Navratri: இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி இன்று (செப்டம்பர் 22) கோலாகலமாக துவங்கியுள்ளது. முதல் நாளான இன்று எவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அம்பிகையின் 9 அவதாரங்களை போற்றும் ஒரு பண்டிகை தான் நவராத்திரி. நவராத்திரி என்ற சொல்லுக்கு ‘ஒன்பது இரவுகள்’ என்பது பொருள். ஒன்பது இரவுகளிலும் துர்க்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் வழிபடப்படுகின்றன. மகிஷாசுரன் என்கிற அரக்கனை துர்கை அம்மன் ஒன்பது நாட்கள் போரிட்டு வதம் செய்ததன் நினைவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை திதி துவங்கி, அஷ்டமி திதி வரையிலான ஒன்பது நாட்களும் நவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது. பத்தாவது நாளை விஜய தசமியாக கொண்டாடுகிறோம்.
25
ஷைலபுத்ரி
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபட வேண்டும். அந்த வகையில் செப்டம்பர் 22 ஆம் தேதி திங்கட்கிழமை நவராத்திரி துவங்குகிறது. நவராத்திரியின் முதல் நாள் ஷைலபுத்ரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது துர்க்கை அம்மனின் முதல் அவதாரமாகும். ஷைலபுத்ரி என்கிற சொல்லுக்கு ‘மலைகளின் மகள்’ என்று பொருள். ஷைலபுத்ரி தேவி தூய்மை, அமைதி மற்றும் வலிமையின் சின்னமாக கருதப்படுகிறார். நவராத்திரி காலத்தில் கொலு வைத்து, கலசம் பாலித்து, அகண்ட தீபம் ஏற்றி வழிபடுவது முறையாகும். நவராத்திரி வழிபாடுகளை மாலை வேளையிலேயே செய்ய வேண்டும்.
35
பூஜை முறைகள்
கொலு வைப்பவர்கள் பெரும்பாலும் செப்டம்பர் 21 ஆம் தேதியே வேலைகளை துவங்கியிருப்பார்கள். கொலு வைக்க முடியாதவர்கள் இன்று மாலை வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து இனிப்பு நெய்வேத்யம் படைத்து நவராத்திரி வழிபாட்டினை துவங்கலாம். பூஜையை துவங்குவதற்கு முன்னர் வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரிக்கவும். அரிசி மாவை அரைத்து தண்ணீரில் கரைத்து மாக்கோலம் இடுவது மிகவும் சிறப்பு. அம்மன் சிலை அல்லது படத்தை ஒரு மணப்பலகை இட்டு அதில் மாக்கோலம் வரைந்து அதன் மேல் வைக்க வேண்டும். படம் அல்லது சிலைக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.
நவராத்திரியின் முதல் நாளில் மிக முக்கியமான சடங்கு கலசம் ஸ்தாபனம் செய்வதாகும். ஒரு கலசத்தில் சுத்தமான நீரை நிரப்பவும். அதில் ஒரு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், நாணயம், மா இலைகளை வைக்கவும். கலசத்தின் மேல் தேங்காயை வைக்க வேண்டும். இந்த கலசத்தை அரிசி அல்லது கோதுமை தானியங்களின் குவியலின் மீது வைக்க வேண்டும். அதன் பின்னர் அணையா தீபம் ஒன்றை ஏற்ற வேண்டும். அகண்ட தீபம் ஒன்றை வைத்து நெய்யை ஊற்றி விளக்கேற்ற வேண்டும். இந்த விளக்கை ஒன்பது நாட்களும் அணையாமல் பாதுகாப்பது மிகவும் மங்களகரமானது. தேவிக்கு பிடித்த மலர்கள், பழங்கள், இனிப்புகளை நெய்வேத்யம் செய்ய வேண்டும்.
55
வழிபட உகந்த நேரம்
முதல் நாளில் வெண் பொங்கல் அல்லது சுண்டல் செய்து அம்மனுக்கு நெய்வேத்யம் படைக்கலாம். மல்லிகை மலர்களை படைப்பது மிகவும் சிறப்பாகும். கலசத்தில் அம்பிகையை ஆவாஹனம் செய்ய வேண்டும். வழிபாட்டின் போது அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், துர்காஷ்டகம், காமாட்சி அஷ்டகம் அல்லது அம்பிகைக்குரிய நாமாவளிகளை பாராயணம் செய்யலாம். அம்பிகைக்குரிய 108 திருநாமங்களை சொல்லி அர்ச்சனை செய்வது சிறப்பானதாகும். நவராத்திரி வழிபாட்டினை காலை 6:09 முதல் 8:06 வரை அல்லது காலை 9:10 முதல் 10:20 வரையிலான நேரத்தில் செய்யலாம். காலையில் பூஜை செய்ய இயலாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வழிபடலாம்.