தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கும் கமல்ஹாசன் அரசியலின் மீதுள்ள ஆர்வத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார்.
அவர் அரசியலில் தீவிரம் காட்ட தொடங்கியதும் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இதனால் அவர் சினிமாவை விட்டு விலக உள்ளதாகவும் கூறப்பட்டது. பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனை எதிர்த்து போட்டியிட்ட கமல்ஹாசன் நூலிழையில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார்.
கமல்ஹாசன், அருணாச்சலம்
இவ்வாறு சினிமாவில் பிசியானாலும் தனது அரசியல் பணிகளையும் தொடர்ந்து கவனித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு அவர்களுக்காக வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கமல்ஹாசன் விலகி உள்ளார். அவருக்கு பதில் அருணாச்சலம் என்பவர் அந்த பதிவுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வழக்கறிஞர் ஆ.அருணாச்சலத்தை மாநில பொதுச்செயலாளராக நியமிக்கப்படும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் என தன் வசம் இரண்டு பதவிகள் இருந்ததால் அதில் ஒன்றை பிறருக்கு வழங்க முடிவு செய்து கமல் இந்த முடிவை எடுத்துள்ளாராம். இருப்பினும் அவர் அக்கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இந்திய மக்களின் சராசரி வயது வெறும் 29.. ஆனால்.? எல்லாம் மாறனும்.! மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த கமல் ஹாசன்