ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டாலும் தன்னுடை வெற்றியாகவே திமுக பார்க்கிறது. ஆகையால், அதிமுக, திமுகவுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திமுக சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் பெருவரியான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைப்பது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியான அதிமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என திமுக அமைச்சர்கள் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், ஆளுங்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஓட்டாக மாற்ற அதிமுகவினர் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். இதனால், ஈரோடு தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.