
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களை சென்னைக்கே அழைத்து வந்து சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கரூரில் மண்டபம் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் இந்தத் திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்த பின்னர் தேதி முடிவு செய்யப்படும் என்றும் கூறுகின்றனர் தவெகவினர்.
கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு விஜய் உடனடியாக கரூருக்கு செல்ல முயன்றதாகவும், சட்டம்-ஒழுங்கு காரணமாக போலீஸ் அனுமதி மறுத்ததால் தாமதமாகி வருவதகாவும் கூறப்பட்டு வந்தது. அதன் பின், அக்டோபர் 6 முதல் அனைத்து 41 குடும்பங்களுடனும் வீடியோ அழைப்புகள் மூலம் பேசி ஆறுதக் தெரிவித்தார். கரூருக்கு நேரடியாகச்சென்று கடந்த 17ம் தேதி தீபாவளிக்கு முன் சந்திப்பு நடத்த திட்டமிட்டார் விஜய். வேலுசாமிபுரம் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அவர் செல்லவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கே வரவழைத்து சந்திக்கத் திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவ்வளவு பெரிய பிரச்னை நடந்த பிறகும், பல நாட்களாக வெளியே வராத விஜயால் அவரது கட்சித் தொண்டர்களே கடும் அதிருப்தியில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைக்கும் திட்டத்தால் வெறுத்துப்போன விஜய் ஆதரவாளர்களே, ‘‘இழவு வீட்டுக்குக்கூட நேரில் செல்ல மாட்டாரா விஜய்?’’ என விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தவெகவின் பெரும்பாலான நிகழ்வுகள் அக்கட்சியின் அலுவலகமான பனையூரிலேயே முடங்கி விடுகிறது. இதை எதிர்கட்சிகள் ‘பனையூர் அரசியல், பனையூர் பண்ணையார்’ எனக்கூறி விமர்சித்து வருகின்றனர். விஜய் பெரும்பாலும் இங்கிருந்தே அரசியல் செய்கிறார் என ஏகப்பட்ட விமர்சனங்கள். இது, வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் என்று கிண்டலடித்து வருகின்றனர். பனையூரை விட்டு வெளியே வந்து பொதுமக்களுடன் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும் என்கிற அழுத்தம் அதிகரித்து வருகிறது. அவரது கொள்கை தலைவர்களது பிறந்த நாள், நினைவு நாட்களில் கூட வெளியே வந்து அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யாமல், அவரது பனையூர் அலுவகலத்தில் உள்ள புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு அத்தோடு முடித்துக் கொள்கிறார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் 11வது நாளாக போராடிய தூய்மை பணியாளர்களை, தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பேசினார் விஜய். போராட்டக் களத்தில் நேரில் குதிக்காமல், போராட்டக்காரர்களை அலுவலகத்தில் வைத்து சந்தித்தது விமர்சனங்களைத் தூண்டியது. அப்போதே ‘பனையூர் அரசியல் இன்னும் எத்தனை நாட்களுக்கு தலைவரே?’ என்று தவெக தொண்டர்களே குமுறத் தொடங்கினர்.
தவெக செயற்குழுவில் கூட, ‘மக்களிடம் செல்.. மக்களிடம் வாழ்.. அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்’ என்ற அண்ணாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார் விஜய். “மதுரை மாநாட்டிற்குப் பிறகு மக்கள் சந்திப்பு பயணம்தான்.. இனி மக்களுடன்தான் வாழ்க்கை” என்று கூறினார்.
இப்படியெல்லாம் பேசிய விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே, ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்கிறார். கட்சி தொடங்குவதற்கு முன்னதாக, ஒரு நடிகராக போராட்டக்களங்களில், சமூக பிரச்னைகளில் நேரடியாக பங்கேற்ற விஜய், இப்போது கட்சி அலுவலகத்திற்குள்ளே ஏன் சுறுக்கிக்கொள்கிறார் என்று கேள்வியும் அவரைச் சூழ்கிறது.
நடிகராக இருந்தபோது ஈழப்பிரச்னைக்கு போராட்டம், காவிரி நதிநீர் பிரச்னையில் உண்ணாவிரதம், அனிதா மரணத்திற்கு நேரில் சென்று ஆறுதல், ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு என்று பல தருணங்களில் விஜய் தனது செயல்பாடுகளால் பாராட்டப்பட்டு இருக்கிறார்.
