இதைக் கண்டு அதிர்ந்த அம்முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘‘தென் மாவட்டங்களில் ஒற்றுமையை குலைக்கும் வகையில் இபிஎஸ் இந்த வெற்று வாக்குறுதியை தந்துள்ளார்”என்று பேசினார். ஆனால், “தேவருக்கு பெருமை சேர்ப்பது தினகரனுக்கு பிடிக்கவில்லை”என்று அச்சமூக மக்களே தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். தங்கள் சொந்த சுயலாபங்களுக்காகவும், கோஷ்டி அரசியலுக்காகவும், திமுகவை ஆட்சியில் அமரவைப்பதற்காகவும் தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் முக்குலத்தோர் சமூகத்தைப் பயன்படுத்துவதை அந்த மக்கள் உணர்ந்துகொண்டனர். இதன் விளைவாக எடப்பாடி பழனிசாமிக்கு, இந்த ஆண்டு பசும்பொன்னில் மிகச்சிறப்பான வகையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தேவர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை மடைமாற்றி, தாங்கள் கூட்டணிக்கான அரசியல் களமாக சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் போன்றவர்கள் மாற்றியதை யாரும் ரசிக்கவில்லை. அந்த புனிதமான இடத்தில் தேவையற்ற அரசியல் கருத்துகளை பேசாமல் நகர்ந்த எடப்பாடியார் மீது மக்களுக்கு அபிமானம் கூடியிருக்கிறது. அதன்பிறகு மதுரைக்குச் சென்று அரசியல் எதிரிகளின் துரோகத்தால் 2021 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்கூறினார்.
மத்தியில் பாஜக அரசில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, சட்டமன்ற தேர்தலுக்குள் தேவர் பெருமகனாருக்கு பாரத ரத்னா விருது கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு முக்குலத்தோர் சமூகத்தினருக்கு வரும் தேர்தலில் அதிக முக்கியத்துவம் தரும் வகையில் தேர்தல் அறிக்கை தீட்டுவதற்கு வியூகம் வகுத்துவருகிறார்’’ என்கிறார்கள்.