பங்குனி உத்திரம் என்றால் முருகப்பெருமானின் நினைவுதான் எல்லோருக்கும் வரும். ஏனென்றால் முருகனுடைய வழிபாட்டு நாட்களில் முக்கியமான நாள் பங்குனி உத்திரம். தெய்வ திருமணங்கள் இந்நாளில் தான் நடந்ததாகக் கூறப்படுகிறது. அதனாலேயே இதனை கல்யாண விரதம் எனவும் சொல்வார்கள். இந்த நன்னாளில் விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்தால் திருமணம் கைகூடும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. ஆனால் பங்குனி உத்திர விரதத்தால் கிடைக்கும் மற்ற நன்மைகள் உங்களுக்கு தெரியுமா?
அரசு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும், அரசு சார்ந்த காரியங்கள் நடக்கும். சிலருக்கு பணியிடத்தில் இழுபறியாக இருக்கும் பதவி உயர்வு கிடைக்கும். இதெல்லாம் பங்குனி உத்திர விரதத்தால் விளையும் நன்மைகள். அரசு வேலைக்கும் பங்குனி உத்திர விரதத்திற்கும் இடையே எப்படி சம்பந்தமிருக்கும் என உங்களுக்கு தோன்றலாம். அதையும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
அரசு வேலை அருளும் முருகன்..!
வேலை தேடுபவர்கள் எப்போதும் நல்ல நிறுவனத்தில் சேர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அவர்கள் முருகனை வேண்டிக் கொண்டால் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்பது ஐதீகம். இவர்கள் பங்குனி மாத விரதம் இருந்தால் நன்மை பெருகும். ஏனென்றால் பங்குனியில் தான் உத்திர நட்சத்திரமும், பௌர்ணமியும் சேரும். தமிழ் மாதங்களில் 12ஆவது மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12ஆவது உத்திரம் நட்சத்திரம் இந்த 12, என்ற எண் முருகனுடைய திருக்கரங்களின் எண்ணிக்கையை குறிக்கும்.
உத்திர நட்சத்திர சிறப்புகள்..!
மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்துவமான சிறப்புகள் உண்டு. அதில் உத்திரம் நட்சத்திரமும் உண்டு. உத்திரம் என்றால் வீட்டை தாங்கி கொள்ளும் மேற்கூரை. பொதுவாக உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வீட்டை இப்படி மேல் தளம் போல தாங்கி கொள்வார்கள். குடும்ப பொறுப்புகளை தன் தலையில் தாங்கும் நபராக உத்திர நட்சத்திரக்காரர்கள் வாழ்வார்கள். இந்த நட்சத்திரம் மகாலட்சுமிக்கு உரியதும் கூட. உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி என்றால் சூரிய பகவான் தான். சூரியன் இயங்குவதை பொறுத்துயான் தமிழ் மாதங்கள் அமையும்.
இதையும் படிங்க: செல்லும் வழியில் கிடக்கும் பணத்தை எடுத்து செலவழிக்கலாமா? இதனால் நம் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
ஒரு நபரின் ஜாதகத்தில் மன உறுதி, தைரியம், தந்தை உறவு நன்றாக அமைய, தொழில், உத்தியோகம் சிறக்க, அரசு சார்ந்த காரியங்கள் நல்லபடியாக நடக்க சூரிய பகவான் தான் காரணமாக இருப்பார். இப்படிப்பட்ட சூரிய பகவானுக்கு உரிய உத்திர நட்சத்திரமும், சூரிய பகவான் தன் 1 ஆண்டு பயணத்தை நிறைவு செய்யும் கடைசி மாதமான பங்குனியும் இணைந்து வரும் நாள் ரொம்ப சிறப்பானது. இந்த நாளில் முருகனை வழிபாடு செய்தால் அரசு சார்ந்த காரியங்கள் எல்லாம் சுபமாக முடியும். தலைமை பொறுப்புக்கு சூரிய பகவான் தான் காரணம் என்பதனால், பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. பங்குனி உத்திர நாளில் முருகனுக்கு விரதமிருந்து நல்ல பலனை அனுபவியுங்கள்.
இதையும் படிங்க: பங்குனி உத்திரம் 2023 எப்போது? விரத முறை.. வழிபாடு பலன்கள் முழுதகவல்கள்.!