
மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் அப்பா குட்டி. இப்படத்தில் பேபி லிதன்யா, ப்ரீத்தி அஸ்ராணி, ஜென்சன் திவாகர், அருவி மதன், முருகானந்தம், பகவதி பெருமாள், விஜயன், வேட்டை முத்துக்குமார், ஹரிப்ரியா இசை, மூணார் ரமேஷ், ஹரிதா, ஸ்ரீஜா ரவி, லிஸ்ஸி ஆண்டனி, பிரவீனா, குமார் நடராஜன், சித்ரா லட்சுமணன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதன் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனது மகள் தியா (லிதான்யா) மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் சூர்யா (விஜய் ஆண்டனி), ரவுடிகளின் அச்சுறுத்தல் காரணமாக கைக்குழந்தையுடன் ஊட்டிக்குச் செல்கிறார். அங்கு மகளைப் பள்ளியில் சேர்த்து வளர்த்து வரும் அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது. குழந்தையை உயிருக்கு ஆபத்தான நோய் தாக்க, மகளைக் காப்பாற்ற அவர் மேற்கொள்ளும் போராட்டமே படத்தின் மையக்கதை.
இதற்கிடையே அந்தக் குழந்தை உண்மையில் யாருடையது, விஜய் ஆண்டனி தனது கடந்த காலத்தை மறைத்து வாழ்வது ஏன், அவரை விரும்பும் பெண்ணின் காதலை ஏற்க மறுப்பதற்கான காரணம் என்ன போன்ற கேள்விகளும் திரைக்கதையில் சஸ்பென்ஸை அதிகரிக்கின்றன. இதற்கான பதில்களை கிளைமாக்ஸில் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் மூலம் இயக்குநர் மு. மாறன் வெளிப்படுத்தியுள்ளார்.
தொடக்கக் காட்சியிலேயே ஆக்ஷன் களத்தில் இறங்குகிறார் விஜய் ஆண்டனி. பட்டாக்கத்தியுடன் தாக்க வரும் ரவுடிகளை பஸ் நிலையத்தில் எதிர்கொள்ளும் காட்சி கவனம் ஈர்க்கிறது. அதன்பிறகு மகளுக்காகவே வாழும் தந்தையாக அவரது கதாபாத்திரம் மாறுகிறது. காதலைக்கூட ஒதுக்கி வைக்கும் அவரது செயல்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் காரணம் கிளைமாக்ஸில் தெரியவருவது சுவாரஸ்யமான திருப்பம்.
ஊட்டியில் உள்ள கான்வென்ட் பள்ளி ஆசிரியையாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். விஜய் ஆண்டனி மீது காதல் கொள்ளும் அவர், ஒரு கட்டத்தில் தனது வேலையைக்கூட விட்டுவிட்டு அவரைச் சுற்றி வருகிறார். அவரது காதல், விஜய் ஆண்டனி மீதானதா அல்லது அவரது மகள் மீதான பாசத்தால் உருவானதா என்ற குழப்பம் இறுதிவரை நீடிக்கிறது. இதனால் அவரது காதல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகிறது.
தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்டு நகரும் படம், திடீரென நீதிமன்றப் பின்னணிக்கு மாறுவது திரைக்கதையில் முக்கியமான திருப்பமாக அமைகிறது. முதல் பாதியில் சற்று மெதுவாக நகரும் கதை, கிளைமாக்ஸ் நெருங்கும்போது வேகமெடுக்கிறது. அடுத்தடுத்து வெளிப்படும் உண்மைகளும் எதிர்பாராத சம்பவங்களும் இறுதிவரை பரபரப்பைத் தக்க வைக்கின்றன.
விஜய் ஆண்டனி தந்தையாகவும், ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக, மகளுக்காகப் போராடும் காட்சிகளில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவருக்கு இணையாக நடித்துள்ள பேபி லிதான்யா, சென்டிமென்ட் காட்சிகளில் மட்டுமல்லாமல் தனது இயல்பான நடிப்பாலும் கவனம் ஈர்க்கிறார். ப்ரீத்தி அஸ்ராணியும் தனது கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
படத்தை பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். விஜய் ஆண்டனியே இசையமைப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளர் பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். அவரது இசையும் எடிட்டிங்கும் படத்தின் வேகத்துக்கு உதவுகின்றன. ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு ஊட்டியின் இயற்கை அழகையும் மலைப்பாதைகளையும் அழகாகப் படம்பிடித்துள்ளது.
இயக்குநர் மு. மாறன் தந்தை – மகள் உறவில் இருக்கும் அன்பையும் உணர்வுகளையும் மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார். சென்டிமென்ட், ஆக்ஷன், காதல், மர்மம் எனப் பல அம்சங்களை இணைத்துள்ள அவர், குறிப்பாக கிளைமாக்ஸில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் திருப்பங்களைக் கொடுத்துள்ளார். மொத்தத்தில், முதல் பாதியில் சற்று மெதுவாக நகர்ந்தாலும், கிளைமாக்ஸில் விறுவிறுப்பைக் கூட்டும் திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது விஜய் ஆண்டனியின் இந்தப் படம்.