திமுகவில் விஸ்வரூபம் எடுக்கும் ஓ.பி.எஸ் குடும்பம்..! அதிமுகவில் இணையும் தங்க. தமிழ்ச்செல்வன்..?

Published : Mar 06, 2026, 02:51 PM IST

தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அதிமுகவை நோக்கித் திரும்பும் முடிவு தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். ஒருவேளை இந்த மாற்றம் நிகழ்ந்தால், தேனி மாவட்ட அரசியல் களம் சூடுபிடிக்கும்

PREV
16
தேனி மாவட்ட அரசியலில் திடீர் திருப்பம்

தமிழக அரசியலில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத மாவட்டம் தேனி. "அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை" என்ற பழமொழிக்கு ஏற்ப, தேனி மாவட்ட அரசியல் தற்போது ஒரு மிகப்பெரிய திருப்பத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, திமுகவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தங்க தமிழ்செல்வன், மீண்டும் தனது 'தாய் கழகமான' அதிமுகவிற்கே திரும்பப் போவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

26
தங்க தமிழ்ச்செல்வனின் அரசியல் தியாகம்

தங்க தமிழ்ச்செல்வன் தமிழக அரசியலில் ஒரு தனித்துவமான அடையாளம் கொண்டவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது அவர் கொண்டிருந்த விசுவாசம் அளப்பரியது. 2002-ம் ஆண்டு ஊழல் வழக்குகளால் பதவி இழந்த ஜெயலலிதா, மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகி முதல்வராகப் பதவியேற்க வேண்டிய சூழல் உருவானது. அப்போது, எவ்விதத் தயக்கமுமின்றி தனது ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, தனது தொகுதியையே ஜெயலலிதா போட்டியிடுவதற்காக விட்டுக்கொடுத்தவர் தங்க தமிழ்ச்செல்வன். இந்தத் தியாகம் அதிமுக வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

36
தங்க தமிழ்செல்வனின் அரசியல் மாற்றங்கள்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகளின்போது, அவர் டிடிவி.தினகரனுடன் இணைந்து அமமுகவில் செயல்பட்டார். பின்னர், அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்தார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். தேனி மாவட்டத்தில் திமுகவின் முகமாக அவர் உருவெடுத்தார்.

46
ஓபிஎஸ் - திமுக நெருக்கத்தால் அதிருப்தி

தற்போது தேனி மாவட்ட திமுகவில் ஒரு புதிய நெருக்கடி உருவாகியுள்ளது. அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார்.

முக்கியமாக, வரும் தேர்தல்களில் ஓபிஎஸ்ஸுக்கு சட்டமன்ற (MLA) சீட்டும், அவர் வெற்றி பெற்றால் சபாநாயகர் அல்லது முக்கிய பதவி, அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் வழங்க திமுக தலைமை வாக்குறுதி அளித்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. ஓபிஎஸ் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவருமே தேனி மாவட்டத்தின் செல்வாக்கு மிக்க தலைவர்கள். ஒரே கட்சியில் இருந்தபோதும் மாற்றுக் கட்சியில் இருந்தபோதும் எதிரெதிர் அரசியலில் ஈடுபட்டு வந்தவர்கள்.

56
ஏன் இந்த அதிரடி முடிவு?

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்ததே ஓபிஎஸ்ஸின் ஆதிக்கத்தை எதிர்க்கத்தான். ஆனால், இப்போது திமுக தலைமையே ஓபிஎஸ் குடும்பத்திற்குத் தொகுதிகளையும், முக்கியத்துவத்தையும் அள்ளி வழங்கும் பட்சத்தில், கட்சியில் தனது செல்வாக்கு அடியோடு சரிந்துவிடும் என அவர் கருதுகிறார். ஏற்கனவே எம்பியாக இருக்கும் இனி தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது என்றும், ஓபிஎஸ் குடும்பத்தின் ஆதிக்கம் ஓங்கும் என்றும் அவர் அஞ்சுகிறார்.

யாரிடம் அரசியல் ரீதியாகப் பல ஆண்டுகளாக மோதினாரோ, அவருடனேயே ஒரே கூட்டணியில், அதுவும் அவருக்குக் கீழே இயங்குவது அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

66
அதிமுகவிற்குத் திரும்பும் தங்க தமிழ்ச்செல்வன் ?

தற்போதைய சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு தேனி மாவட்டத்தில் ஒரு வலுவான மற்றும் செல்வாக்குள்ள முகம் தேவைப்படுகிறது. தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அதிமுகவிற்கு வந்தால், அது கட்சிக்கு அந்தப் பகுதியில் மீண்டும் புத்துயிர் தரும். அவரும் தனது பழைய கோட்டையைத் தக்கவைத்துக் கொள்ளவும், தனது அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் இதுவே சரியான தருணம் எனக் கருதுகிறார்.

தேனி மாவட்ட அரசியல் சதுரங்கத்தில் காய்கள் வேகமாக நகர்த்தப்படுகின்றன. விசுவாசத்திற்கும் அதிகாரப் போட்டிக்கும் இடையிலான இந்த போராட்டத்தில், தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அதிமுகவை நோக்கித் திரும்பும் முடிவு தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். ஒருவேளை இந்த மாற்றம் நிகழ்ந்தால், தேனி மாவட்ட அரசியல் களம் சூடுபிடிக்கும்

Read more Photos on
click me!

Recommended Stories