அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற மரபு காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. தங்கம் மட்டும் இல்லாமல் இந்த நாளில் பச்சரிசி, வெல்லம் போன்ற மகாலட்சுமி வாசம் செய்யும் பிறப்பொருள்களையும் வாங்கலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதும் மட்டுமல்ல; பிறருக்கு தானம் செய்வதும் அட்சய திருதியையின் சிறப்பு என ஆச்சார்ய பெருமக்கள் கூறுகின்றனர். பற்றிய திருதியை நாளில் மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமியையும் வழிபட்டால் பல நன்மைகளை பெறலாம்.
அட்சய திருதியை சிறப்பு
பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் வயிறார உணவு அளிக்க முடியாமல் திரௌபதி தவித்தாள். அப்போது தர்மன், சூரிய பகவானை மனமுருகி வேண்டி அட்சய பாத்திரத்தை பெற்றது அட்சய திருதியை நாளில்தான் என்கிறது புராணம். விநாயகருக்கு வேதவியாசர் மகாபாரதத்தை உபதேசித்தது இந்த அற்றைய திருதியை தினத்தில் தான். ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் மக்கள் விசேஷமாக பூஜை வழிபாடுகள் செய்து இறைவனை வேண்டிக் கொள்வார்கள். அட்சய திருதியை நாளில் விரதம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் அன்றைய தினம் மகாலட்சுமியை வழிபடுபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 22ஆம் தேதியா? 23ஆம் தேதியா? என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
அட்சய திருதியை 2023 எப்போது?
2023ஆம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 22ஆம் தேதி வருவதாக சில நாட்காட்டியில் இருக்கிறது. சில நாட்காட்டியிலோ ஏப்ரல் 23ஆம் தேதி ஞாயிறன்று அட்சய திருதியை வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருதியை திதி ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 23ஆம் தேதி வரை இருக்கிறது. இப்படி திருதியை திதியை ஏப்ரல் 23ஆம் தேதி வரை இருப்பதால் எந்த நாளை அட்சய திருதியை நாளாக எடுக்க வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது. எது அட்சய திருதியை நாள்? எந்த நேரம் தங்கம் வாங்க வேண்டும்? என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
அட்சய திருதியை தேதி, நேரம்:
1). அட்சய திருதியை திதி ஏப்ரல் 22ஆம் தேதி காலை 07.49 மணிக்கு தொடங்கும். ஏப்ரல் 23ஆம் தேதி காலை 07.47 மணிக்கு தான் திருதியை திதி நிறைவடைகிறது.
2). சூரியன் உதிக்கும் நேரத்தில் இருக்கும் திதி தான் அந்நாளின் திதியாக கருதப்படுகிறது. இப்படி பார்த்தால் ஏப்ரல் 23ஆம் தேதியை தான் அட்சய திருதியை நாளாக கொள்ள வேண்டும். ஏப்ரல் 23ஆம் தேதியை பொறுத்தவரை காலை 07.47 மணி வரைக்கும் மட்டுமே திருதியை திதி இருக்கிறது. முந்தைய நாளான ஏப்ரல் 22ஆம் தேதி காலை 07.49 மணியளவில் திருதியை திதி தொடங்கி விடுவதால், அந்த நாளே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. அதாவது ஏப்ரல் 22ஆம் தேதியையே அட்சய திருதியை நாளாக கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும் என ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: அட்சய திருதியை நாளில் இந்த 1 காரியம் மறக்காம செய்யுங்க! அள்ள அள்ள குறையாமல்... வீட்டில் செல்வம் பெருகுமே!!!
தங்கம் வாங்க நல்ல நேரம்...
ஏப்ரல் 22ஆம் தேதி காலை 07.49 மணி தொடங்கி பகல் 12.20 மணி வரைக்கும் தங்கம் வாங்கலாம். இந்த நேரத்தில் அட்சய திருதியை பூஜை செய்யவும் ஏற்ற நேரமாக சொல்லப்பட்டுள்ளது. தங்கம் வாங்க முடியாதவர்கள், உப்பு, மஞ்சள், மல்லிகைப்பூ, அரிசி மற்றும் வெள்ளை வண்ண பொருட்கள், மங்கலப் பொருட்கள் ஆகியவை வாங்கலாம். வாங்கிய பொருள்களை சுவாமி படத்திற்கு முன்னே வைத்து, பூஜை செய்து வழிபட்டால் நல்லது. நீங்கள் வாங்கியது தங்கமோ அல்லது மங்களப் பொருட்களோ எதுவாகினும் சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து வழிபாடு செய்த பிறகு அன்றைய நாள் முழுவதும் பூஜை அறையிலேயே அவற்றை வைத்து விட வேண்டும். மறுநாள் அவற்றை எடுத்து பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: அட்சய திருதியை நாளில் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்! மீறினால் லட்சுமியின் கோவம்! வீட்டில் வறுமை உண்டாகும்!!