குழந்தைகள் காணாமல் போகும் சம்பவம், அடையாளம் தெரியாத ஒரு சடலம், அதைச் சுற்றி நடக்கும் போலீஸ் விசாரணை என ஆரம்பத்திலேயே ரசிகர்களை மர்ம உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது ‘ஜான் டோ’ திரைப்படம். இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், நீரவ், அனுபமா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், ஒரு சுவாரஸ்யமான கிரைம் திரில்லராக உருவாகியிருக்கிறது. இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள இப்படத்தின் விமர்சனத்தை காணலாம்.
கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு மலைப்பகுதியில்தான் கதையின் தொடக்கம். தாயை இழந்த சிறுமி சாராவும், தந்தையின் இரண்டாவது திருமணத்துக்குப் பிறந்த சிறுவன் ஹிருதய் குடும்பத்துடன் இந்தியா திரும்புகின்றனர். வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் ஹிருதய், திடீரென ஒருநாள் காணாமல் போகிறான். அவனைத் தேடும் முயற்சி குடும்பத்தினருக்குப் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
மறுபுறம், தந்தையிடம் அவமானத்தைச் சந்தித்து, அதையே தனது வாழ்க்கையின் இலக்காக மாற்றி கேரள காவல்துறையில் அதிகாரியாக உயர்ந்தவர் அர்ஜுன் தாஸ். அடையாளம் காண முடியாத ஒருவரின் மர்ம வழக்கை விசாரிப்பதற்காகத் தமிழகத்திற்கு வரும் அவருக்கு, இந்த வழக்குக்கும் காணாமல் போன ஹிருதய்க்கும் ஏதோ தொடர்பு இருப்பது தெரியவருகிறது. இதையடுத்து, ஹிருதய் வழக்கை விசாரித்து வரும் பெண் காவல் அதிகாரி ராவ் (சஞ்சனா நடராஜன்) உடன் இணைந்து விசாரணையை முன்னெடுக்கிறார்.
இந்த வழக்கில் சிறுவர்களின் மேல்பற்களுக்கு இடையே காணப்படும் இடைவெளி ஒரு முக்கியமான அடையாளமாக மாறுகிறது. ஒருகட்டத்தில் ஹிருதய் உயிருடன் மீட்கப்பட்டாலும், அவனது நடவடிக்கைகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. தனது உண்மையான பெயரையே மறந்துவிட்டதாகக் கூறும் அவன், தன்னை கேபிரியேல் என அறிமுகப்படுத்துகிறான். அதுமட்டுமின்றி, அவனது கையில் 'ஏஞ்சல்' என்ற பெயர் பொறிக்கப்பட்ட தங்கக் கையணியும் இருக்கிறது. இந்தக் குழந்தைகள் கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? ஹிருதயின் பெயரும் அடையாளமும் ஏன் மாறின? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடிப் பயணிக்கிறது மீதிக்கதை.
குழந்தைகள் கடத்தல் என்ற பதற்றமான களத்துடன், அடையாளம் தெரியாத நபரின் மர்மத்தையும் இணைத்திருப்பது படத்தின் முக்கியமான பலம். தொடக்கத்திலேயே பல சந்தேகங்களை விதைக்கும் இயக்குநர் மதுமிதா, அவற்றுக்கான பதில்களை அவசரப்படாமல் ஒவ்வொன்றாக வெளிப்படுத்துகிறார். குறிப்பாக, இடைவேளையில் வரும் திருப்பம் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. இரண்டாம் பாதியிலும் விசாரணையின் வேகம் குறையாமல் செல்வதால், அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம் தொடர்கிறது. சில இடங்களில் வழக்கமான கிரைம் திரில்லர் காட்சிகள் இடம்பெற்றாலும், ஒட்டுமொத்தமாகத் திரைக்கதை சுவாரஸ்யத்தைத் தக்கவைக்கிறது.
