
Important Things To Do Daily Life : பொதுவாக வீடு எப்போதும் லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒன்றாக இருக்க வேண்டும். லட்சுமி வாசம் செய்தால் மட்டுமே வீட்டில் வறுமை என்ற இருள் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும். நெல்லிக்கனி, துளசிச்செடி, தாமரை, சந்தனக்கட்டை, சங்கு, தாம்பூலம் உள்ளிட்டவற்றில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்த பொருட்கள் இருக்கும் வீடுகளில் வறுமை இருக்கவே இருக்காது என்பது ஐதீகம்.
இதுதவிர நாள்தோறும் நாம் அன்றாட வாழ்க்கை முறையில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களாலும் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும். அது மிகவும் எளிமையான ஒன்றாக இருந்தாலும் கூட நாள்தோறும் அதனை யாரும் கடைபிடிப்பதில்லை. அப்படி தினந்தோறும் கடைபிடிக்க வேண்டிய 5 விஷயங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க…
பிரம்ம முகூர்த்த நேரம் – விளக்கேற்றுதல்:
பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை. இந்த காலகட்டத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு 6 மணிக்குள்ளாக வீட்டில் விளக்கேற்றிட வேண்டும். அப்படி இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து விளக்கேற்ற முடியாதவர்கள் சூர்ய உதயத்திற்கு முன்னதாக விளக்கேற்றிட வேண்டும். இதைத் தான் ஒவ்வொரு பெண்களும் தங்களது வீடுகளில் கடைபிடிக்க வேண்டும்.
அதே போன்று மாலையில் சூரியன் அஸ்தமனமான பிறகு விளக்கேற்ற வேண்டும். அதாவது நம் வாழ்க்கையானது சூரியன் மற்றும் சந்திரனை மையப்படுத்தி அமைக்கப்பட்டது. எப்படி என்றால் காலையில் சூரியன் உதயத்தையும், மாலையில் சந்திரன் உதயத்தையும் குறிக்கிறது. காலை மற்றும் மாலையில் இரு நேரங்களில் விளக்கேற்றுதல் வீட்டில் தெய்வ சக்தியை அதிகரித்து செல்வ செழிப்பை உண்டாக்கும்.
வீட்டு வாசலில் கோலமிடுதல்:
சிட்டி வாழ்க்கையில் இது சாத்தியமில்லை என்றாலும் கூட கிராமப்புறங்களில் இது சாத்தியமே. பசு சாணத்தால் வாசல் தெளித்து, கூட்டி பெருக்கி பச்சரிசி மாவு கொண்டு கோலமிடுதல் நல்லது. அப்படி பசு சாணம் கிடைக்காதவர்கள் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு மற்றும் மஞ்சள் கலந்து வாசலில் தெளிக்கலாம். இது சிட்டி வாழ்க்கையில் சாத்தியமே. வாசலில் கோலம் போட முடியாதவர்கள் பூஜையறையி கோலம் போட்டுக் கொள்ளலாம். காலை மற்றும் மாலையில் கோலமிடலாம். ஆனால், அமாவாசை நாட்களில் மட்டும் விரதம் இருப்பவர்கள் வாசல் தெளித்து கோலம் போட கூடாது.
சாம்பிராணி போட வேண்டும்:
எப்போதும் வீடு முழுவதும் வாசனை நிறைந்ததாக இருக்க வேண்டும். எப்படி கோயில்களில் பூ, விபூதி, சந்தனம், குங்குமம், சாம்பிராணி, பன்னீர் வாசத்தால் நிரம்பியிருக்கிறதோ அதே போன்று வீடும் அப்படியே இருக்க வேண்டும். வீடும் கோயில் தான். வீட்டிலும் சாம்பிராணி போட வேண்டும். வீடும் மணக்க வேண்டும். காலை, மாலை இரு நேரங்களில் வீட்டில் ஊதுவத்தி, சாம்பிராணி, தூபம் ஏற்ற வேண்டும்.
பூஜை செய்து பாராயணம் செய்ய வேண்டும்:
வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி ஸ்லோகங்கள், மந்திரங்கள் சொல்லி இறை வழிபாடு மேற்கொள்ள வேண்டும். விநாயகர், முருகன், பெருமாள், அம்மன் பாடல்கள், ஸ்லோகங்கள், மந்திரங்கள், பாராயணம் செய்ய வேண்டும்.
நெய்வேத்தியங்கள்:
ஒவ்வொரு பூஜைக்கும் உங்களால் முடிந்த நெய்வேத்தியங்கள் படைக்க வேண்டும். கற்கண்டு, வாழைப்பழம், பேரீச்சம் பழம், பொரி, பொட்டுக் கடலை, நாட்டுச் சர்க்கரை, பால், ஆப்பிள், மாதுளை என்று நெய்வேத்தியங்கள் படைத்து இறை வழிபாடு செய்ய வேண்டும். பூஜைக்கு பிறகு நெய்வேத்தியங்களை அக்கம் பக்கத்தாருக்கு படைத்து நீங்களும் சாப்பிடலாம். இப்படி ஒரு மண்டலம் என்று சொல்லக் கூடிய 48 நாட்கள் செய்து வந்தால் வீட்டில் நடக்கும் மாற்றங்களை நீங்களே கண் கூடாக பார்க்கலாம்.