கட்சி தொடங்கிய பிறகு அவர் நேரடியாக பங்கேற்ற போராட்டக்களம் பரந்தூர் போராட்டம்தான். கட்சி தொடங்குவதற்கு முன்னதாக, 2023ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களை நேரில் சென்று நிவாரணம் வழங்கியவர், கட்சி தொடங்கிய பிறகு கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தின்போதும் நேரில் சென்று விசாரித்தவர்தான் இந்த விஜய்.
ஆனால் ஒரு தலைவனாகிய பிறகு கடந்த ஆண்டு இறுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்து நிவாரணம் வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது, நிவாரணம் வழங்குவதுதான் சாலச்சிறந்த நடவடிக்கை. ஆனால், அலுவலகத்திற்கு அழைத்து வந்து நிவாரணம் வழங்கியதால், பனையூர் பண்ணையார் என்று விமர்சித்தன எதிர்க்கட்சிகள். அந்த நேரத்தில் விஜய் சம்பவ இடத்திற்கு வந்தால், தேவையற்ற கூட்ட நெரிசல், பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்படும் என்று காரணங்கள் சொல்லப்பட்டன. உதவி தேவைப்படுவோருக்கு உதவி சென்று சேர்கிறதே. அந்த எண்ணமே போதும் என்றெல்லாம் சீமான்கூட வரவேற்றார். இதற்கு, விஜய்யின் கடைசி பட ஷூட்டிங் நெருக்கடிகள் எல்லாம் காரணமாக சொல்லப்பட்டன.
அந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த மே மாதத்தோடு முடிந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில், தூய்மை பணியாளர்களை விஜய் தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்து பேசியது விமர்சனத்தை ஏற்படுத்தியது. கரூரில் நடந்த மிகப்பெரிய சம்பவத்துக்கு , அவர் மீதே குற்றம்சாட்டப்பட்டபோதும், சம்பவம் நடந்த மூன்றாவது நாளில் அதே பனையூரில் உட்கார்ந்து கொண்டு வீடியோ வெளியிட்டார் விஜய். ‘‘நான் பனையூர் வீட்டில் இருப்பேன் அல்லது அலுவலகத்தில் இருப்பேன்’’ என அந்த வீடியோவில் கூறியிருந்தார். அடுத்த சில நாட்களிலாவது வெளியே வந்து கரூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 27 நாட்களை கடந்தும் அவர் வீடியோ காலில் பேசினாரே தவிர, இன்னும் கரூர் செல்வதில் குழப்பத்தில் இருக்கிறார். இப்போது பாதிக்கப்பட்டவர்களை பனையூர் அழைத்து வர திட்டமிட்டுள்ளார்.
2026ல் ஆட்சியை பிடிப்போம் என்று சூளுரைக்கும் விஜய், மக்கள் பிரச்னைக்காக, தம்மை பார்க்க வந்த 41 பேர் மரணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைக் கூட பார்க்கச் செல்லாமல், தான் இருக்கும் இடத்திற்கே அழைத்து வரத் திட்டமிட்டு இருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அரசியல், கட்சி என்று வந்துவிட்ட பிறகு, அவரால் பாதிக்கப்பட்ட மக்களைக் கூடச் சந்தித்து ஆறுதல்கூற கரூருக்கு சென்று சந்திக்க எது தடுக்கிறது? எத்தனை நாட்களுக்கு இந்த மென்மையான போக்கு? கையில் எடுத்து பேச வேண்டிய பிரச்னைகளை எல்லாம் கோட்டைவிட்டால் எப்படி? என்று தவெக ஆதரவாளர்களே சமூகவலைதளத்தில் அங்கலாய்ப்பத்தைப் பார்க்க முடிகிறது. மக்களிடம் செல்.. மக்களுடன் வாழ் என்று தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தும் விஜய், மக்களுடன் களத்தில் வந்து நிற்க தயங்குகிறாரா? என்ற கேள்வி எழுகிறது. தன் மீது விழும் விமர்சனங்களை விஜய் எப்படி உடைக்கப்போகிறார்? ஒருவேளை வாக்காளர்களையும் பனையூருக்கு வரவழைத்து வாக்களிக்கச் சொல்வாரோ? முதலமைச்சரானால் தலைமை செயலகத்தை பனையூருக்கு மாற்றி விடுவாரோ? என்றெல்லாம் கிண்டல்கள் காதுகளை கிழிக்கிறது.
கொஞ்சம் வெளியே வாங்க விஜய்..!