
Importance of Karthigai Deepam 2024 : ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் பவுர்ணமியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் திருக்கார்த்திகை திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் தங்களது வீடுகளிலும், கோயில்களிலும் தீபங்கள் ஏற்றி கொண்டாடும் ஒரு திருநாள் தான் திருக்கார்த்திகை திருநாள்.
கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடப்படுகிறது?
சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகியோர் மும்மூர்த்திகள். இதில், பிரம்மன் படைக்கும் தொழிலையும், விஷ்ணு காத்தல் தொழிலையும், சிவன் அழித்தல் தொழிலையும் செய்வார்கள். இதில், பிரம்மன் மற்றும் விஷ்ணுவும் தாங்கள் தான் பெரியவர்கள் என்று கர்வத்தில் இருக்க, அவர்களது கர்வத்தை அடக்க சிவபெருமான் எண்ணினார்.
அப்போது சிவபெருமானின் அடி முடியை காணும்படி அசரீரி ஒலித்தது. ஆனால், சிவபெருமானோ ஜோதி பிளம்பாக தோன்றினார். இதனால் விஷ்ணு மற்றும் பிரம்மனால் அடி முடியை காண முடியவில்லை. இதன் காரணமாக தங்களது தவறை உணர்ந்த இருவரும் சிவபெருமானை முழு முதல் கடவுளாக ஏற்றுக் கொண்டனர். அதோடு, தாங்கள் கண்ட இந்த ஜோதியை அனைவரும் காணும்படி அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அப்படி சிவன் காட்சி தந்த நாள் கார்த்திகை நட்சத்திரம். இந்த நாளில் தான் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை கூம்பு – சொக்கப்பனை ஏற்றுதல்:
கார்த்திகை தீப திருநாளின் முக்கிய நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். அதாவது, பனை மரத்தை வெட்டி எடுத்து வந்து கோயிலுக்கு முன்பாக வைப்பார்கள். அந்த மரத்தை சுற்றிலும் 15 அடி உயரத்திற்கு பனை ஓலைகளால் கூம்பு வடிவம் போன்று செய்வார்கள்.
கார்த்திகை திருநாளன்று மாலையில் கோயில் உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்த பிறகு அந்த சுடரால் கோயிலுக்கு வெளியில் வைக்கப்பட்டிருக்கும் பனை மரத்தின் கூம்பு வடிவத்தை கொளுத்துவார்கள். அது வேகமாக எரியும். அப்படி கொளுந்துவிட்டு எரியும் ஜோதியை சிவனின் ஜோதி பிழம்பாக கருதி வழிபாடு செய்வார்கள்.
பழைய விளக்குகள் ஏற்றலாமா?
கார்த்திகை தீப திருநாளன்று வீடு முழுவதும் ஏராளமான விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வார்கள். அப்படி அவர்கள் வழிபாடு செய்ய பழைய விளக்குகள் ஏற்றலாமா என்று கேட்டால் தாராளமாக ஏற்றலாம். ஆனால், முதல் நாளிலேயே பழைய விளக்குகளை நன்கு கழுவி காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் ஒரு சில புதிய விளக்குகள் கூட வாங்கிக் கொள்ளலாம்.
புதிய விளக்குகளை முதலில் நீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை எடுத்து துடைத்து பின்பு சந்தனம், குங்குமம் வைத்து எண்ணெய் மற்றும் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
நெய் தீபம் ஏற்றலாமா?
எல்லா அகல் விளக்குகளுக்கும் நெய் தீபம் கூட ஏற்றலாம். அப்படி இல்லை என்றால் பூஜையறையில் வைக்கப்படும் காமாட்சி விளக்கு, குத்து விளக்குகளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். நல்லெண்ணெய் கூட ஏற்றி வழிபடலாம்.
தீபத்தை குளிர்விப்பது எப்படி?
கார்த்திகை தீபத் திருநாளான இன்று தீபம் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். தீபம் ஏற்றியது முதல் தீபம் குளிர்விக்கப்படும் வரையில் தீபம் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். பூ கொண்டு தான் தீபத்தை குளிர் வைக்க வேண்டும்.
தீபம் எப்போது ஏற்ற வேண்டும்:
பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையில் தீபம் ஏற்ற நல்ல நேரம் ஆகும். மாலை நேரத்தில் 6 மணி முதல் 7 மணி வரையில் தீபம் ஏற்ற நல்ல நேரமாகும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலகட்டங்களில் சிவனுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய கல்வித் தடை, திருமணத் தடை நீங்கும்.
எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?
கார்த்திகை மாதத்திற்கு விளக்கு ஏற்றும் மாதம் என்ற பெயரும் உண்டு. இந்த மாதம் முழுவதும் கூட விளக்கேற்றலாம். அப்படி இல்லை என்றால் 3 நாட்கள் விளக்கேற்றலாம்.
வீட்டு முற்றம் – 4 விளக்கு ஏற்ற வேண்டும்.
சமையலறை – 1 விளக்கு
நடை – 2 விளக்கு
வீட்டின் பின்புறம் - 4 விளக்கு,
திண்ணை - 4 விளக்கு,
மாட குழி - 2 விளக்கு,
நிலைப்படி - 2 விளக்கு,
சாமி படத்துக்கு கீழ் - 2 விளக்கு,
வாசல் படி - யம தீபம் ஒன்று,
கோலம் போட்ட இடத்தில் 5 என்று மொத்தமாக 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். 27 விளக்குகள் என்பது 27 நட்சத்திரங்களை குறிக்கிறது. 27 இல்லை என்றால் நவக்கிரகங்களை குறிக்க கூடிய 9 விளக்குகள் கட்டாயம் ஏற்ற வேண்டும்.
எத்தனை நாட்கள் தீபம் ஏற்ற வேண்டும்?
பரணி தீபம், அடுத்த நாள் கார்த்திகை தீப திருநாள் மற்றும் அடுத்த நாள் என்று மொத்தமாக 3 நாட்கள் விளக்கேற்ற வேண்டும்.
மகா தீபம் ஏற்ற சரியான நேரம்:
மாலை 6 மணிக்கு தான் மகா தீபம் ஏற்ற சரியான நேரம் என்பதால், அந்த நேரத்தில் தீபம் ஏற்றுவது நன்மை அளிக்கும்.
வாழை இலை அல்லது பசு சாணம்:
வாழை இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதன் மீது தான் விளக்கு வைக்க வேண்டும். அப்படியில்லை என்றால் பசு சாணத்தை அடியில் வைத்து அதன் மீது விளக்கு வைக்க வேண்டும்.
எந்த திசையில் விளக்கு ஏற்றினால் என்ன பலன்:
கிழக்கு நோக்கியவாறு தீபம் ஏற்றினால் தீராத கஷ்டங்கள் விலகும்.
மேற்கு பார்த்து விளக்கு ஏற்றினால் கடன் நீங்கும்.
வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்றினால் திருமணத்தடை அகலும்.
தெற்கு பார்த்தவாறு மட்டும் தீபம் ஏற்ற கூடாது.
எத்தனை முகம் தீபம் ஏற்ற வேண்டும்?
1 முகம் தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்,
2 முகம் தீபம் ஏற்றினால் குடும்பத்தில் ஏராளமான நன்மை உண்டாகும்.
3 முகம் தீபம் ஏற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்க பெறும்.
4 முகம் தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
5 முகம் தீபம் ஏற்றினால் சகல நன்மையும் உண்டாகும்.