
இந்து மதத்தில் பல விரதங்கள் மக்களால் மேற்கொள்ளப்படுகிறது. அந்த விரதங்களில் மிக முக்கியமான ஒன்றுதான் அஜா ஏகாதசி. இது ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்) கிருஷ்ணபட்சத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த ஏகாதசி ‘அன்னடா ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு ‘பிறவியற்றவர்’ அல்லது ‘எங்கும் இருப்பவர்’ என்று பொருள்படும். இது பரம்பொருளான விஷ்ணு பகவானை குறிக்கிறது. இந்த விரதம் விஷ்ணுவின் மகிமையைப் போற்றி, பக்தர்கள் தங்கள் பாவங்களை போக்கி, மோட்சத்தை அடைய உதவும் ஒரு ஆன்மீக நடைமுறையாகும்.
அஜா ஏகாதசி அன்று விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு பாவங்களிலிருந்து விடுபட்டு, மன அமைதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பத்ம புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணம் போன்றவை அஜா ஏகாதசியை அனுஷ்டிப்பது ஒருவர் தனது முன் ஜென்ம பாவங்களையும், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களையும் நீக்கி மோட்ச பாதையை அடைய உதவும் என்று கூறுகின்றன. இந்த விரதம் பகவான் விஷ்ணுவின் அருளை பெறுவதற்கு சிறந்த வழியாகும். இந்த நாளில் விஷ்ணு பகவான் பக்தர்கள் பிரார்த்தனைகளை ஏற்று அவர்களுக்கு செல்வம், ஆரோக்கியம், மன அமைதியை வழங்குவார் என்று நம்பப்படுகிறது. இந்த விரதம் கர்ம வினைகளை அகற்றி நல்லொழுக்கங்களை அளித்து உயர்ந்த வாழ்க்கை வாழ உதவுவதாக கருதப்படுகிறது. இது ஒருவரின் மனதை தூய்மையாக்கி தெய்வீக சக்தி உடன் இணைக்கிறது.
நாடை இழந்து மயானத்தை காவல் புரிந்து வந்த ஹரிச்சந்திர மகாராஜா ஒரு நாள் கௌதம முனிவரை சந்திக்க நேர்ந்தது. கௌதம முனிவரிடம் தனக்கு நேர்ந்ததை சொல்லி ஹரிச்சந்திர மகாராஜா மனம் வருந்தினார். அவருடைய பரிதாபமான நிலையைக் கண்ட கௌதம முனிவர் ஆவணி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஜா ஏகாதசி அனைத்து பாவங்களையும் விலக்கக் கூடியது. எனவே அன்று மகாவிஷ்ணுவை வழிபாடு செய்து, இரவு முழுவதும் கண்விழித்து இறைவன் திருநாமத்தை சொல்லி வழிபாடு செய், இந்த விரதம் இருப்பதால் உன் முற்பிறவியில் செய்த பாவங்கள் விலகி கஷ்ட காலங்களில் இருந்து விடுபடுவாய் என்று முனிவர் வரம் அருளிச் சென்றார். கௌதம முனிவரின் பரிந்துரையை ஏற்ற அரிச்சந்திர மகாராஜா ஏகாதசியில் விரதமிருந்து இறைவனை மனம் உருகி வழிபட்டு துன்பங்களிலிருந்து விடுபட்டார். உயிரிழந்த மகனையும், தன்னுடைய நாட்டையும் மீட்டார்.
விண்ணில் இருந்து தேவர்கள் அரிச்சந்திர மகாராஜாவை வாழ்த்தினர். மலர் தூவி ஆசீர்வதித்தனர். அஜா ஏகாதசியின் மகிமையால் அவர் மீண்டும் தன் ராஜ்ஜியத்தை பெற்ற இந்த சிறப்பு வாய்ந்த அஜா ஏகாதசி அன்று நாமும் விரதம் இருக்க வேண்டும். இந்த தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகளை அணிந்து விரதத்தை தொடங்க வேண்டும். விஷ்ணுவின் புகைப்படம் அல்லது சிலையை ஒரு மணப்பலகையில் வைத்து துளசி இலைகள் மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பழங்கள் மற்றும் நெய்வேத்யங்கள் படைக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது விஷ்ணு மந்திரங்களை ஜெபிக்கலாம். முழு விரதம் இருப்பவர்கள் உணவு கொள்ளாமல் இருக்கலாம். பகுதிநேர விரதம் இருப்பவர்கள் பழங்கள், பால் மற்றும் புரத உணவுகளை உட்கொண்டு விரதமிருக்கலாம். அரிசி, பருப்பு மற்றும் உப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஏழைகளுக்கு உணவு, உடை அல்லது ஏதாவது பொருட்களை தானம் வழங்கலாம். இது உங்களின் புண்ணியங்களை பெருக்கும். இரவு முழுவதும் கண்விழித்து விஷ்ணு பகவானின் புகழைப் பாடி, தியானம் செய்ய வேண்டும். அடுத்த நாள் துவாதசி அன்று காலையில் விரதத்தை முடித்து, ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்கி பூஜை செய்து, விரதத்தை நிறைவு செய்யலாம். அஜா ஏகாதசி விரதமானது ஆன்மீகப் பயணத்தில் முக்கிய பகுதியாகும். இது பக்தர்களுக்கு பாவ விமோசனம், மன அமைதி மற்றும் தெய்வீக அருளை வழங்குகிறது. இந்த விரதத்தை முழு பக்தியுடனும், மனத்தூய்மையுடனும் அனுஷ்டிப்பது ஒருவருக்கு ஆன்மீக உயர்வையும் புண்ணியத்தையும் பெற்றுத் தரும். இந்த புனிதமான நாளில் விஷ்ணுவின் புகழ் பாடி விரதத்தை மேற்கொண்டு இறைவனின் அருளை பரிபூரணமாக பெறுங்கள்.