காங்கிரஸ் வந்தாலும் வேண்டாம். அது திமுக கூடவே இருக்கட்டும். மதிமுக, தேமுதிகவும் வேண்டாம் அதிமுக, திமுகவில் இருந்து ஊழல் அரசியல்வாதிகள் வந்தாலும் கதவை திறக்க வேண்டாம். பி.டி.ஆர் போன்ற நல்ல அரசியல்வாதிகள் வந்தால் மட்டும் பரிசீலனை செய்வோம். மக்களுடன் கூட்டணி வைப்போம். மக்கள் வாய்ப்பு கொடுத்தால் நல்லது செய்வோம். இல்லை என்றால் அவரவர்கள் வேலையை பார்ப்போம் என விஜய் தீர்க்கமான முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விஜய்க்கு நெருக்கமான சிலர், ‘‘தமிழக அரசியலில் தவெக எடுத்திருக்கிற நிலைப்பாடு பல ஆண்டு காலமாக நிலவி வரும் திராவிட கட்சி முறைகளான சமரச அரசியலுக்கு ஒரு சவாலாக அமைந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கோ, அல்லது நீண்ட காலமாக அதிகாரத்தில் இருக்கக்கூடிய திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கோ தன்னுடைய கதவுகளை விஜய் திறக்க விரும்பவில்லை. குறிப்பாக காங்கிரஸ் கட்சி அதிருப்தியில் வெளியே வந்தாலும் அது திமுக உடனே இருக்கட்டும் என நினைக்கிறார். தவெக ஒரு தனித்துவமான மாற்றாகவே இருக்க வேண்டும் என்கிற அவருடைய எண்ணத்தை பிரதிபலிக்கிறது. சாதி கட்சிகளோ, பலம் குறைந்த சின்ன கட்சிகளோ தன்னுடைய அஸ்திவாரத்தை சரித்து கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.