நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி வெற்றி பெற்று எம்எல்ஏவானார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுபேற்றார். அவர், விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று காலை டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அவரை தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதனையடுத்து, தமிழ்நாடு இல்லத்தில் நேற்று டெல்லி தமிழ்ச்சங்க தலைவர் சக்தி பெருமாள், துணைத்தலைவர் ராகவன் நாயுடு, பொதுச்செயலாளர் முகுந்தன் மற்றும் செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜன் ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
அதேபோல டெல்லி முத்தமிழ்ப் பேரவை தலைவர் சத்யசுந்தரம், பொதுச் செயலாளர் கண்ணன் மற்றும் பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். பின்னர், தமிழக முன்னாள் ஆளுநரும், பஞ்சாப்பின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி அவரது டுவிட்டர் பக்கத்தில்;- மாண்புமிகு பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் பேத்தி பூஜா-சிவம் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வாழ்த்து கடிதத்தை வழங்கி அன்பை பகிர்ந்து கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.