
மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், தினம்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். பிரசித்திபெற்ற சபரிமலை கோயிலுக்கு சென்றாலும், வழியில் இருக்கும் மற்ற ஐயப்பன் கோயில்களுக்கும் செல்ல பக்தர்கள் தவறுவதில்லை.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தென்காசி, செங்கோட்டை, ஆரியங்காவு, புனலூர், பத்தனம்திட்டா வழியாக சபரிமலைக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் தென்காசிக்கு அருகில் கேரள மாநிலத்தில் உள்ள 3 புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
அச்சன்கோவில் தர்ம சாஸ்தா (Achankovil Sastha Temple)
தென்காசியில் இருந்து சுமார் 32 கிமீ தொலைவில் கேரள மாநிலத்தில் அச்சன்கோவில் என்னும் இடத்தில் இந்த ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கருவறையில் வனராஜனாக அமர்ந்த நிலையில் இருக்கும் சுவாமி ஐயப்பன், கையில் அமுதமும், காந்தமலை வாளும் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமணமாகாதவர்கள் அச்சன்கோவில் தர்மசாஸ்தாவை வழிபட்டால் உடனே திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
எனவே பக்தர்கள் இந்த கோயில் ஐய்யப்பனை கல்யாண சாஸ்தா என்று அழைக்கின்றனர். அடர்ந்த வனப்பகுதியின் உள்ளே அமர்ந்திருக்கும் அச்சன்கோவில் ஐயப்பனை காண வனங்கள் வழியாக செல்வது ஒரு பரவசமான மனநிலையை தரும்.
நடை திறந்திருக்கும் நேரம்: தினமும் அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
எப்படி செல்வது: தென்காசியில் இருந்து செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை வழியாக மலைப்பாதையில் பயணித்து இந்த கோயிலை அடையலாம். செங்கோட்டையில் தினமும் காலை, மாலை வேளையில் கேரள அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பக்தி பாடல்களை பாடும்போது ஏன் கைத்தட்டுறோம் தெரியுமா? முக்கியமான பின்னணி!!
குளத்துப்புழா ஐயப்பன் கோயில் (Kulathupuzha Sastha Temple)
தென்காசியில் இருந்து சுமார் 47 கிமீ தொலைவில் குளத்துப்புழா எண்ற இடத்தில் இந்த ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கருவறையில் சுவாமி ஐயப்பன் குழந்தையாக காட்சி தருவதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கின்றனர்.
குழந்தை வரம் வேண்டி இந்த ஐயப்பனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதிகம். கோயிலின் முன்பகுதியில் கல்லடா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் உற்சாகமாக குளித்து விட்டு குழந்தை ஐயப்பனை தரிசிக்கலாம்.
நடை திறந்திருக்கும் நேரம்: தினமும் அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
எப்படி செல்வது: தென்காசியில் இருந்து செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை வழியாக குளத்துப்புழா செல்ல வேண்டும். தென்காசியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு 1 மணி நேரத்துக்கு ஒரு முறை இயக்கப்படும் கேரள அரசு பேருந்துகள் குளத்துப்புழா வழியாகச் செல்லும்.
ஆரியங்காவு ஐயப்பன் கோயில் (Aryankavu Sastha Temple)
தென்காசியில் இருந்து 22 கிமீ தொலைவில் சபரிமலை செல்லும் பிரதான சாலையில் ஆரியங்காவு என்னும் இடத்தில் இந்த ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. பொதுவாக பிரம்மச்சாரியாக உள்ள சுவாமி ஐயப்பன் இந்த கோயிலில் மட்டும் புஷ்கலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்தவராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளதால் இந்த கோயிலின் பூஜைகள் தமிழக முறைப்படி நடைபெறுகிறது. சபரிமலை செல்லும் சாலையில் அமைந்துள்ளதால் தென்காசி வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களும், அங்கு இருந்து வரும் பக்தர்களும் ஆரியங்காவு கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
நடை திறந்திருக்கும் நேரம்: தினமும் அதிகாலை 4 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
எப்படி செல்வது: தென்காசியில் இருந்து செங்கோட்டை, புளியறை வழியாக ஆரியங்காவு சென்றடையலாம். தென்காசியில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பேருந்துகள் ஆரியங்காவு வழியாக கேரளாவின் மற்ற இடங்களுக்கு செல்கின்றன. கோயிலுக்கு முன்பாகவே பேருந்து நிறுத்தம் உள்ளது. தென்காசியில் இருந்து அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் சென்னை கொல்லம் விரைவு ரயில், மதியம் 2.32 மணியளவில் தென்காசியில் இருந்து புறப்படும் மதுரை குருவாயூர் விரைவு ரயில் ஆரியங்காவு வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.