Mookuthi Amman 2 Review : நயன்தாரா பந்தயம் அடித்தாரா? பல்பு வாங்கினாரா? மூக்குத்தி அம்மன் 2 முழு விமர்சனம் இதோ

Published : Nov 06, 2026, 07:28 AM IST

Mookuthi Amman 2 Movie Review : சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா, யோகிபாபு, இனியா ஆகியோர் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
17
Mookuthi Amman 2 Movie Review

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. குறிப்பாக, படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் அரண்மனை படங்களைப் போன்ற கதை அம்சங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் ட்ரோல்கள் எழுந்தன. ஆனால், திரையில் படத்தை பார்க்கும் போது அந்த விமர்சனங்களைத் தாண்டி ஒரு பிரம்மாண்டமான அம்மன் திரைப்பட அனுபவத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.

அம்மன் திரைப்படங்களுக்கு எப்போதுமே குடும்ப ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. அதிலும் கிளைமேக்ஸில் அம்மன் பாடல்கள் ஒலிக்கும்போது தியேட்டரே திருவிழா கொண்டாட்டமாக மாறுவது வழக்கம். அந்த வகையில், ஹிப் ஹாப் ஆதி இசையில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

பழக்கப்பட்ட கதை, பிரம்மாண்டமான கிராபிக்ஸ், தெய்வீக சக்தி மற்றும் கமர்ஷியல் பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்தையும் ஒரே படத்தில் இணைத்து தீபாவளி விருந்தாக கொடுத்திருக்கிறார் சுந்தர்.சி. இந்த படத்தின் முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

27
மூக்குத்தி அம்மன் 2 கதை

சென்னையில் காவல் அதிகாரியாக பணியாற்றும் நயன்தாராவின் வாழ்க்கையில் சில விசித்திரமான சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. அவரது கனவில் தொடர்ந்து தோன்றும் உருவங்கள், மயிலாஞ்சி என்ற ஊருக்குச் செல்லும்படி அவருக்கு உணர்த்துகின்றன. இதற்கிடையில், ஒரு சிறுமியை நரபலி கொடுக்க முயற்சிக்கும் நிதின் சத்யாவின் முயற்சியை நயன்தாரா தடுத்து நிறுத்துகிறார். இந்த சம்பவத்தால் அவருக்கு பதவி உயர்வு கிடைக்கும் சூழல் உருவாகிறது. ஆனால், எதிர்பாராத விதமாக மயிலாஞ்சி ஊருக்கு மாற்றம் கிடைக்க, அவரது வாழ்க்கையே புதிய திருப்பத்தை சந்திக்கிறது.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தீய சக்தியை அழிக்கும் முயற்சியில் ஏற்பட்ட தவறால் தனது அவதாரத்தை முடித்துக்கொண்ட மூக்குத்தி அம்மன் மீண்டும் வருகிறாரா என்பதே கதையின் முக்கியமான டர்னிங் பாயிண்ட். மறுபுறம், மம்மி போன்ற தோற்றத்தில் மீண்டும் உயிர்பெறும் ரெஜினா கசாண்ட்ரா, தனது காதலனான துனியா விஜய்யுடன் இணைந்து அம்மனின் வருகையை தடுக்க பல்வேறு திட்டங்களை தீட்டுகிறார். நயன்தாராவை குறிவைக்கும் இந்த சூழ்ச்சிகள் எந்த முடிவை அடைகின்றன? இறுதியில் தீய சக்திகளை மூக்குத்தி அம்மனின் மஹாசக்தி வென்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

37
சுந்தர்.சி கொடுத்த கமர்ஷியல் விருந்து!

இந்த தீபாவளிக்கு சுந்தர்.சி மற்றும் நயன்தாரா இணைந்து களமிறங்கியிருப்பதற்கு படத்தின் மீதான நம்பிக்கையே முக்கிய காரணமாக இருக்கிறது. முதல் பாதியில் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி, அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் மூலம் கதைக்கு தேவையான எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியில் மூக்குத்தி அம்மனின் போராட்டம், எதிரிகளின் சூழ்ச்சி மற்றும் அதிரடியான திருப்பங்கள் என படம் வேகமெடுக்கிறது. குறிப்பாக, ப்ரீ கிளைமேக்ஸ் மற்றும் இறுதிக்கட்ட காட்சிகளில் சுவாரஸ்யத்தை குறைய விடாமல் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

முதல் பாகத்தின் கதையுடன் நேரடியாக தொடர்பு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டிருந்தாலும், மூக்குத்தி அம்மன் என்ற கதாபாத்திரத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் சுந்தர்.சி. அரண்மனை படங்களைப் போலவே இந்த படத்தையும் அடுத்தடுத்த சீக்குவல் ஆக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தோன்றுகிறது. நயன்தாராவின் அம்மன் கதாபாத்திரம் அதற்கு முக்கியமான பலமாக அமைந்துள்ளது.

47
கிராபிக்ஸ் காட்சிகள்.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்ததா?

