
‘ஜோக்கர்’, ‘குக்கூ’ போன்ற சமூக பொறுப்புள்ள படங்களை கொடுத்த இயக்குநர் ராஜு முருகன், அடுத்த சில படங்களில் தடுமாறினார். அவர் தற்போது ‘மை லார்ட்’ படம் மூலம் மீண்டும் தன் பழைய முத்திரையை பதிக்க முயன்றிருக்கிறார். இந்த முறை அவர் சொல்ல வருவது அதிகாரம் மற்றும் மனித அன்பு மோதும் ஒரு உணர்ச்சி நிரம்பிய கதை. இப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் சைத்ரா ஆச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.
வெள்ளந்தியான கிராமத்து மனிதர் முத்து சிற்பியாக சசிக்குமார். அவர் எளிமை, நம்பிக்கை, மனித நேயம் ஆகியவற்றை வாழ்வியல் முறையாகக் கொண்டவர். அவரின் உலகமே சுசீலா (சைத்ரா ஆச்சார்) தான். வறுமையால் சுருங்கிய அந்த பகுதி மக்களுக்கு, உடலுறுப்புகளை விற்று வாழ்க்கையை தாங்குவது அன்றாடச் சம்பவமாக மாறியிருப்பது படத்தின் பின்னணி. அந்த சமூகச் சூழலை மிகவும் நேர்மையாக காட்டுகிறது படம்.
ஒரு முக்கிய மத்திய பெண் அமைச்சரின் உயிரைக் காக்க முத்து சிற்பியின் சிறுநீரகம் தேவைப்படுகிறது. அதிகாரமும் பதவியும் உயிருடன் இணைந்திருக்கும் அந்த அரசியல் உலகில், மனித உயிரின் மதிப்பு எவ்வளவு குறைவு என்பதை படம் வெளிப்படுத்துகிறது. பணமும், பதவியும் ஆயுதமாக மாறும் தருணத்தில், சாதாரண மனிதனின் எதிர்ப்பு எப்படி இருக்கும்? அதுவே படத்தின் மீதிக்கதை.
முத்து சிற்பியாக சசிகுமார் மிகவும் இயல்பாக திகழ்கிறார். நடிப்பு என்ற உணர்வே இல்லாமல், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மனிதம் பேசும் கதைகளுக்கு அவர் ஏன் சரியான தேர்வு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சுசீலாவாக நடித்திருக்கும் சைத்ரா ஆச்சார் கதைக்கு தேவையான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். அதிகாரத்தின் அகம்பாவத்தை பிரதிபலிக்கும் அமைச்சராக ஆஷா சரத், அனுபவ நடிப்பால் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். சமூக ஊடகங்களின் இரு முகங்களையும் சுட்டிக்காட்டும் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் கவனம் ஈர்க்கிறார்.
ஒளிப்பதிவில் நீரவ்ஷா இயல்பை மிஞ்சாமல் உண்மைத்தன்மையை படம் பிடித்துள்ளார். பின்னணி இசையில் ஷான் ரோல்டன் கதையின் உணர்ச்சிக்கு ஏற்ப மென்மையாக இணைந்திருக்கிறார். சில இடங்களில் திரைக்கதை லாஜிக்கில் சறுக்கினாலும், அது படத்தின் மைய கருத்தை பாதிக்கவில்லை. குறிப்பாக நீதிமன்றக் காட்சிகள் இன்னும் வலுவாக இருக்கக் கூடியதாக தோன்றுகிறது. இருப்பினும், சொல்ல வேண்டிய செய்தியை வணிகத் திரைப்படத்தின் மொழியில் கொண்டு சேர்க்க முயற்சித்திருப்பது பாராட்டத்தக்கது.
மனித உறுப்பு கடத்தல் போன்ற அதிர்ச்சியான நிஜத்தை மையமாக கொண்டு, அதிகாரத்தின் ஆணவத்துக்கும் அடித்தட்டு மக்களின் பேரன்புக்கும் இடையிலான மோதலை உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்கிறது ‘மை லார்ட்’. சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவை விரும்புவோருக்கு கண்டிப்பாக பார்க்கத் தகுந்த படம்.