
அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109 பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சென்னை கேகே நகரில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘நாட்டில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் மக்களுக்காக வாழ்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வரலாறு படைத்த தலைவர்கள். இந்த பூமி உள்ளவரை அவரது புகழ் நிலைத்து நிற்கும்.
திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது. அடுத்த மாதம் தேர்தல் அறிவித்து விடுவார்கள். ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கும். திமுக ஆட்சிக்கு இன்னும் 2 மாதங்கள், 2 அமாவாசைகள் தான் இருக்கிறது. இந்நிலையில் புதிய புதிய திட்டங்களை அறிவிக்கிறார்கள், அடிக்கல் நாட்டுகிறார்கள். ஒரு மாதத்தில் திட்டங்களை நிறைவேற்ற முடியுமா?
காங்கிரஸ் – திமுக கூட்டணியில் குழப்பமும், விரிசலும் வந்தாகிவிட்டது. உதயநிதி, காங்கிரஸ் கை கொடுக்கும் என்றார். ஆனால் கை நழுவும் நிலையில் உள்ளது. திமுக கூட்டணியில்தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் வந்துள்ளன. இன்னும் சில கட்சிகள் வர உள்ளன.
திமுக ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்புவது என மக்கள் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த தேர்தலில் நமது கூட்டணி 210 இடங்களில் வெல்லும். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுக அரசில் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என 4 முதல்வர்கள் தமிழகத்தை ஆட்டிப் படைக்கின்றனர். தமிழகத்தை 4 அதிகார மையங்கள் ஆண்டு கொண்டிருக்கின்றன. திமுகவினர் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி வரை கொள்ளை அடித்துள்ளனர். தேர்தலின்போது பல திமுக அமைச்சர்கள் பத்திரமாக இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள்.
தமிழகத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. 699 சிறுமிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதைவிட மோசமான ஆட்சி இதுவரை நடந்ததில்லை. திமுக அரசில் எல்லா துறையிலும் ஊழல். நகராட்சி நிர்வாகத்துறையில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை அனுப்பினர், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றம் அறிக்கையை ஆய்வுசெய்து உண்மையிருந்தால் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று கருதுகிறேன். எப்.ஐ.ஆர் போட்டால் தான் அமலாக்கத்துறை வரமுடியும்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மீது உடனடியாக எப்.ஐ.ஆர் போடுகிறார்கள். திமுகவினர் தவறு செய்தால் போடுவதில்லை. பல பேர் தேர்தல் நேரத்தில் பத்திரமாக இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். முன்னாள் அமைச்சரானாலும் செந்தில் பாலாஜி தான் கவனிக்கிறார். இதையெல்லாம் விசாரித்து தான் டாஸ்மாக் கேஸ் பதிவு செய்திருப்பார்கள்.
கொஞ்சநஞ்ச ஊழலா செஞ்சீங்க? அரிசி பேர ஊழல், சர்க்கரை பேர ஊழல், கோதுமை, பூச்சிமருந்து, வீராணம் ஊழல். சர்க்கரை ஊழலில் அறிக்கை கொடுத்த கருணாநிதி சர்க்கரை மூட்டையில் இருந்த சர்க்கரையை எல்லாம் எறும்பு சாப்பிட்டுவிட்டதாம்? பிறகு அந்த சர்க்கரை சாக்குப்பையை கரையான் அரித்துவிட்டதாம். விஞ்ஞான முறையில் ஊழல் என்று சர்க்காரியா கமிஷனே குறிப்பிட்டுவிட்டது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு. தனால் தான் எம்ஜிஆர் தீயசக்தி திமுகவை வீழ்த்த வேண்டும் என்றார். அதிமுகவின் தாரக மந்திரமே அதுதான். வருகின்ற தேர்தலில் தீயசக்தி திமுகவை வீழ்த்துவீர்களா?
தினகரனும் இபிஎஸ்ஸும் கூட்டணி அமைத்ததைப் பற்றி கேட்கிறார்கள். இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம், பிரிந்தோம் இப்போது அம்மாவின் அரசு அமைக்க ஒன்றாகி இருக்கிறோம். தீயசக்தி திமுகவை வீழ்த்தி அம்மா அரசை அமைக்க ஊழலற்ற அரசை அமைக்க ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணி அமைத்தோம். இதை பொறுக்க முடியாமல் எரிச்சலில் பேசுகிறார்கள்.
இபிஎஸ் கூட்டணி அமைக்க மாட்டார் என்றனர், எல்லா கூட்டணியும் அமைந்துவிட்டது. இன்று வைகோ என்னைப் பற்றி பேசுகிறார். வைகோ அவர்களே வயது காரணமாக உங்களைப் பற்றிப் பேசக்கூடாது, இருந்தாலும் இங்கு பேசித்தான் ஆகவேண்டும். நீங்கள் திமுகவை பேசாத பேச்சா? கருணாநிதி ஸ்டாலினை பற்றி என்னெவெல்லாம் திட்டினீர்கள். அவ்வளவு மோசமாக பேசிவிட்டு, அங்கு போய் கொத்தடிமையாக இருக்கீங்க’’ என்று அவர் பேசினார்.