
பீஹார் மாநிலம் முஜாஹூர் மாவட்டத்தில் உள்ள சாஹேப்கஞ்ச் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் சில தினங்களுக்கு முன்பு பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அந்த பாம்பை பிடிக்க சென்ற பொழுது அது ஒரு படிகப் பொருளை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. அது பிளாஸ்டிக் போல தோன்றினாலும் நாகமணி என்று அந்த மக்களால் நம்பப்படுகிறது. இதன் காரணமாக அந்த நாகமணியை பார்க்கவும், வழிபடவும் மக்கள் அந்த பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதைத் தொடர்ந்து உண்மையில் நாகமணி என்ற ஒன்று உள்ளதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்து புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் பிற கதைகளில் நாகமணி பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. கருட புராணம், மகாபாரதம் போன்ற இந்து மத நூல்களில் நாகலோகம் பற்றியும், அங்கு நாகராஜாக்களின் தலைகளில் விலைமதிப்பற்ற ரத்தினங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நாகமணிகள் இரவில் பிரகாசமாக ஒளிரும் என்றும், அவற்றை வைத்திருப்பவர்களுக்கு அளவற்ற செல்வம், ஆரோக்கியம், ஆயுள், எதிரிகளை வெல்லும் சக்தி போன்றவை கிடைக்கும் என நம்பப்படுகிறது.
சில கதைகளில் நாகங்கள் தாமாக முன்வந்து குறிப்பிட்ட நபர்களுக்கு இந்த நாகமணிகளை வழங்கும் என்றும், சில சமயங்களில் கோபமடைந்த நாகங்கள் தங்கள் மணிகளை தாமாக உமிழ்ந்து விடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அறிவியல் ரீதியாக பார்த்தால் பாம்புகளின் தலையில் நாகமணி என்று அழைக்கப்படும் ஒரு கல் இருப்பதற்கோ, அது ஜொலிக்கும் வகையிலான கல் என்பதற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை. உயிரியலாளர்கள், ஊர்வன ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் அனைவரும் நாகமணி குறித்த தகவல்களை முழுமையாக மறுக்கின்றனர். பாம்புகளின் உடற்கூறியல் அமைப்பில் தலையில் கல்போன்ற ஒரு பொருளை சுமப்பதாகவோ அல்லது அந்த கல்லை வெளியிடும் அம்சம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. பாம்புகளின் உடலானது செதில்கள், எலும்புகள், தசைகள் மற்றும் உறுப்புகளை கொண்டவை. அவற்றின் தலைப்பகுதியில் ரத்தினங்கள் உருவாகும் வாய்ப்புகள் இல்லை என்று உயிரியலாளர்கள் கூறுகின்றனர்.
சில சமயங்களில் பாம்புகள் தங்கள் வாழ்விடங்களில் சில பளபளப்பான கற்கள் அல்லது கண்ணாடி துண்டுகளை சுமந்து வந்திருக்கலாம். தவறுதலாக அவை கீழே விழும் பொழுது அதை நாகமணியாக கருதி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒளிரும் பண்புகளைக் கொண்ட சில தாதுக்கள் அல்லது பாறைகள் இரவில் வெளிச்சத்தை பிரதிபலிக்கலாம். அது போன்ற இடங்களில் பதுங்கி இருக்கும் பாம்புகளில் அந்த தாதுக்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் பொழுது, அதன் நாகமணி என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம். நாகமணி இருப்பதாக கூறி பல மோசடிகள் நம் நாட்டில் நடைபெற்றிருக்கின்றன. ஒளிரும் தன்மையுள்ள இரசாயன பூசப்பட்ட கற்கள் அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட கற்களை நாகமணி என்று கூறி பலர் மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளனர். ஆனால் அறிவியல் ரீதியாக நாகமணி என்கிற பொருள் உண்மை கிடையாது.
பீஹாரில் நடந்த சம்பவத்தை பொறுத்தவரை அது பல வழிகளில் விளக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் பாம்புகள் குறித்து ஆழமாக வேறொன்றிய பயம் மற்றும் நாகமணி மீதான நம்பிக்கை இத்தகைய சம்பவங்களை உண்மை என்று நம்ப வைத்துள்ளது. பாம்பு அசைந்த போது அருகில் இருந்த பளபளப்பான பொருள் தற்செயலாக கீழே விழுந்து இருக்கலாம், அது பாம்பு தலையில் இருந்து விழுந்தது போல தோன்றி இருக்கலாம் அல்லது மண்ணில் புதைந்திருந்த ஒரு சாதாரண கல் அல்லது கனிமம் பாம்பின் அசைவால் வெளிப்பட்டிருக்கலாம். சில சமயங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கில் இது போன்ற கட்டுக்கதைகளை பலர் பரப்பியிருக்கலாம். இதன் மூலம் மோசடி செய்யும் எண்ணமும் அவர்களுக்கு இருந்திருக்கலாம். ஆனால் அறிவியல் ரீதியாக நாகமணி என்பது ஒரு கற்பனையான விஷயம். பாம்புகளின் தலையில் கல் இருப்பதற்கோ அது ஒளிரும் கல் என்பதற்கோ எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
பீஹாரில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் நிலவும் ஆழ்ந்த நம்பிக்கையின் ஒரு வெளிப்பாடு ஆகும் அல்லது இது தற்செயலான நிகழ்வின் தவறான புரிதலாக இருக்கலாம். இது போன்ற அமானுஷ்ய நிகழ்வுகளை பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையுடன் அணுக வேண்டியது அவசியம். எந்த ஒரு நம்பத்தகாத விஷயத்தையும் ஆராய்ந்து உண்மை நிலையை அறிந்து கொள்வது என்பது தவறான தகவல்களை பரப்புவதை தடுப்பதற்கும், மோசடிகள் நிகழாமல் தடுப்பதற்கும் உதவும்.