தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, கடந்த காலத் தோல்விகளில் இருந்து மீண்டு, கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த முறை ஒரு பெரிய அரசியல் ஆபரேஷனுக்கு திட்டமிட்டிருந்தார். "பழைய முகங்களை மாற்றி, இளைய ரத்தம் பாய்ச்சுவோம்" என்பதுதான் அவருடைய மாஸ்டர் பிளான். ஆனால், இந்தத் திட்டத்திற்கு பாஜக டெல்லி தலைமை 'ரெட் கார்டு' காட்டியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
24
எடப்பாடியின் 'ரிஸ்க்' அரசியல்!
அதிமுகவில் பெரும்பாலான தொகுதிகளில் இளைஞர்களுக்கும், புது முகங்களுக்கும் வாய்ப்பு கொடுத்து, ஒரு புதிய பிம்பத்தை உருவாக்க இபிஎஸ் விரும்பினார். குறிப்பாக, விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' இளைஞர்களைக் கவர்ந்து வரும் வேளையில், அதற்குப் போட்டியாக அதிமுகவும் இளமைத் துடிப்புடன் இருக்க வேண்டும் என அவர் கருதினார். இது குறித்து டெல்லியில் பாஜக தேசிய தலைமையுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டபோது தான் அந்த 'ட்விஸ்ட்' நடந்திருக்கிறது.
34
அமித் ஷாவின் 'செக்' - சீனியர்கள் தான் பலமா?
டெல்லி மேலிடத்தைப் பொறுத்தவரை, இது சோதனைகளுக்கான நேரம் இல்லை; வெற்றிக்கான நேரம் என்று கருதுகிறது. ஏற்கனவே பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா எனப் பல முக்கியத் தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி அல்லது ஓரங்கட்டப்பட்டு இருக்கும் சூழலில், இருக்கும் சீனியர்களையும் பகைத்துக் கொள்வது தற்கொலைக்குச் சமம் என அமித் ஷா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
"ஜெயலலிதா காலத்து எம்எல்ஏக்கள், தொகுதிப் பரிச்சயம் உள்ளவர்கள் மற்றும் ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனியர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். புது முகங்களால் கள எதார்த்தத்தைச் சமாளிப்பது கடினம்" என அமித் ஷா வெளிப்படையாகவே இபிஎஸ்-ஸிடம் சொன்னாராம். புது ரத்தம் பாய்ச்சுகிறேன் என்று சொல்லி, இருக்கும் சீனியர் 'ரத்தங்களை' கொதிக்க வைத்தால், அது தேர்தல் வேலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது டெல்லியின் கணக்கு.
டெல்லியின் இந்த 'அட்வைஸ்' எடப்பாடி பழனிசாமிக்குச் சற்று முட்டுக்கட்டையாகவே அமைந்துள்ளது. 50 சதவீதத்திற்கும் மேலான தொகுதிகளில் புது முகங்களை நிறுத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், இப்போது அந்தப் பட்டியல் சுருங்கியிருக்கிறது. தற்போதைய தகவல்களின்படி, அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் வெறும் 10 முதல் 15 சதவீதப் பேர் மட்டுமே புது முகங்களாக இருக்க வாய்ப்புள்ளதாம்.
மற்றபடி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கே மீண்டும் மகுடம் சூட்டப்படும் நிலை உருவாகியுள்ளது. இது கட்சிக்குள் இருக்கும் இளைஞர் அணியினரிடையே ஒருவிதத் தொய்வை ஏற்படுத்தினாலும், சீனியர்கள் மத்தியில் ஒருவித நிம்மதியைக் கொடுத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் தனது தனி முத்திரையைப் பதிக்கத் துடிக்கிறார். இன்னொரு பக்கம் பாஜக டெல்லி தலைமை 'பாதுகாப்பான' அரசியலை வலியுறுத்துகிறது. விஜய்யின் அரசியல் வருகை, திமுகவின் பண பலம் எனப் பல சவால்களுக்கு நடுவே, அதிமுக இந்த 'சீனியர்' கார்டை வைத்து எப்படி ஜெயிக்கப் போகிறது என்பதுதான் 2026-ன் மிகப்பெரிய கேள்வி.