
கிறிஸ்தவர்களின் வாக்குகளை கவரும் திமுகவின் வியூகங்கள் தமிழ்நாட்டு அரசியலில் நீண்டகாலம் தொட்டே நடந்து வருகிறது. பாரம்பரிய சிறுபான்மையினர்களான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆதரவைப் பெற அவர்களின் காவலனாக திமுக தன்னைக் காட்டிக் கொண்டு வருகிறது. இது வாக்கு வங்கி அரசியல் என்ற விமர்சனங்கள் எழுந்தாலும் தவெக வருகைக்குப்பின் திமுக அதை இன்னும் அழுத்தமாக செய்து வருகிறது. காரணம், ‘ஜோசப்’ விஜய். திமுக தலைவர்கள் முன்னெப்போதையும்விட, இன்னும் அடிக்கடி கிறிஸ்தவ திருச்சபை தலைவர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
சமீபத்தில் அற்புத பெருவிழா நிகழ்ச்சிகள் திமுக ஆதரவுடன் நடைபெற்றன. விஜயின் தவெக கட்சிக்கு வாக்குகள் செல்லாமல் தடுப்பதே திமுகவின் நோக்கம். இந்நிலையில் இன்னும் வீரியமாக, கிறிஸ்தவர்களின் வாக்குகளை அறுவடை செய்ய களமிறங்கி இருக்கிறது திமுக தலைமை.
திமுக சபாநாயகர் அப்பாவு போன்றோர் "திமுக ஆட்சி அமைய கிறிஸ்தவர்களின் ஆதரவே காரணம்" என்று பகிரங்கமாகக் கூறி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளின் போதும் இதே கருத்தை ஓபனாகவே கூறி இறங்கி அடிக்கிறார். இது கிறிஸ்தவ சமூகத்தில் நன்றியுணர்வை ஏற்படுத்தும் திமுகவின் வியூகமாகப் பார்க்கப்படுகிறது.
கிறிஸ்தவ மிஷனரிகள் கல்வி, சமூகநீதி ஆகியவற்றில் ஆற்றிய பங்கை திமுக அரசு அடிக்கடி பாராட்டி வருகிறது. எஸ்ரா சர்குனம் போன்ற சர்ச்சைக்குரிய கிறிஸ்தவ தலைவருக்கு சென்னையில் சாலை பெயர் சூட்டியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்க வேண்டும், கிறிஸ்தவ பள்ளிகளுக்கு மானியம், தேவாலய கட்டுமானங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தி வருகிறது. இதெல்லாம் சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்கும் என்று திமுக பரிந்து பேசி வருகிறது. விஜயின் அரசியல் வருகையால் கிறிஸ்தவர்களின் ஓட்டு தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பதற்றம் திமுகவை சூழ்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. விஜய் பக்கம் கிறிஸ்தவர்கள் ஓட்டு ஒன்று கூட சென்றுவிடக்கூடாது. மொத்தமாக வளைக்க வேண்டும் என பல வேலைகளில் இறங்கி இருக்கிறது திமுக தலைமை.
இந்நிலையில்தான், மனித நேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவை அறிவித்திருக்கிறது திமுக. வரும் 20ம் தேதி, திருநெல்வேலி டக்கராம்மாள்புரத்தில் நடைபெறும் இண்ட விழாவில் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பட்டாளமே பங்கேற்கிறது. விழாவை நடத்துவது திருச்சி இனிக்கோ இருதயராஜ். ஆனால், விழா நடக்கவிருப்பது நெல்லை. திருச்சிக்காரர் நெல்லையில் விழா நடத்துவதும், நெல்லைக்காரர் திருச்செங்கோட்டில் நிகழ்ச்சி நடத்துவதும் திமுகவில்தான்.
விஜயை கிறிஸ்துவர் என்று அடையாளப்படுத்தி, கிறிஸ்துமஸ் விழாவை அவரை வைத்து நடத்தி, கிறிஸ்துவர்கள் வாக்குகளை மடைமாற்ற, தவெக யோசிக்கும்போதே, விழாவை அறிவித்து முடித்திருக்கிறது திமுக. திமுகவின் மிகப்பெரிய ஓட்டு வாங்கிய கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தான். அப்படி கிறிஸ்துவ வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக திருச்சியை சேர்ந்த இனிக்க இருதயராஜை அழைத்துக் கொண்டு சென்று அதிக கிறிஸ்துவர்கள் உள்ள பகுதியான நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்தவர்களைக் கொண்டு முதல் கட்டமாக இந்த விழா இங்கு நடத்தப்படுகிறது. இந்த விழாவில் எப்போதும் இல்லாத வகையில் அனைத்து பாதிரியார்களின் பெயர்களும் இந்த விழாவின் பத்திரிகையில் அச்சடித்து இருக்கிறார்கள்.
திமுக தன்னை கிறிஸ்தவர்களின் பாதுகாவலன் எனக்கூறினாலும் ‘ஜோசப்’ விஜய் என்ற பெயருக்கு பெரும்பாலான கிறிஸ்தவர்கள் மனம் மாறிப் போயிருக்கிறார்கள். நம்முடைய ஆள் வந்துட்டு போகட்டுமே என்கிற மனநிலைக்கு மாறிப்போய் இருக்கிறார்கள்.
இது ஒருபுறமிக்க, கிறிஸ்தவர்களை ஒன்றிணைத்து திமுக விழாக்களை நடத்துவதை பாஜக, இந்து அமைப்புகள் உள்ளிட்டோர் திமுகவின் கிறிஸ்தவ அபீஸ்மெண்ட் என்று கடுமையாக விமர்சிக்கின்றனர். திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சைகளைக் கூறி திமுக "இந்து உணர்வுகளை புண்படுத்தி" சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதாக குற்றம்சாட்டுகின்றனர். இது வாக்கு வங்கி அரசியல் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
ஆனால், இதை மறுக்கும் திமுக தன்னை மதச்சார்பற்ற கட்சியாகவும், அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமை வழங்கும் கட்சியாக காட்டிக்கொள்ளவும் முய்ற்சிக்கிறது. தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் சுமார் 6-7% முக்கிய வாக்கு வங்கியாக இருக்கிறது. திமுகவின் இது போன்ற அரசியல் வியூகங்கள் தமிழ்நாட்டு அரசியலில் பொதுவானவை என்று கூறப்பட்டாலும் ஒருதலைபட்சமான செயல்பாடுகள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கிறது என அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.