
பெருமாளுக்குரிய முக்கிய விரதங்களுள் ஒன்று அனந்த விரதம். இது அனந்த சதுர்த்தசி விரதம் அல்லது ஆனந்த பத்மநாப விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசியில் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில்தான் அனந்த பத்மநாபராக மகாவிஷ்ணு காட்சி அளித்ததாக கூறப்படுகிறது.
ஆனந்தா என்றால் முடிவில்லாத என்று பொருள். முடிவில்லாத அல்லது எல்லையற்ற நன்மைகளையும், ஆனந்தத்தையும் தரக் கூடிய விரதமாகும். இந்த விரதத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் 14 என்ற எண்ணிக்கை கொண்டதாகவே இருக்கும்.
அனந்த பத்மநாப விரதத்தை தொடர்ந்து 14 ஆண்டுகள் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் அனுஷ்டித்து வந்தால், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள், துன்பங்கள், தடைகள் மற்றும் பல்வேறு சிக்கல்கள் படிப்படியாக நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு பெருகும் என்பது ஐதீக நம்பிக்கையாகும். குறிப்பாக 14 முடிச்சுகளைக் கொண்ட ‘அனந்த சூத்திரம்’ கட்டிக்கொள்வது இந்த வழிபாட்டின் முக்கிய அடையாளமாகும்.
பெருமாள் சயன கோலத்தில் பார்க்கடலில் சயனித்தபோது, அவரது நாபிக் கமலத்தில் இருந்து தாமரை தோன்றி அதிலிருந்து பிரம்ம தேவர் அவதரித்தார். இந்த நிகழ்வு நடைபெற்ற நாளே அனந்த சதுர்த்தசி எனப்படுகிறது.
அனந்த விரதம் எப்போது?
2026 ஆம் ஆண்டு அனந்த சதுர்த்தசி வருகிற செப்டம்பர் 25, வெள்ளிக்கிழமை வருகிறது. சதுர்த்தசி திதி செப்டம்பர் 24 இரவு 11:18 மணிக்குத் தொடங்கி, செப்டம்பர் 25 இரவு 11:07 மணி வரை நீடிக்கிறது.
இந்த விரதத்தின் புகழ்பெற்ற கதை சுசீலை மற்றும் கௌண்டின்ய முனிவரை மையமாகக் கொண்டது. சுமந்தர் மற்றும் தீக்ஷா தம்படிக்கு மகளாகப் பிறந்தவள் சுசீலை. இவர் கௌண்டின்ய முனிவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு கணவருடன் ஆசிரமத்திற்குச் செல்லும்போது அவர்கள் ஒரு ஆற்றங்கரையில் தங்கினர்.
அங்கு சில பெண்கள் ஒரு விசேஷமான வழிபாட்டைச் செய்துகொண்டிருந்ததை சுசீலை பார்த்தார். அவர்களிடம் அதுகுறித்து கேட்டபோது, இது மகாவிஷ்ணுவின் அனந்த வடிவத்திற்காக மேற்கொள்ளப்படும் அனந்த விரதம் என்று அவர்கள் விளக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையை அறிந்த சுசீலையும் அனந்த விரதத்தை மேற்கொண்டார். வழிபாட்டின் முடிவில் 14 முடிச்சுகள் கொண்ட அனந்த சூத்திரத்தை (கயிறு) தனது கையில் கட்டிக்கொண்டார்.
விரதத்திற்குப் பிறகு சுசீலை கௌண்டின்ய தம்பதியரின் வாழ்க்கையில் செல்வமும் செழிப்பும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருநாள் சுசீலையின் கையில் கட்டப்பட்டிருந்த நூலைப் பார்த்த கௌண்டின்யர், அது என்ன என்று கேட்டார். அனந்த விரதத்தைப் பற்றியும், அதன் அடையாளமாக நூலைக் கட்டியிருப்பதையும் சுசீலை விளக்கினார்.
ஆனால், அதனை ஏற்காத கௌண்டின்யர் கோபத்தில் அனந்த சூத்திரத்தை அறுத்து நெருப்பில் வீசியதாக புராணக் கதை கூறுகிறது. அதன் பின்னர் அவர்களின் செல்வமும் வளமும் குறைந்து, பல துன்பங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அனந்தனைத் தேடிச் சென்ற கௌண்டின்யர்
தான் செய்த தவறை உணர்ந்த கௌண்டின்யர், அனந்தனை தேடி காடுகளுக்குச் சென்றார். நீண்ட தேடலுக்குப் பின்னர் அனந்த பகவான் வயதான பிராமணர் வடிவில் அவருக்கு காட்சி அளித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கௌண்டின்யர் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டபோது, அனந்த விரதத்தை பக்தியுடன் அனுஷ்டிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அனந்த பத்மநாப விரதத்தில் 14 என்ற எண்ணுக்கு தனிச்சிறப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும் சதுர்த்தசி திதி, சந்திர மாதத்தின் 14-வது திதியாகும். இதன் காரணமாகவே இந்த விரதத்தில் 14 என்ற எண் முக்கியத்துவம் பெறுகிறது.
அனந்த விரதத்தின்போது கட்டப்படும் புனிதக் கயிற்றிலும் 14 முடிச்சுகள் இடப்படுவது வழக்கம். விரத வழிபாட்டு மரபில் சிவப்பு அல்லது குங்கும நிற நூலில் 14 முடிச்சுகள் இடப்பட்டு, அதனை பூஜையில் வைத்து வழிபட்ட பிறகு கையில் கட்டிக்கொள்கிறார்கள்.
அதேபோல், இந்த விரதத்தை தொடர்ந்து 14 ஆண்டுகள் அனுஷ்டிக்கும் மரபும் காணப்படுகிறது. இவ்வாறு சதுர்த்தசி திதி, 14 முடிச்சுகள், 14 ஆண்டுகள் என அனந்த பத்மநாப விரதத்தின் பல்வேறு வழிபாட்டு மரபுகளிலும் 14 என்ற எண் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மகாபாரதத்தில் பாண்டவர்கள் அனைத்தையும் இழந்து 14 ஆண்டுகள் துன்பத்தை அனுபவித்த காலத்தில், கிருஷ்ணர் அருளிய விரதம் இந்த அனந்த விரதமாகும். இந்த விரதத்தை கடைபிடித்தே பாண்டவர்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், செல்வத்தையும் அடைந்ததாக கூறப்படுகிறது.
அனந்த விரதத்தால் என்ன பலன் கிடைக்கும்?
மத நம்பிக்கையின்படி, அனந்த விரதத்தை பக்தியுடன் கடைப்பிடிப்பதால் குடும்ப நலம், செல்வச் செழிப்பு, மனநிம்மதி, துன்பங்களிலிருந்து விடுபடுதல், விருப்பங்கள் நிறைவேறுதல் மற்றும் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
குறிப்பு: அனந்த விரதத்தின் பூஜை முறை, அனந்த சூத்திரம் கட்டும் கை, நைவேத்தியம், விரத உணவு உள்ளிட்ட சம்பிரதாயங்கள் குடும்பம் மற்றும் பிராந்தியத்தைப் பொறுத்து மாறுபடலாம். உங்கள் குடும்ப வழக்கம் அல்லது உள்ளூர் கோவில் மரபை பின்பற்றுவது பொருத்தமானது.