நாங்க அம்மா வளர்த்த அண்ணன் -தம்பிகள்.. எல்லாத்தையும் மறந்துட்டோம்.. டிடிவி-இபிஎஸ் கூட்டாகப் பேட்டி..!

Published : Jan 23, 2026, 09:09 PM IST

இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களாக இருந்த எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை தான். இதில் எங்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்திருந்தது உண்மை.

PREV
14
இணைந்த இரு துருவங்கள்

இன்று மாலை மதுராந்தகத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்ட என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டம் முடிந்த பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் தினகரன், ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் பேசிய இபிஎஸ், ‘‘இது பொதுக்கூட்டமாக அல்ல. மாநாடாக பார்க்கப்படுகிறது. சுமார் 5 லட்சம் பேர் கலந்துகொண்டு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அதிமுக - தே.ஜ.கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும், எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கின்றபோது தமிழகத்திற்கு மத்தியில் இருந்து பல்வேறு திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுப்போம் என்று பிரதமர் கூறியிருக்கிறார். அதோடு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்.

24
நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள்

தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. போதையால் இளைஞர்கள் சீரழியும் காட்சி எங்கும் பார்க்கப்படுகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல், ஊழல் நிறைந்த ஆட்சி. திமுக ஒரு தீயசக்தி, குடும்ப ஆட்சி தலைவிரித்தாடுகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்தத் தேர்தல் அமையும். எங்களுடைய கூட்டணி வலிமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி. நாங்கள் ஆட்சி அமைக்கின்றபோது தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல தேவையான நடவடிக்கையை எடுப்போம்.

இரண்டு மாதம் முன்பு ஸ்டாலின் அவர்கள், அதிமுக கூட்டணி அமைக்கத் தடுமாறிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். தேசிய ஜனநாயக கூட்டணியிலே இன்றைய தினம் பாமக, அமமுக இன்னும் பல கட்சிகள் எங்களோடு இணைந்திருக்கின்றன, இன்னும் சில கட்சிகள் இணைய இருக்கின்றன. இப்போது தமிழகத்திலே வலிமையான கூட்டணி என்றால் அது அதிமுக - தே.ஜ.கூட்டணி…’’ என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இன்னும் சில கட்சிகள் என்றால் எந்தக் கட்சி? என்ற கேள்விக்கு இபிஎஸ், ‘‘வெளிப்படையாக எதுவும் பேச முடியாது. ஒவ்வொரு கட்சியும் எங்கள் கூட்டணியில் இணைகின்றபோது பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கின்றோம்’’ என்றார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு தினகரனுடன் இணைந்து பயணிக்கப்போகிறீர்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, ‘‘எப்படியாவது ஒரு குழப்பம் உண்டாக்கலாம் என்று முடிவெடுத்து கேள்வி கேட்கிறீர்கள். நானும், தினகரனும் ஒன்றாக இணைந்து செயல்படப்போகிறோம் என்று தெளிவுபடுத்தி விட்டோம். நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள். எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. எப்போது இணைந்தோமோ, அப்போதே எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். இனி அம்மா விட்ட பணியைத் தொடர வேண்டும் என்பதுதான் எங்களுடைய மற்றும் அவருடைய நிலைப்பாடு. ஊடக நண்பர்கள் அதற்குத் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

34
குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்

எனவே, தேவையில்லாமல் குழப்பம் விளைவிக்கும் கேள்வியைக் கேட்காதீர்கள், எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது மத்தியில் இருந்து நிறைய திட்டங்களைக் கொண்டுவருவீர்களா என்று கேளுங்கள். அதோடு, ஊழல் நிறைந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இன்று தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற அடிப்படையில் ஒத்தக் கருத்துடைய கட்சிகள் எல்லாம் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளோம். நிச்சயமாக அதிக இடங்களிலே வெற்றி பெறுவோம், 210 இடங்களில் வெல்வோம், கூடுமே தவிர குறையாது.

மக்கள் இந்த ஆட்சியை வெறுத்துவிட்டார்கள். தினந்தோறும் போராட்டம். தூய்மைப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், டாக்டர்கள் எல்லோரும் போராடுகிறார்கள். கலவரப் பூமியாகப் பார்க்கப்படுகிறது. மேலும், போதைப் பொருள் விற்காத இடமே இல்லை. சிறுமிகளுக்குப் பாதுகாப்பில்லை, முதியோருக்குப் பாதுகாப்பில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை, 6999 பாலியல் குற்றங்கள் நடந்திருக்கிறது. இந்த ஆட்சி எப்படி இருக்கிறது என்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

44
அச்சுறுத்தலோ அழுத்தமோ இல்லை

அன்புமணி ராமதாஸ் பேசும்போது, “திமுக ஆட்சியின் முடிவுக்கு மதுராந்தகம் தொடக்கமாக அமைந்துள்ளது. நாங்கள் பொதுக்கூட்டமாக நடத்த திட்டமிட்டோம், 5 லட்சம் பேர் பங்கேற்று மாநாடாக மாற்றிவிட்டனர். இன்னும் 2 மாதங்களில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். மத்திய அரசு மூலம் அத்தனை உதவிகளும் செய்து கொடுப்போம் என்று மோடிஜி உறுதி கொடுத்திருக்கிறார். இது மிகப்பெரிய தொடக்கம். தமிழ்நாட்டு மக்களும் திமுக ஆட்சியைத் தூக்கியெறியத் துணிந்துவிட்டனர்’’ என்றார்.

அதன் பின்னர் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், “திமுக 2021 தேர்தல் அறிக்கையில் 95% நிறைவேற்றவில்லை. இதை நாங்கள் மக்களிடம் கொண்டு செல்வோம். இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களாக இருந்த எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை தான். இதில் எங்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்திருந்தது உண்மை. ஆனால், அமித் ஷா அவர்கள் 2021லேயே இணைக்க முயற்சித்தார், நடக்காமல் போய்விட்டது.

2026ல் அமித் ஷா என்னிடம் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அன்றைக்கே நான் அதற்கு ஒப்புக்கொண்டுவிட்டேன். எடப்பாடி அண்ணன் அவர்களும் ஒப்புதல் அளித்த பின்னர் தான் கூட்டணி உருவானது. இதில் அச்சுறுத்தலோ அழுத்தமோ இல்லை. நாங்கள் இருவரும் அண்ணன் தம்பிகளாக 2017 ஏப்ரல் மாதம் வரை எப்படி இருந்தோமோ அதுபோல ஒன்றிணைந்துவிட்டோம். இனி ஒன்றாகவே செல்வோம். என்னதான் திரும்பத் திரும்பக் கிளறினாலும் பிரச்னையில்லை” என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories