பணக்கார கடவுள்
உலகின் பணக்கார இந்து கோவில்களில் ஒன்றாக திருமலையில் உள்ள திருப்பதி கோவிலும் உள்ளது. இக்கோவிலில் சாதாரண நாட்களில் ஆயிரக்கண்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்கின்றனர். அதேவேளையில் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்கின்றனர். திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் நிகழும் என்பது பெரும்பாலானோர் நம்பிக்கை. இதனால் இக்கோவிலுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தரிசன முறை
திருப்பதியில் இலவச தரிசனம், நடைபாதை தரிசனம் என்று சொல்லப்படும் திவ்ய தரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம் என மூன்று வழிகளில் தரிசனம் மேற்கொள்ளலாம். விரைவு தரிசனம் செய்ய விரும்புபவர்கள் 3 மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அன்னதானம்
ஏழுமலையானை தரிசிக்க வருபவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பசியுடன் செல்லக் கூடாது என்ற அடிப்படையில் காலை, பகல், இரவு என மூன்று நேரங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி கோவிலுக்கு ஆந்திரா மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
3 வேலையும் அன்னதானம்
அப்படி வெளிமாநில பக்தர்கள் மொழி தெரியாமல் கடைகளில் உணவு சாப்பிடும் பொழுது உணவின் விலை சரியாக தெரியாததால் சில நேரங்களில் அதிக விலை கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பொறியல் அடங்கிய அன்னதானம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே உள்ளது.
அன்னதான செலவு
அப்படி 3 வேளையும் பரிமாரப்படும் உணவுக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என தெரியுமா? காலை உணவுக்கு ரூ.8 லட்சம், மதிய உணவுக்கு ரூ.15 லட்சம், இரவு உணவுக்கு ரு.15 லட்சம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் முழுவதையும் கொடுக்கும் பட்சத்தில் நன்கொடையாளரின் பெயர் அன்றைய தினம் பெயர் பலகையில் தெரிவிக்கப்பட்டு உணவு பரிமாறப்படும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.