனது தந்தை ஏற்பாடு செய்த யாகத்தில் கலந்து கொள்வதற்கு சதி விருப்பம் தெரிவித்தார். சிவபெருமானும் சதிக்கு அனுமதி அளித்தார். ஆனால் சதி யாகத்திற்கு வந்த போது தட்சன் சிவபெருமானை கடுமையாக அவமதித்தார். தந்தையின் வார்த்தைகளால் மனம் உடைந்த சதி, தீயில் குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
பின்னர் சிவபெருமானை மீண்டும் மணம் முடிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் இமயமலையை ஆண்ட இமவானின் மகளாக ஷைலபுத்ரியாக மறுபிறவி எடுத்தார். சிவனை மணம் முடிக்க வேண்டி அவர் கடும் தவம் புரிந்தார். இவரது தவம் இயற்கையின் சக்திகளையும், தேவர்களையும் கவர்ந்தது. இறுதியில் ஷைலபுத்ரியின் அர்ப்பணிப்பை ஏற்ற சிவபெருமான், பார்வதி தேவியாக அவரை மணந்தார். ஷைலபுத்ரியின் அர்ப்பணிப்பு மற்றும் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் ஷைலபுத்ரியை மீண்டும் தனது மனைவியாக ஏற்றார்.
ஷைலபுத்ரி வெள்ளை உடை அணிந்து மலையில் அமர்ந்திருக்கும் தோற்றத்தில் சித்தரிக்கப்படுகிறார். இவர் இரு கைகளை கொண்டவர். வலது கையில் தாமரை மலரையும், இடதுகையில் ஜெபமாலையையும் ஏந்தி இருக்கிறார். இவரது வாகனம் வெள்ளை எருதாகும். இவர் கையில் இருக்கும் தாமரை தூய்மை, அறிவு மற்றும் ஆன்மீகத்தை குறிக்கிறது. ஜெபமாலை தவம், பக்தி மற்றும் மன ஒருமைப்பாட்டை குறிக்கிறது. வெள்ளை எருது நீதி, உறுதி மற்றும் புனிதத்தை குறிக்கிறது. ஷைலபுத்ரி மூலாதார சக்கரத்துடன் (முதல் சக்கரம்) தொடர்புடையவர். முதல் சக்கரம் என்பது உடலின் அடித்தளமாகவும், ஆன்மீகப் பயணத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது.
ஆன்மீகப் பயணத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் நவராத்திரியின் முதல் நாளில் ஷைலபுத்ரி வணங்கப்படுகிறார். இவரை வணங்குவது மனதை ஒருமுகப்படுத்தவும், உடல் ஆன்மாவை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. இவர் சிவனை அடைய மேற்கொண்ட கடுமையான தவமானது, பக்தர்களுக்கு அர்ப்பணிப்பு மற்றும் உறுதியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. மலையின் மகளாக இருப்பதால் இயற்கையுடன் ஆழமான தொடர்பையும் குறிக்கிறார். இயற்கையின் நிலைத்தன்மை, வலிமை மற்றும் தூய்மையை இவர் பிரதிபலிக்கிறார். நவராத்திரியின் முதல் நாளான இவருக்கு பக்தர்கள் பால், பழங்கள், மலர்கள் மற்றும் இனிப்புகளை படைத்து வழிபடுகின்றனர். வெள்ளை மலர்கள், குறிப்பாக மல்லிகை இவருக்கு மிகவும் பிடித்தது.
“ஓம் தேவி ஷைலபுத்ரயை நமஹ:” என்கிற மந்திரத்தை உச்சரிப்பது பக்தர்களுக்கு மன அமைதியை தருவதாக நம்பப்படுகிறது. ஷைலலபுத்ரியை வணங்குபவர்களுக்கு மனதில் தெளிவு, உடல் ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியை தருவதாக கருதப்படுகிறது. இவர் முதல் சக்கரமான மூலாதார சக்கரத்தை செயல்படுத்தி, ஆன்மீகப் பயணத்திற்கு அடித்தளம் அமைக்கிறார். ஷைலபுத்ரி தன்னை உள்ளன்போடு வணங்கும் பக்தர்களுக்கு மனதில் தெளிவு, நீண்ட உடல் ஆரோக்கியம், ஆன்மீக உயர்வைத் தருகிறார். நவராத்திரியின் முதல் நாளில் நீங்களும் அன்னை ஷைலபுத்திரையை வணங்கி அன்னையின் அருளாசியை பரிபூரணமாகப் பெறுங்கள்.