Kalaignar Birthday: இங்க் பேனா முதல் மீன் குழம்பு வரை..! கருணாநிதி பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்.!

Published : Jun 03, 2026, 01:58 PM IST

Unknown and Interesting Facts of Kalaignar Karunanidhi: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. பன்முகத் திறமையாளராக வலம் வந்த அவர் குறித்து தெரியாத சில தகவல்களை பார்க்கலாம்.

PREV
111
Unknown and Interesting Facts of Kalaignar Karunanidhi

தமிழக அரசியலில் அழியாத முத்திரையை பதித்த தலைவர்களில் முக்கியமானவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், பேச்சாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் தனித்துவம் காட்டிய அவர் குறித்து பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

211
இங்க் பேனா மீது அளவில்லா ஈடுபாடு

கலைஞரின் வாழ்க்கையில் எழுத்துக்கு தனி இடம் இருந்தது. தொழில்நுட்பம் வளர்ந்த பிறகும், அவர் பெரும்பாலும் மை நிரப்பும் பேனாக்களையே பயன்படுத்த விரும்பினார். குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்படும் ‘Wality 69T’ மாடல் பேனா அவருக்குப் பிடித்தமானதாக இருந்ததாக கூறப்படுகிறது. நிறைய இங்க் ஊற்றும் வண்ணம் அளவில் பெரியதாகவும், இங்க் அளவு வெளியில் தெரியும் வண்ணம் கண்ணாடி அமைப்பில், வண்ண மூடிகளுடன் இந்த பேனா மிக அழகாக இருக்கும். இதன் விலை ஆரம்பத்தில் ரூ.150 என இருந்த நிலையில், கருணாநிதி மறைவுக்குப் பின்னர் பலரும் வாங்க தொடங்கியதால் தற்போது ரூ.1,000-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.

311
மஞ்சள் துண்டு எப்படி அடையாளமானது?

கருணாநிதியை நினைத்தாலே மஞ்சள் நிறத் துண்டு நினைவுக்கு வரும். ஆரம்ப காலங்களில் அவர் பெரும்பாலும் வெள்ளை நிறத் துண்டுகளை பயன்படுத்தியிருந்தாலும், பின்னர் மஞ்சள் நிறத் துண்டு அவரது நிரந்தர அடையாளமாக மாறியது. அரசியல் நிகழ்வொன்றில் கிடைத்த அந்த நிறத் துண்டை தொடர்ந்து அணிந்ததே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி என்பதாலும், மஞ்சள் குரு பகவானுக்கு உகந்தது என்பதாலும் அவர் மஞ்சள் துண்டு அணிந்தார் என கூறுவதுண்டு. ஆனால் கூட்டணி பேச வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமகவின் பிரதான நிறமான மஞ்சள் நிறத்துடன் கூடிய துண்டை கருணாநிதிக்கு அணிவித்தது முதல், அதை தன்னுடைய அடையாளமாக மாற்றிக்கொண்டார்.

411
மீன் உணவின் மீது தனி விருப்பம்

டெல்டா பகுதியைச் சேர்ந்த கருணாநிதிக்கு கடல் உணவுகள் மிகவும் பிடித்தமானவை. குறிப்பாக வீட்டில் தயாரிக்கப்படும் மீன் குழம்பை ரசித்து சாப்பிடுவார். தனது மனைவி தயாளு வைக்கும் மீன் குழம்பு என்றால் அவருக்கு கொள்ளை விருப்பமாம். மற்ற இறைச்சிகளை விட மீன் மற்றும் கடல் உணவுகளை விரும்பி சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்தார். வயது அதிகரித்த பின்னர் உடல்நலக் காரணங்களால் அசைவ உணவுகளை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

511
எப்போதும் கைவிடாத பவள மோதிரம்

கருணாநிதியின் கையில் அடிக்கடி காணப்பட்ட பவள மோதிரத்துக்கும் ஒரு சிறப்பு வரலாறு உள்ளது. திமுக முதல் முறையாக தேர்தலில் களம் இறங்கிய போது, பொருளாளராக இருந்த கருணாநிதி, தேர்தல் நிதியாக ரூ.11 லட்சம் திரட்டி கொடுத்ததற்காக அறிஞர் அண்ணா அளித்த பரிசு தான் அந்த பவளம் மோதிரம். கருணாநிதி இறக்கும் வரை அவரது கைகளில் அந்த மோதிரத்தை அணிந்திருந்தார்.

