
புத்ரதா ஏகாதசி இந்துக்களின் முக்கியமான விரத தினங்களில் ஒன்றாகும். இது ஒரு வருடத்தில் இரண்டு முறை அனுசரிக்கப்படுகிறது. ஒன்று சுக்ல பக்ஷத்தில் வரும் பௌஷ ஏகாதசியும், மற்றொன்று சுக்ல பக்ஷத்தில் வரும் ஷ்ரவ்ண மாத ஏகாதசியும் ஆகும். ஷ்ரவ்ண மாதத்தில் வரும் ஏகாதசியே புத்ரதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு புத்ரதா ஏகாதசி விரதம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்படுகிறது. ஏகாதசி திதியானது ஆகஸ்ட் 4, 2025 காலை 11:41 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 5, 2025 மதியம் 1:12 மணிக்கு முடிகிறது. விரதத்தை முடிக்கும் நேரம் (பாரணை) ஆகஸ்ட் 6, 2025 காலை 5:45 முதல் 8:26 வரை.
புத்ரதா என்ற சொல்லுக்கு ‘குழந்தை பாக்கியம் அளிப்பது’ என்று பொருள். குழந்தை இல்லாத தம்பதியர்கள் குழந்தை பாக்கியம் பெறுவதற்கும், ஏற்கனவே குழந்தைகள் உள்ளவர்கள் தங்களின் குழந்தைகளின் நலனைக் காக்கவும், அவர்கள் மகிழ்ச்சியான ஆரோக்கிய வாழ்வை வாழ்வதற்கும் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இந்த விரதத்தை முறையாக கடைபிடிப்பவர்களுக்கு விஷ்ணு பகவானின் அருள் கிடைத்து புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை. ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்றே விரதத்தை துவங்கலாம். இறைச்சி, வெங்காயம், பூண்டு போன்ற தாமச உணவுகளை தவிர்த்து மிதமான உணவுகளை உண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
பூஜை அறையை சுத்தம் செய்து மாக்கோலம் இட வேண்டும். ஒரு வாழை இலை விரித்து, அதன் மேல் பச்சரிசி பரப்பி, அதற்கு மேல் மணப்பலகை வைத்து விஷ்ணு பகவானின் சிலை அல்லது படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு துளசி இலைகளால் ஆன மாலைகளை சாற்ற வேண்டும். பின்னர் நெய் விளக்கு ஏற்றி பூக்கள், பழங்கள் படைத்து வழிபடலாம். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை போன்ற ஐந்து வகையான கலவை சாதங்கள் செய்தும் படைக்கலாம். நாள் முழுவதும் உண்ணாமல், நீர் அருந்தாமல் முழுமையாக இறைவனை நினைத்து விரதம் மேற்கொள்ளலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் கடுமையான விரதங்களை மேற்கொள்ளுதல் கூடாது. நாள் முழுவதும் உண்ணாமல் இருக்க முடியாதவர்கள் நீர், பழங்கள், பால் போன்றவற்றை அருந்தி பகுதி நேரம் விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீமத் பாகவதம் போன்ற நூல்களை படிக்க வேண்டும்.
‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்கிற இறைவனின் நாமத்தை நாள் முழுவதும் உச்சரிக்க வேண்டும். இரவில் விஷ்ணுவின் புகழை பாடி பஜனைகள் செய்து கண் விழித்திருப்பது நல்லது. மறுநாள் காலை (ஆகஸ்ட் 6) விரதத்தை முடிக்கும் நேரத்தில் மீண்டும் குளித்து பூஜை செய்ய வேண்டும். துளசி இலைகள் துளசி கலந்த நீர் அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம். ஏழை எளியவர்களுக்கு அன்னதானங்கள், வஸ்திர தானங்கள் அளிக்க வேண்டும். அருகில் உள்ள பெருமாள் ஆலயங்களுக்கு சென்று துளசி மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம் குழந்தை பாக்கியம் வேண்டி விரதம் இருப்பவர்கள் ஏகாதசி நாளில் துளசி செடிக்கு நெய் தீபம் ஏற்றி ஏழு முறை வலம் வரலாம். பசுவிற்கு தீவனம் கொடுப்பது மிகவும் விசேஷமானது. மஞ்சள் நிறம் விஷ்ணுவுக்கு உகந்தது என்பதால் மஞ்சள் நிற ஆடைகள், மஞ்சள் நிற இனிப்புகள், மஞ்சள் போன்றவற்றை தானம் செய்யலாம்.
புத்ரதா ஏகாதசி விரதம் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு மட்டுமில்லாமல் ஆன்மீக வளர்ச்சி, மன அமைதி, பாவங்கள் நீக்கி புண்ணியம் சேர உதவும் ஒரு சக்தி வாய்ந்த விரதமாகும். இந்த நாளில் தீய எண்ணங்களை விலக்கி, தூய்மையான மனத்துடன் இறைவனை முழுமனதாக நினைத்து வழிபடுபவர்களுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கை.