
பவர் ஸ்டார் பவன் கல்யாணின் 'ஓஜி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. சுஜீத் எழுதி இயக்கிய இந்த ஆக்ஷன் க்ரைம் திரைப்படத்தை டி.வி.வி. தானய்யா தனது டி.வி.வி. என்டர்டெயின்மென்ட் பேனரில் தயாரித்துள்ளார். இப்படத்தில் இம்ரான் ஹாஷ்மி, பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரியா ரெட்டி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். 2025-ல் பவன் கல்யாணுக்கு ஓஜி இரண்டாவது படமாகும். இதற்கு முன்பு அவர் நடித்த 'ஹரி ஹர வீர மல்லு' திரைப்படம் கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி தோல்வியடைந்தது. இதனால் ஓஜி படம் மூலம் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் பவன் கல்யாண். அப்படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
'ஓஜி' படத்தின் கதை 1940-களில் ஜப்பானில் உள்ள சாமுராய் கும்பல்களின் கதையுடன் தொடங்குகிறது. ஒரு உள் சண்டையில் பெரும்பாலானோர் கொல்லப்பட, ஓஜி, நாட்டை விட்டு தப்பிச் செல்கிறார். ஓஜி என்கிற ஓஜஸ் கம்பீரா (பவன் கல்யாண்), மும்பையில் ஒரு துறைமுகம் கட்ட விரும்பும் சத்ய தாதா (பிரகாஷ் ராஜ்) உடன் ஒரு கப்பலில் பயணிக்கிறார். படத்தின் கதை 70-களுக்கு நகர்கிறது. சத்ய தாதா-கீதா (ஸ்ரியா ரெட்டி) இணைந்து, தங்களுக்குச் சொந்தமான துறைமுகத்தில் உள்ள ஒரு மர்மமான கண்டெய்னரைக் கைப்பற்றிய மிராஜ்கர் (தேஜ் சப்ரு) மற்றும் அவரது குடும்பத்தினருடன் மோதுகிறார்கள்.
இதற்கிடையில், சத்ய தாதா மற்றும் அவரது குடும்பத்தின் பாதுகாவலன் என்று கூறிக்கொள்ளும் ஓஜஸ், ஒரு பெரிய சம்பவத்திற்குப் பிறகு மும்பையை விட்டு வெளியேறுகிறார். அதன் பிறகு அதிகாரத்திற்கான போராட்டம் தொடங்குகிறது. காலம் செல்லச் செல்ல, மும்பைக்கும் சத்ய தாதாவுக்கும் ஆபத்து நெருங்குகிறது. ஓமி (இம்ரான் ஹாஷ்மி) மற்றும் அவனது கும்பல் அதிகாரத்தைக் கைப்பற்ற அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்துகின்றனர். இந்தச் சூழ்நிலையில் ஓஜஸ் மும்பை திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் ஓஜஸ் மீண்டும் மும்பைக்கு வந்தாரா? மும்பையை விட்டு வெளியேறிய பிறகு அவர் எங்கே இருந்தார்? நகரத்திற்கும் சத்ய தாதாவிற்கும் யார் ஆபத்தை உருவாக்குகிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஓஜி படத்தின் மிகப்பெரிய பலம் பவன் கல்யாண் போன்ற ஒரு ஸ்டாரை முழுமையாகப் பயன்படுத்தியதுதான். படத்தில் அவரது பல பரிமாணங்களைக் காண முடிகிறது. அதிரடி ஆக்ஷனுடன் அவரது உணர்ச்சிகரமான பக்கமும் வெளிப்பட்டுள்ளது. இயக்குனர் சுஜீத் படத்தில் ஒன்றுக்கு இரண்டு வில்லன்களைப் பயன்படுத்தியுள்ளார் - இம்ரான் ஹாஷ்மி மற்றும் அர்ஜுன் தாஸ். படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக உள்ளன.
முதல் பிரேமிலிருந்தே ரத்தம் தெறிக்கிறது, கதை முன்னேறும்போது அது இன்னும் அதிகமாகிறது. ஸ்டைலான ஓஜஸ் கம்பீராவாக பவன் கல்யாணின் திரை ஆளுமை, திரையில் இருந்து பார்வையை அகற்ற முடியாதபடி செய்கிறது. இருப்பினும், படத்தில் கடந்த காலமும், நிகழ்காலமும் கலந்து காட்டப்படுவதால் கதை சில இடங்களில் குழப்பமடைகிறது.
ஓஜஸாக பவன் கல்யாண் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அவர் மிரட்டியுள்ளார். வில்லனாக வரும் இம்ரான் ஹாஷ்மிக்குத் திரை நேரம் குறைவாக இருந்தாலும், வந்த சில காட்சிகளிலேயே தனது முத்திரையைப் பதித்துள்ளார். அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ், ஸ்ரியா ரெட்டி ஆகியோர் வலுவான நடிப்பை வழங்கியுள்ளனர். பிரியங்கா மோகனின் கதாபாத்திரம் பெரிதாக ஈர்க்கவில்லை, அவர் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே தோன்றுகிறார். இயக்கத்தைப் பொறுத்தவரை, சுஜீத்தின் பணி சிறப்பாக உள்ளது, இருப்பினும் சில இடங்களில் சிறிய தவறுகள் உள்ளன.
'ஓஜி' திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக உள்ளது. எஸ்.எஸ். தமன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். பின்னணி இசை மிரட்டலாக உள்ளது. பவன் கல்யாண் ரசிகர்களுக்கு இது ஒரு திருவிழா. பல வருடங்களாக பசியுடன் இருந்த அவர்களின் பசியைத் தீர்க்கும் படமாக இது அமையும். ஆக்ஷன் பிரியர்கள் மற்றும் பவன் ரசிகர்கள் கொண்டாடும் படமாக ஓஜி இருக்கிறது.