611
போண்டா மற்றும் காபி மீது பிரியம்

உணவு கட்டுப்பாட்டில் மிகவும் கவனமாக இருந்தாலும், சில உணவுகள் மீது அவருக்கு தனி விருப்பம் இருந்தது. குறிப்பாக காபியுடன் போண்டா சாப்பிடுவதை அவர் விரும்பியதாக அவரது நெருங்கியவர்கள் பலமுறை குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரங்களின் போது கூட, ஹோட்டல்களில் சாப்பிடாமல் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டிற்குச் சென்று, அவர்கள் வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடுவார். இருப்பினும் அண்ணா அறிவாலயம் அருகில் இருக்கும் ஆனந்த பவன் ஹோட்டல் போண்டா என்றால் அவருக்கு அதிக பிரியம். உதவியாளர்களை அடிக்கடி அனுப்பி போண்டா வாங்கி வரச் சொல்லி விரும்பி சாப்பிடுவாராம்.

711
மீன் வளர்ப்பில் ஆர்வம்

செல்லப்பிராணிகள் மற்றும் அலங்கார மீன்கள் வளர்ப்பதில் கருணாநிதிக்கு அதிக ஈடுபாடு இருந்தது. அவர் இருந்த இடங்களில் மீன் தொட்டிகள் அமைத்து அவற்றை பராமரிப்பதில் ஆர்வம் காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓமாந்தூரார் அரசினர் வளாகத்தில் கட்டிய புதிய சட்டசபையில் சிறு நீச்சல் குளம் அமைத்து, அதில் மீன்கள் வளர்த்து வந்தார். தினமும் சட்டசபைக்கு வரும்போது மீன்களுக்கு உணவு அளித்துவிட்டு, அதை சில மணி அமர்ந்து நேரம் பார்த்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

811
கைக்கடிகாரத்தின் தனித்துவம்

கருணாநிதி கைக்கடிகாரம் அணிவதில் தனித்துவமான பழக்கத்தை கொண்டிருந்தார். புதிய மற்றும் விலையுயர்ந்த மாடல்களை விட பழக்கமான வடிவமைப்புகளையே தொடர்ந்து பயன்படுத்தினார். கருணாநிதி வழக்கமாக அணிவது போல் அல்லாமல், பின்பக்கமாக கைக்கடிகாரம் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். ஆரம்பத்தில் கருப்பு நிறப் பட்டையில் கை கடிகாரம் அணிந்து வந்த அவர், பின்னர் சிகப்பு நிற பட்டையை அணிவதை வழக்கமாக்கி கொண்டார்.

911
நாய்கள் மீது பாசம்

கருணாநிதிக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்றால் மிக பிடிக்கும். ஆலிவர் ரோடு இல்லத்தில் குடியிருந்தபோது பிளாக்கி என்னும் நாயை வளர்த்திருக்கிறார். அது இறந்த பின்னர் வீட்டு வாசலிலேயே புதைத்து அந்த இடத்தில் ஒரு செடியையும் வளர்த்திருக்கிறார். அதன் பின்னர் சில நாய்களை வளர்த்து வந்த அவர், பின்னர் நாய்கள் வளர்ப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.

1011
கருப்புக் கண்ணாடியின் பின்னணி

கலைஞரின் அடையாளங்களில் ஒன்றாக கருப்பு நிறக் கண்ணாடி இருந்தது. வெளியூருக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கிய கருணாநிதியின் இடது கண் பலத்த சேதமடைந்தது. இதற்காக அந்த கண்ணில் மட்டும் 12 முறை அறுவை சிகிச்சை செய்யப்படிருக்கிறது. அதன் பின்னர் தொடர்ந்து அவர் கருப்பு கண்ணாடி அணியத் தொடங்கினார். பின்னர் அது அவரது தோற்றத்தின் பிரிக்க முடியாத அம்சமாக மாறியது. கண்ணாடி இல்லாமல் கருணாநிதியை பார்ப்பது என்பது அரிதான காரியங்களில் ஒன்று.

1111
சக்கர நாற்காலியிலும் தொடர்ந்த சேவை

2005-ம் ஆண்டு முதுகு வலி காரணமாக, முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடப்பதில் சிரமம் ஏற்பட்டதால் கருணாநிதி சக்கர நாற்காலியை பயன்படுத்த வேண்டிய நிலை உருவானது. இருப்பினும், அரசியல் மற்றும் இலக்கியப் பணிகளை அவர் தொடர்ந்து மேற்கொண்டார். 50 ஆண்டுகளாக இந்தியாவின் அரசியலை நிர்ணயித்த அந்த தலைவரின் சக்கர நாற்காலி அவருக்குப் பின்னர் நிரந்தர ஓய்வுக்குச் சென்றது.

Read more Photos on
click me!

Recommended Stories