2021 தேர்தலில் திமுக 133 இடங்களைப் பெற்றது. இந்நிலையில் 200 தொகுதிகளில் இந்த முறை வெல்ல வேண்டும் என்கிற இலக்கை நிர்ணயித்டுள்ளது திமுக தலைமை. புதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் உத்தியை கையில் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மூன்று முறை எம்எல்ஏ-வாக பதவி வகித்தவர்களுக்கு இந்த முறை சீட் இல்லை எனிற முடிவை திமுக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2021ல் ஆட்சியை பிடித்த திமுக நான்கரை ஆண்டுகளை கடந்துள்ளது. ஆட்சி நிறைவடைய உள்ள நிலையில் அமலாக்கத் துறை சோதனை, நிதி பற்றாக்குறை, சட்டம் - ஒழுங்கு பிரச்னை என பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், 2026 சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான பணிகளையும், திமுக தலைமை முழுவீச்சாக தொடங்கி விட்டது. தேர்தல் வியூகம் வகுப்பதற்கு ஒரு நிறுவனம், தொகுதி அரசியல் நிலவரங்களை ஆராய்ந்து சொல்வதற்கு ஒரு நிறுவனம், சமூக வலைதளங்களில் பிரசாரங்களை முன்னெடுக்க, ஒரு நிறுவனம் என மூன்று நிறுவனங்கள் திமுகவுக்கு வேலை செய்து வருகின்றன. இதில், 2021 சட்டசபை தேர்தலில் பணியாற்றிய நிறுவனத்திற்கும், சமீபத்தில் இணைந்துள்ள இந்நிறுவனத்திற்கும், சென்னை அண்ணா சாலையில் அலுவலகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அரசியல் நிலவரங்களை ஆராய்ந்து சொல்லும் நிறுவனம் வழியாக, தொகுதி வாரியாக பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.