இப்படி குமரி தொடங்கி சென்னை வரையில் நீண்ட பெயர் பட்டியல் பேச்சில் இருக்கிறது. இவர்களை எல்லாம் தான் தவெகவும்,செங்கோட்டையனும் குறி வைக்கிறார்கள். அதிமுக மட்டுமல்ல தேர்தல் நெருங்கும்போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களுடன் பேசலாம் என்ற எண்ணத்தில் தவெக இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களை எல்லாம் இழுப்பதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க திட்டமிட்டு இருக்கிறது தவெக. பிரதான கட்சிகளின் நிர்வாகிகளுக்கு அந்த கட்சிகளில் சீட் கிடைப்பது சவால் என்றால், தவெகவுக்கு 234 தொகுதிகளிலும் முகாம் தெரிந்த வேட்பாளர்களை கண்டுபிடித்து நிறுத்துவது பெரும் சவால்.
ஆகையால் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு இடங்களை அதாவது சுமார் 80 தொகுதிகளை வேறு கட்சியில் இருந்து வருபவர்களுக்கு தரும் உத்திக்கு தயாராகிறது தகெக. கோவை மண்டலத்தில் இருந்து இந்த பணி தொடங்கும். செங்கோட்டையன் அதன் தள கர்த்தராக இருப்பார் என்று சொல்கிறார்கள். அதிமுகவிலிருந்து தவெகவுக்கு சென்ற செங்கோட்டையன் தவெகவுக்கு என்ன அனுகூலங்களை எதிர்காலத்தில் பெற்று தருவார் என்று தெரியவில்லை. ஆனால் அதிமுகவுக்கு குடைச்சலாக மாறிக் கொண்டிருப்பார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது