
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள படம் மொத ராத்திரி. இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஏ. வெங்கடேஷ், சேத்தன், பகவதி பெருமாள், ஷெல்லி கிஷோர், அப்துல் லீ, சங்கீதா பாலன், சுமித்ரா தேவி எல்., பானுப்ரியா, வர்ஷினி கார்மேகம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.
திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் செல்லும் நேரத்தில்தான் மருதநாயகத்துக்கு ஒரு அதிர்ச்சி தகவல் தெரிய வருகிறது. புதிதாகத் திருமணம் செய்திருக்கும் முத்துச்செல்வி ஏற்கனவே வேறொருவரை காதலித்து வருகிறார் என்பதும், குடும்பத்தினரின் கட்டாயத்தால் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது என்பதும் அப்போது அவருக்குத் தெரியவருகிறது. இந்த சூழ்நிலையில், தன்னால் முத்துச்செல்வியின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்று நினைக்கும் மருதநாயகம், அவளை அவளது காதலருடன் சேர்த்து வைக்க முடிவு செய்கிறார். ஆனால் அந்த முடிவு நடைமுறையில் என்ன மாதிரியான பிரச்சனைகளை உருவாக்குகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
இந்தக் கதையில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திருமணம் நடைபெறப் போகிறது என்பதே மருதநாயகத்துக்கு தாலி கட்டுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் தெரிய வருகிறது. அதேபோல், முத்துச்செல்விக்கும் இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. இருவரின் சம்மதமின்றி நடக்கும் திருமணத்திலிருந்து உருவாகும் குழப்பங்களே திரைக்கதைக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.
சீரியஸான பின்னணியுடன் தொடங்கும் இந்தக் கதையை நகைச்சுவை கலந்து இலகுவான பொழுதுபோக்கு படைப்பாக மாற்றியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி. திருமணத்தைச் சுற்றி ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களையும், கதாபாத்திரங்களின் வித்தியாசமான அணுகுமுறைகளையும் காமெடி கலந்து நகர்த்தியிருப்பது படத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.
மருதநாயகம் கதாபாத்திரத்தில் ரிஷிகாந்த் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். கோபம், குழப்பம், பதற்றம், பாசம், நிதானம் என சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் மனநிலையை தனது நடிப்பின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார்.
முத்துச்செல்வியாக அனிஷ்மா, குறைவான வசனங்களுடன் கதாபாத்திரத்தின் உணர்வுகளை முகபாவனைகளால் வெளிப்படுத்துகிறார். திருமணத்தால் ஏற்படும் மன அழுத்தத்தையும் குழப்பத்தையும் அவரது நடிப்பு இயல்பாகக் காட்டுகிறது.
அப்துல் லீ, இயக்குநர் ஏ. வெங்கடேஷ், பக்ஸ் பகவதி பெருமாள், சேத்தன் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை நேர்த்தியாக கையாண்டுள்ளனர். குறிப்பாக கதையின் முக்கியமான தருணங்களில் இவர்களின் பங்களிப்பு திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவுகிறது.
படத்தை இயக்கியுள்ள ராஜா கருப்பசாமியே ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். காதலைப் பற்றி மட்டுமே தெரிந்துகொண்டு, அதற்கு அப்பால் வாழ்க்கையின் பொறுப்புகளை எதிர்கொள்ளத் தயங்கும் இளைஞராக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாத்திரம் படத்தின் நகைச்சுவை அம்சங்களில் ஒன்றாக அமைகிறது.
இசையமைப்பாளர் பரத் சங்கர், கதையின் மனநிலைக்கு ஏற்ற பின்னணி இசையையும் ரசிக்க வைக்கும் பாடல்களையும் வழங்கியுள்ளார். படத்தின் காட்சிகளுக்கு இசை நல்ல துணையாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்ஜோதியின் கேமரா பணியும் படத்தின் காட்சிகளுக்கு தேவையான இயல்பான தோற்றத்தை கொடுக்கிறது.
படத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இது பெரியவர்களுக்கான கதைக்களத்தைக் கொண்டிருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்படலாம். ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக ஆபாசமான காட்சிகள் அல்லது தேவையற்ற அம்சங்கள் இல்லாமல் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
மொத ராத்திரி படத்தின் பாசிடிவ்
பொதுவாக ஒரு திருமணம் என்றாலே இரு குடும்பங்களுக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் என பல பிரச்சனைகள் இருக்கும். இங்கு திருமணமே எதிர்பாராத வகையில் நடப்பதால், அதைச் சுற்றியுள்ள குழப்பங்களும் மோதல்களும் இன்னும் அதிகமாகின்றன. அந்த சூழ்நிலைகளை நகைச்சுவையுடன் கையாண்டிருப்பதால் படம் முழுவதும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சம் நீடிக்கிறது.
மொத்தத்தில், கட்டாய திருமணத்தை மையமாக வைத்து காதல், குடும்பக் குழப்பம் மற்றும் நகைச்சுவையை கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு இலகுவான பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது.