
‘‘கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போறானாம்’’ என்கிற நிலையில் தவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்க்ள். அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி 2026 சட்டமன்றத் தேர்லில் வலுவான கூட்டணி அமைக்க முயற்சிப்பதில் ஏற்பட்ட தடைகள். இதனால் விரக்தியில் இருக்கிறார். தவெக உடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளுக்கு கதவை சாத்திவிட்டார் விஜய். கூட்டணிக் கட்சியான பாஜகவுடனும் சில பல நெருடல்கள். இதனால், அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் அப்செட்.
இது குறித்து அவருக்கு நெருக்கமான அதிமுக சீனியர் ஒருவர், ‘‘இப்போது'எதிர்க்கட்சித் தலைவரானால் போதும்' என்கிற மனநிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார். திமுக ஆட்சியைத் தூக்கி வீசுகிற வேகமே இல்லாமல், பட்டும் படாமல் நடந்துகொள்கிறார். கூட்டணியைக் கட்டமைக்கும் விஷயத்திலும் ஆமை வேகத்திலேயே அடியெடுத்து வைக்கிறார். முக்குலத்தோர் வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில், பிரிந்து போனவர்களைச் சேர்க்கச் சொல்லி சீனியர்கள் எழுப்பும் குரலையும் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை. பாஜக கட்சியுடனான கூட்டணி பெரிதாக சோபிக்காது' என்பதைக்கூறி பலரிடமும் வருத்தப்படுகிறார். சிறு கட்சிகளைக் கூட்டணிக்கு அழைப்பதால், பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்க முடியாது என்றும் நினைக்கிறார். விஜய் கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை என்பதைக் கிட்டத்தட்ட உறுதி செய்த பிறகுதான் எடப்பாடி பழனிசாமி இந்த அளவுக்கு தற்சோர்வு அடைந்துள்ளார்.
ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சியை ஓரம்கட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமியைவிட பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமியே சோர்ந்தாலும் பாஜக என்.டி.ஏ கூட்டணி வெற்றிபெற்றே ஆக வேண்டும் என மும்மரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவில் பிரிந்து போனவர்களை இணைத்தாலே கட்சி வலுப்பட்டு விடும். கூட்டணிக்காக பிறரிடம் அலைய வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளது. இதனை முன்னெடுப்பதற்காக முக்கியமான ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில், மோகன் பாவத், பையாஜி ஜோஷிக்கு அடுத்தபடியாக, 3வது முக்கியமான நபர் ஒருவர் இருக்கிறார். அவர் மூலமாகவே ஆர்.எஸ்.எஸ் எடுக்கும் முடிவுகள் பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் தெரியப் படுத்தப்படும். அந்த முக்கியமானவரும், தமிழக ஆர்.எஸ்.எஸ்-ஸின் தலைவர் ஒருவரும் சமீபத்தில் பழனிசாமியைச் சந்தித்து இருக்கிறார்கள். முக்கியமான சத்திப்பு என்பதால் சேலத்திலிருந்த எடப்பாடி பழனிசாமி இதற்காக சென்னைத் வந்திருந்தார். பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது வீட்டில் இந்தச் சந்திப்பின்போது, ‘‘பீகார் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வந்த சிராக் பஸ்வான் கட்சி, நிதீஷ் குமார் ஆட்சிக்கு வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
எதிரிகளாக இருந்தாலும் தேர்தல் களத்தில் ஒன்றிணைந்ததால் இருவரும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். தமிழகத்திலும் நாம் ஆட்சியில் அமர்வதற்கு சிலரை நாம் கூட்டணிக்குள் சேர்த்தே ஆகவேண்டும். சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ், செங்கோட்டையன் என பிரிந்து சென்ற ஒட்டுமொத்த ஆதரவையும் நாம் பெற வேண்டும். நீங்கள் எதற்கும் தடையாக மட்டும் இருக்காதீர்கள்' என பக்குவமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் அந்த ஆர்.எஸ்.எஸ் முக்கியப்புள்ளி.
அதற்கு 'உங்கள் சார்பில் கூட்டணிக்கு அவர்களிடம் ஆதரவைப் பெறும் விஷயத்தில், என்னால் எந்தப் பிரச்னையும் வராது. ஆனால், எந்தக் காலத்திலும் அவர்களை எங்கள் கட்சிக்குள் சேர்க்க மாட்டோம்' என்று வெளிப்படையாகவே மறுத்துச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அடுத்ததாக, 'விஜய்யைக கூட்டணிக்குள் கொண்டுவர ஆந்திராவைச் சேர்ந்த துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாக முயற்சிகள் நடக்கின்றன' என்றும் சொல்லி இருக்கிறார்கள். இந்தச் சந்திப்பை முடித்துக்கொண்டு டெல்லிக்குச் சென்ற ஆர்.எஸ்.எஸ் முக்கியத்தலைவர், எடப்பாடி பழனிசாமியின் இணைப்பு பிடிவாதம் குறித்து அமித் ஷாவிடமும் ஆலோசித்து இருக்கிறார். ஆனால், சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையனை மீண்டும் அதிமுகவில் இணைப்பதில் பாஜக எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்குவதாகத் தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியை எந்த வகையிலாவது சம்மதிக்க வைக்க முயற்சிகளை நடத்தி வருகிறது’’ என்கிறார் அந்த அதிமுக சீனியர்.
தங்கம் தரையிலே... தவிடு பானையிலே..! உண்மையில் இதுதான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கணக்காக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.