Happy Raj Review : GV-யின் காமெடி ட்ரீட் டேஸ்டா? வேஸ்டா? ஹாப்பி ராஜ் விமர்சனம்

Published : Mar 27, 2026, 08:34 AM IST

மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஜார்ஜ் மரியன், கெளரி பிரியா ஆகியோர் நடிப்பில் இன்று தியேட்டரில் ரிலீஸ் ஆன ஹாப்பி ராஜ் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

PREV
15
Happy Raj Review

ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'ஹாப்பி ராஜ்', உருவக் கேலிக்கும், அந்தஸ்துக்கும் இடையிலான போராட்டத்தை நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அப்பாஸின் வருகை இந்தப் படத்திற்கு ஒரு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

25
ஹாப்பி ராஜ் கதை

'குதிர முட்ட பையன்' என்ற பட்டப்பெயரோடு, குள்ளமான தந்தையின் மகனாக வளர்கிறார் நாயகன் ஆனந்தராஜ் (ஜிவி பிரகாஷ்). தனது தந்தையின் உருவத்தை வைத்து பெண்கள் தன்னை நிராகரிப்பதாக நினைக்கும் அவர், வெளியூர் சென்று எப்படியாவது ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்யத் துடிக்கிறார். பெங்களூருவில் காவ்யாவை (ஸ்ரீ கௌரி பிரியா) காதலிக்கிறார். காவ்யாவின் தந்தை (அப்பாஸ்) ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர். இரண்டு குடும்பங்களும் சந்திக்கும்போது 'வசதி' என்கிற ஈகோ தலைதூக்குகிறது. "யார் யாரிடம் மன்னிப்பு கேட்பது?" என்ற கௌரவப் போரில் காதலர்கள் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.

35
ஹாப்பி ராஜ் விமர்சனம்

ஜார்ஜ் மரியன்; இந்தப் படத்தின் உண்மையான நாயகன் இவர்தான் என்று சொல்லலாம். தன்னை உருவக் கேலி செய்பவர்களைக் கண்டு கலங்காத ஒரு கம்பீரமான ஆசிரியராகவும், மகனுக்காக ஏங்கும் தந்தையாகவும் மனதை நெகிழ வைக்கிறார். அப்பாஸ்; '90களின் சாக்லேட் பாய்' இப்போது ஒரு எலைட் அப்பாவாக கெத்தாகத் திரும்பியிருக்கிறார். அவரது உடல்மொழியும், அந்த மிதப்பான திமிரும் கேரக்டருக்குப் பொருத்தம்.

ஜிவி பிரகாஷ், நடனம், காமெடி எனத் தனக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் ஜார்ஜ் மரியன் ஸ்கோர் செய்ய, ஜிவி அவருக்கு நல்ல சப்போர்ட் கொடுத்திருக்கிறார். ஸ்ரீ கௌரி பிரியா, 'லவ்வர்' படத்தில் அசத்திய இவருக்கு இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். பல இடங்களில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்பிரஷன் காட்டியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

45
ப்ளஸ் மற்றும் மைனஸ்

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் உயிரோட்டம். இரண்டாம் பாதி காமெடி மற்றும் தந்தை-மகன் இடையிலான நகைச்சுவைக் காட்சிகள் ரகளையானவை. அந்தஸ்து குறித்த விவாதங்கள் மற்றும் கிளைமாக்ஸ் வசனங்கள் அருமை. இவையெல்லாம் ப்ளஸ் ஆக அமைந்துள்ளன.

மைனஸ் என்னவென்றால் மெதுவான முதல் பாதி; கதை சூடுபிடிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது. பழைய பாணி நகைச்சுவை ஆங்காங்கே வருகிறது. முதல் பாதியில் வரும் சில காமெடிகள் ஒட்டவில்லை. ஹீரோயினுக்கான முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது.

55
ஹாப்பி ராஜ் ரிவ்யூ

இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன், ஒரு எளிய கதையை கமர்ஷியல் அம்சங்களோடு கொடுக்க முயன்றிருக்கிறார். நவீன கலாச்சாரத்தையும், எலைட் மனப்பான்மையையும் பிரித்துக் காட்டிய விதம் பாராட்டுக்குரியது. குறிப்பாக, கிளைமாக்ஸில் எமோஷனலாக ஒரு ஜஸ்டிஃபிகேஷன் கொடுத்திருப்பது படத்தை ஒரு முழுமைக்குக் கொண்டு வருகிறது. படத்தில் ஆங்காங்கே இரட்டை அர்த்த வசனங்கள் எட்டிப்பார்த்தாலும், அவை எல்லை மீறாமல் நகைச்சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

'ஹாப்பி ராஜ்' - ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், இரண்டாம் பாதியில் சிக்ஸர் அடிக்கிறது. குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து கவலைகளை மறந்து சிரிக்க நினைப்பவர்கள் தாராளமாகத் தியேட்டருக்குச் செல்லலாம். உங்களுக்குத் தந்தை-மகன் பாசம் கலந்த காமெடி படங்கள் பிடிக்குமென்றால், இந்த ராஜ் உங்களை ஹாப்பியாக வைப்பான்!

Read more Photos on
click me!

Recommended Stories