இயக்குநர் மதுமிதாவின் காட்சியமைப்பும், ஒவ்வொரு காட்சிக்கும் அவர் தேர்ந்தெடுத்திருக்கும் ஃபிரேம்களும் பாராட்டுக்குரியவை. குறிப்பாக, மலைப்பகுதியின் இயற்கை அழகை மட்டுமல்லாமல், அங்கு நிலவும் ஒருவித அச்ச உணர்வையும் ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன் சிறப்பாகப் படம்பிடித்திருக்கிறார். முஜீப் மஜீத் மற்றும் ஆர்டிஸ்ட் 404 ஆகியோரின் பின்னணி இசை விசாரணைக் காட்சிகளுக்குப் பதற்றத்தைக் கூட்டுகிறது. படத்தொகுப்பாளர் விஜய் வெங்கட் ரமணனின் பணி ஒட்டுமொத்தமாகச் சிறப்பாக இருந்தாலும், முதல் பாதியில் சில காட்சிகளைச் சுருக்கியிருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
அர்ஜுன் தாஸுக்கே உரித்தான கம்பீரமான குரலும், திரையில் அவர் வெளிப்படுத்தும் உடல்மொழியும் காவல் அதிகாரி கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன. விசாரணைக் காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது.
சஞ்சனா நடராஜன் ஒரு பெண் காவல் அதிகாரியாகத் தன்னுடைய கதாபாத்திரத்தை நன்றாகக் கையாண்டிருக்கிறார். நடிப்பில் குறையில்லை என்றாலும், ஒவ்வொரு காட்சியிலும் மற்றவர்களை அதட்டிப் பேசும் விதம் சில நேரங்களில் அளவுக்கு அதிகமாகத் தெரிகிறது.
சிறுவன் ஹிருதயாக வரும் நீரவ் தனது நடிப்பால் கவனம் பெறுகிறார். அனுபமா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
படம் முழுவதும் ஒவ்வொரு மர்மத்திற்கும் ஒரு காரணத்தைத் தேடித் தேடி வெளிப்படுத்தும் இயக்குநர், கிளைமாக்ஸில் மட்டும் தடுமாறியிருக்கிறார். குடும்பத்தில் மனைவி, மகன் என இருவரின் உயிரும் ஒரே நேரத்தில் ஆபத்தில் இருக்கும்போது, யாரைக் காப்பாற்றுவது என்ற சூழலில் ஒரு கதாபாத்திரம் எடுக்கும் முடிவு பார்வையாளர்களுக்கு முழுமையாகப் புரியவில்லை. குறிப்பாக, எந்தத் தவறும் செய்யாத ஒரு குழந்தையின் உயிரைப் பொருட்படுத்தாமல் எடுக்கப்படும் அந்த முடிவுக்குப் பின்னால் வலுவான உளவியல் காரணம் இருந்திருக்க வேண்டும்.
ஒரு கதாபாத்திரத்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்லது சைக்கோ எனச் சித்தரித்துவிட்டால் மட்டும் அதன் செயல்களுக்கு நியாயம் கிடைத்துவிடாது. அந்த மனநிலைக்கான பின்னணியும், அத்தகைய கொடூரமான முடிவை எடுக்கத் தூண்டும் காரணிகளும் திரைக்கதையில் அழுத்தமாகப் பதிவாகியிருக்க வேண்டும்.
மேலும், இந்தியச் சூழலில் நடக்கும் கதையாக இருந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகள் மற்றும் குடும்ப உறவுகளின் வெளிப்பாடுகளில் நம்முடைய மண்ணின் இயல்பை இன்னும் அதிகமாகக் கொண்டு வந்திருக்கலாம். ஜான் டோ, டயாஸ்டீமா, கோஸ்டிங் போன்ற சொற்கள் கதையின் மர்மத்திற்குத் துணையாக இருந்தாலும், அவை மட்டுமே ஒரு படத்தைச் சிறந்த திரில்லராக மாற்றிவிடாது. குற்றவாளியின் கடந்தகால வாழ்க்கை, அவனது மனநிலை, அவன் செய்யும் செயல்களுக்கான காரணம் ஆகியவற்றை இன்னும் ஆழமாக அணுகியிருந்தால், கிளைமாக்ஸ் ரசிகர்களின் மனதில் நீண்ட நேரம் தங்கியிருக்கும்.
மர்மத்தை உருவாக்குவதில் காட்டிய கவனத்தை, அதற்கான நியாயமான முடிவைக் கொடுப்பதிலும் காட்டியிருந்தால் ‘ஜான் டோ’ இன்னும் சிறப்பான திரில்லராக மாறியிருக்கும்!