மூத்த அமைச்சர் துரைமுருகனை பார்க்காத ஸ்டாலின்? பதறிப்போய் செந்தில் பாலாஜியை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளாசல்..!

First Published | Jul 1, 2023, 7:02 AM IST

ஊழலுக்காக கைதான செந்தில் பாலாஜியை மட்டும் பதறிப்போய் ஸ்டாலின் மருத்துவமனையில் சந்தித்தது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே போடிநாயக்கன்பட்டியில் அதிமுக கொடியை ஏற்றிவைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகையில்;- அமைச்சர் செந்தில் பாலாஜி, பல்வேறு வகைகளில் அதிகமான தொகையை ஊழல் செய்து  முதல்வரின் குடும்பத்திற்கு வழங்கிய காரணத்தினாலேயே அவரை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் உடன் இருந்து கவனித்து கொள்கிறார்கள். திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாலின் நேரில் சென்று சந்திக்காதது ஏன்? 

ஊழலுக்காக கைதான செந்தில் பாலாஜியை மட்டும் பதறிப்போய் ஸ்டாலின் மருத்துவமனையில் சந்தித்தது ஏன்? ஊழல் பற்றி கூறி விடுவாரோ என்ற அச்சத்தில் முதல்வர், அமைச்சர்கள் செந்தில் பாலாஜியை சந்தித்து வருகின்றனர்.

Tap to resize

செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் அல்ல, மற்ற அமைச்சர்களின் பதவிக்கும் ஆபத்தாகி விடும். திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது. டாஸ்மாக் பார்களை டெண்டரே விடாமல் முறைகேடாக பல்லாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர். டாஸ்மாக்கில் மதுபான பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்து நளொன்றுக்கு ரூ.10 கோடி வரை வசூல் நடந்துள்ளது என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

கடலில் ரூ.82 கோடி செலவில் எழுதாத பேனா சின்னம் தேவையா? மக்களின் வரிப் பணத்தை செலவழித்து கருணாநிதிக்கு விளம்பரம் தேடுகிறார் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த 11 மருத்துவக் கல்லூரிகளை வெறுமனே ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் ஸ்டாலின். ஸ்டாலின் குடும்பத்தின் ரூ.30,000 கோடி ஊழலை அம்பலப்படுத்தியது திமுக அமைச்சர் தான். ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை சம்பவங்கள், போதை பொருட்கள் நடமாட்டம், போலி மது விற்பனை அதிகரித்து வருகிறது. இதை வைத்து பார்த்தால், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்துவிட்டது என விமர்சனம் செய்தார்.

விவசாயிகளுக்கு எந்தெந்த வகையில் நன்மை செய்ய முடியுமோ அத்தனை வகையிலும் நன்மை செய்தது அதிமுக அரசு. மேட்டூர் அணை தண்ணீரை கடைமடை வரை சிறப்பாக கொண்டு போய் சேர்த்தது அதிமுக அரசு. ஆனால், திமுக அரசு விவசாயம் தொடர்பான தொழில்களை காக்க எவ்வித முறையான நடவடிக்கையும் எடுக்காது வேளாண் பெருமக்களை ஏமாற்றி வருகிறது. தென்னை விவசாயிகள் விடியா அரசு திமுக ஆட்சியில் வாழ்விழந்து நிற்கும் அவலம் தமிழகத்தின் சாபக்கேடாகும். 

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் முதியோர் உதவித் தொகை வீடு தேடி வரும். முதியோர்களையும் கூட விட்டு வைக்காமல் அவர்களையும் பழிவாங்கி வருகிறது விடியா திமுக அரசு. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிமராத்து திட்டத்தை விடியா திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. அதிமுக ஆட்சி கொண்டு வந்த திட்டங்களால் நிலங்களின் மதிப்பும் வெகுவாக உயர்ந்துள்ளது என இபிஎஸ் கூறியுள்ளார்.

Latest Videos

click me!