
டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இப்படத்தை இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்திலும், மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ஒரு வழக்கை மையமாக வைத்து நீதிமன்றப் பின்னணியில் திரில்லர் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
கோவையைச் சேர்ந்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த வழக்கறிஞராக வேண்டும் என்பதுதான் லட்சியம். ஆனால், அவரது தந்தையும் கணவர் தீபக்கின் தாயும் பெண் என்பவள் குடும்பத்தை மட்டுமே கவனித்துக்கொண்டு வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இதனால் கீர்த்தியின் கனவுக்கு ஆரம்பத்தில் தடைகள் ஏற்படுகின்றன.
இருப்பினும், அவரது கணவர் தீபக் துணையாக நிற்க, வழக்கறிஞர் பணியில் கால் பதிக்கிறார் கீர்த்தி. தொடர்ந்து அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரான மிஷ்கினிடம் ஜூனியராகப் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது. ஆனால், ஒரு கட்டத்தில் தனது குருவுக்கே எதிராக நீதிமன்றத்தில் வாதாட வேண்டிய சூழல் உருவாகிறது. அதுவும் தனது கணவருக்காக இந்தப் போராட்டத்தில் இறங்குகிறார். இறுதியில் இந்த வழக்கில் வெற்றி யாருக்குக் கிடைத்தது என்பதே மீதிக்கதை.
படத்தின் பெரும்பகுதியைத் தனது தோள்களில் சுமந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கதையின் மையமாக அவரது கதாபாத்திரம் அமைந்திருப்பதால், உணர்ச்சிகரமான தருணங்களிலும் நகைச்சுவைக் காட்சிகளிலும் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மிஷ்கின் வழக்கம்போல தனக்கே உரிய உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால் பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். கணவராக நடித்துள்ள தீபக் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார். பால சரவணனும் தனது நகைச்சுவைப் பங்களிப்பால் படத்துக்கு வலு சேர்த்துள்ளார்.
சாம் சி.எஸ். இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, பின்னணி இசை பல காட்சிகளுக்கு அழுத்தம் சேர்க்கிறது. ஒரே இடங்களை திரும்ப திரும்ப காட்ட வேண்டிய காட்சிகளையும் சுவாரஸ்யமான கேமரா கோணங்கள் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர்.
ஒருவரின் தியாகத்தால் உருவாகும் உறவு, துரோகத்தால் உடையும்போது ஏற்படும் மனவலியை கதையின் முக்கிய அம்சமாக இயக்குநர் பிரவீன் S. விஜய் பதிவு செய்துள்ளார். அதேபோல், வழக்கறிஞர் தொழிலில் இருக்கும் உணர்வற்ற அணுகுமுறைகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சிக்கல்களையும் திரைக்கதையில் எடுத்துக்காட்டியுள்ளார்.
இருப்பினும், படத்தின் எழுத்தாக்கத்தில் சில பலவீனங்கள் இருக்கின்றன. குற்றம் செய்த கதாபாத்திரங்கள் மீது பார்வையாளர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கோபம் ஏற்படவில்லை. அதேபோல், பாதிக்கப்பட்டவர்களின் வலியையும் முழுமையாக உணரச் செய்யும் வகையில் காட்சிகள் வலுவாக அமையவில்லை. இதனால் கதையின் முக்கியமான உணர்வுப்பூர்வமான அம்சம் பார்வையாளர்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை. சில சுவாரஸ்யமான நீதிமன்றக் காட்சிகள் மட்டுமே திரைக்கதையின் தொய்வை மறைத்து படத்தை ஓரளவுக்குத் தாங்கிப் பிடிக்கின்றன.
மொத்தத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு, மிஷ்கினின் தனித்துவமான பங்களிப்பு, சாம் சி.எஸ். இசை மற்றும் சில சுவாரஸ்யமான நீதிமன்றக் காட்சிகள் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. அதேசமயம், வலுவான உணர்வுகளையும் அழுத்தமான திரைக்கதையையும் உருவாக்கத் தவறியிருப்பது குறையாக உள்ளது. நீதிமன்றத் திரில்லர் கதைக்களம் கொண்டிருந்தாலும், எழுத்தாக்கத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் ‘சத்தியவான் சாவித்திரி’ சிறப்பான அனுபவமாக அமைந்திருக்கும்.