படம் வெளியாவதற்கு முன்பு கிராபிக்ஸ் காட்சிகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், படத்தில் இடம்பெற்றுள்ள விஷுவல் எஃபெக்ட்ஸ் பல இடங்களில் கதைக்கு தேவையான பிரம்மாண்டத்தை கொடுக்கின்றன. குறிப்பாக, அம்மன் தொடர்பான காட்சிகள், தெய்வீக சக்திகளை வெளிப்படுத்தும் தருணங்கள் மற்றும் இறுதிக்கட்ட காட்சிகளில் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சுந்தர்.சி தனது படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை உள்ளூர் கலைஞர்களை கொண்டு உருவாக்கியதாக கூறியிருந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் கதையின் பிரம்மாண்டத்திற்கு துணையாக அமைந்துள்ளன.

ரெஜினா கசாண்ட்ரா வில்லியாக படம் முழுவதும் கவனம் ஈர்க்கிறார். அவரது தோற்றமும், கதாபாத்திரத்தின் எதிர்மறையான குணங்களும் படத்திற்கு வலு சேர்க்கின்றன. துனியா விஜய், கருடா ராம், ஊர்வசி, மைனா நந்தினி மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

57
ஹிப் ஹாப் ஆதி இசை.. கிளைமேக்ஸில் தியேட்டரே திருவிழா!

படத்தின் பின்னணி இசை முக்கியமான பலமாக அமைந்துள்ளது. ஹிப் ஹாப் ஆதி தனது பிஜிஎம் மூலம் பல காட்சிகளுக்கு தேவையான எலிவேஷன் கொடுத்திருக்கிறார். தொடக்கத்தில் இடம்பெறும் பாடல் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும், கிளைமேக்ஸில் வரும் அம்மன் பாடல் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அம்மன் திரைப்படங்களில் பாடல்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து, கிளைமாக்ஸ் காட்சிகளில் இசையை பிரம்மாண்டமாக பயன்படுத்தியிருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி.

பாம்பு படிக்கட்டு காட்சி, சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் அம்மன் காட்சி மற்றும் கிளைமேக்ஸில் இடம்பெறும் அம்மன் கேமியோக்கள் என பல தருணங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு தரமும் படத்தின் பிரம்மாண்டத்திற்கு வலு சேர்த்து உள்ளது.

67
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பலம் என்ன?

பிளஸ்:

ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை படத்தின் முக்கியமான காட்சிகளை வலுப்படுத்துகிறது. கிளைமேக்ஸ் அம்மன் பாடல் ரசிகர்களுக்கு உற்சாகமான அனுபவத்தை கொடுக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் பல இடங்களில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளன. ரெஜினா கசாண்ட்ராவின் வில்லத்தனமான நடிப்பு கவனம் ஈர்க்கிறது. பாம்பு படிக்கட்டு, சிங்கத்தின் மீது அம்மன் அமர்ந்திருக்கும் காட்சி மற்றும் அம்மன் கேமியோக்கள் படத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்க்கின்றன. குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்துள்ளன.

மைனஸ்:

படத்தின் மிகப்பெரிய பலவீனம் அதன் கதையம்சம் தான். ரெஜினா கசாண்ட்ராவின் கதாபாத்திரம் மற்றும் மம்மி தொடர்பான காட்சிகள் ஏற்கனவே பார்த்த சில திரைப்படங்களை நினைவுபடுத்துகின்றன. பீரியட் காட்சிகளில் கம்சன் தொடர்பான கதையம்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கிளைமேக்ஸில் மல்டிவெர்ஸ் போன்ற அம்சங்களின் தாக்கமும் தெரிகிறது. தீய சக்தியை எதிர்த்து அம்மன் போராடும் வழக்கமான கதையமைப்பு என்பதால், கதையில் புதுமையை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு சில இடங்களில் ஏமாற்றம் ஏற்படலாம்.

யோகி பாபு, விஜே ஆஷிக் மற்றும் வர்ஷினி வெங்கட் உள்ளிட்டோரின் காமெடி காட்சிகள் சில இடங்களில் ஜவ்வாக இழுக்கின்றன. குறிப்பாக, எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி கத்திரி போட்டிருந்தால் அந்த காட்சிகள் படத்தின் வேகத்திற்கு உதவியிருக்கும்.

77
இறுதியாக மூக்குத்தி அம்மன் 2 எப்படி?

பழக்கப்பட்ட கதையம்சங்கள் மற்றும் சில இடங்களில் எதிர்பார்க்கக்கூடிய திருப்பங்கள் இருந்தாலும், அவற்றை பிரம்மாண்டமான காட்சிகள், இசை மற்றும் கமர்ஷியல் பொழுதுபோக்கு மூலம் சமாளித்திருக்கிறார் சுந்தர்.சி. நயன்தாராவின் அம்மன் அவதாரம், ரெஜினா கசாண்ட்ராவின் வில்லத்தனம் மற்றும் கிளைமேக்ஸில் வரும் அதிரடியான காட்சிகள் படத்தின் முக்கியமான பலமாக அமைந்துள்ளன. புதுமையான கதையை எதிர்பார்ப்பவர்களுக்கு சில குறைகள் தெரிந்தாலும், அம்மன் திரைப்படங்களை விரும்புபவர்கள் மற்றும் குடும்பத்துடன் பொழுதுபோக்காக படம் பார்க்க நினைப்பவர்கள் மூக்குத்தி அம்மன் 2வை தாராளமாக பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories