சேலம் மாவட்டம் எடப்பாடி வடக்கு ஒன்றியம் இருப்பாளி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 1500க்கும் மேற்பட்டோர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இதையடுத்து கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி;- இன்றைய அரசாங்கம் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்துள்ளனர். 2 ஆண்டு கால ஆட்சியில் என்ன திட்டங்கள் கொண்டு வந்தனர். குடும்ப ஆட்சியாகவும், தமிழகத்தில் சர்வதிகார ஆட்சியாகவும் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, வந்த பின் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடுகிறது திமுக என இபிஎஸ் குற்றம்சாட்டினார்.
திராவிட மாடல் ஆட்சியில் விடியல் பிறக்கும் என அழகாக பேசி தற்போது விடியாமல் செய்துவிட்டனர். தமிழ்நாடு மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சரல்ல பல முதலமைச்சர் ஆட்சி செய்கின்றனர். விலையில்லா மடிக்கணினி, அம்மா மினி கிளினிக்குகள் உள்ளிட்ட திட்டங்கள் திமுக அரசு முடக்கிவிட்டது.
அதிமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டன. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. திமுக ஆட்சியில் இதுவரை 58 பாலியல் வன்கொடுமைகள் நடத்துள்ளன. தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை. சிறையில் உள்ள ஒருவர் அமைச்சராக நீடிப்படை பார்த்து நாடே எள்ளி நகையாடுகிறது என விமர்சித்தார்.
மேலும் சிறைவாசியாக உள்ள ஒருவரை எப்படி மாண்புமிகு அமைச்சர் என சொல்ல முடியும்? செந்தில் பாலாஜி ஏதாவது வாக்குமூலம் கொடுத்துவிட்டால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்படாமல் உள்ளது. முதலமைச்சர் விழித்துக் கொண்டு, செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து விடுவித்தால் மக்கள் பாராட்டுவார்கள். இல்லையென்றால், வருகின்ற தேர்தலில் மக்கள் தகுந்த தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என இபிஎஸ் பேசியுள்ளார்.