மதுரை மாநாட்டிற்கு முன்பு, விநாயகர் சதுர்த்தி காரணமாக பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் இருப்பதாக காவல்துறை தெரிவித்ததால் மாநாடு தேதி ஆகஸ்ட் 25-லிருந்து ஆகஸ்ட் 21-ஆக மாற்றப்பட்டது.
இந்நிலையில், தவெக மாநாட்டில் 1.5 லட்சம் இருக்கைகள் போட திட்டமிடப்பட்டடு 5 நபர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் 4 ஒப்பந்ததாரர்கள் இருக்கைகள் தர முடியாது என்று கூறியதால் கேரளாவில் இருந்து நாற்காலிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவும் ஆளும்கட்சியினர் கொடுத்த நெருக்கடியாக இருக்கலாம் என தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பாரபத்தியில் நடைபெறும் 2வது மாநாட்டிற்கு டாஸ்மாக் கடைகளை மூடுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார், ஆனால் அந்த அறிவிப்பு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. தற்போது மாநாடு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகிறது. பிரமாண்டமான மேடை அமைப்புகள், அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் கட்-அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் தலையீடு குறித்து உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றாலும், தவெக ஆதரவாளர்கள் இந்த தடங்கல்களை திமுகவின் மறைமுக எதிர்ப்பாக பார்க்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லலை.
அக்டோபர் 2024-ல் விக்கிரவாண்டியில் நடந்த தவெகவின் முதல் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியதாகவும், ஆளும் கட்சியின் செல்வாக்கால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் முன்பு குற்றம்சாட்டப்பட்டது.