இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அரசுத் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட அயராது பணியாற்றிவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ 2024-2025ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்க 183 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதனால், 9 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயனடைவார்கள். 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் மிகை ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்புகால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2024-2025ம் நிதியாண்டில் மாத குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் மிகை ஊதியம் வழங்கப்படும்.