தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, திரையுலகின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் குறித்துப் பேசியுள்ள கருத்துக்கள், எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் அமைந்துள்ளது.
தமிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்பிற்குப் பஞ்சம் இல்லாதது. ஆனால், சமீபகாலமாக 'அரசியல் நாகரிகம்' என்பது மருந்துக்கும் இல்லாமல் போய்விட்டதோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, திரையுலகின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் குறித்துப் பேசியுள்ள கருத்துக்கள், எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் அமைந்துள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள கண்டனம், அரசியல் களத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பார்க்கப்படும் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் ரஜினிகாந்த் குறித்துப் பேசுகையில், "திமுகவினர் மிரட்டியதால் பயந்து போய்தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை" என்ற தொனியில் கருத்துத் தெரிவித்தார். அரசியலுக்கு வருவார் என்று பல தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த், தனது உடல்நிலை மற்றும் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு அந்த முடிவைக் கைவிட்டார். இதை அவரே வெளிப்படையாக அறிவித்திருந்தார். ஆனால், அவரது தனிப்பட்ட முடிவின் பின்னால் மிரட்டல், பயம்' இருந்ததாக ஆதவ் அர்ஜுனா பேசியது, ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
24
எடப்பாடி பழனிசாமியின் அதிரடி கண்டனம்
இந்த விவகாரத்தில் ரஜினிகாந்திற்கு ஆதரவாகவும், தவெக நிர்வாகிக்கு எதிராகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் காரசாரமான பல கேள்விகளை முன்வைத்துள்ளார் "அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் குறித்து தவெக நிர்வாகி பேசியுள்ள அவதூறான கருத்துக்கள் ஏற்கத்தக்கதல்ல. ரஜினிகாந்த் என்பவர் வெறும் நடிகர் மட்டுமல்ல, அவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் அன்பைப் பெற்றவர். அவரது புகழுக்குக் களங்கம் விளைவிப்பது அதிமுக தொண்டர்களையும் காயப்படுத்தும் செயல். அரசியலுக்கு வருவதும் வராமல் இருப்பதும் ஒரு தனிமனிதரின் உரிமை. காரணத்தை அவரே சொன்ன பிறகு, அதை அரசியல் நோக்கத்திற்காகத் திரித்துப் பேசுவது கீழ்மட்டமான அரசியல் எனத் தெரிவித்துள்ளார்.
34
அரசியல் நாகரிகம் எங்கே போகிறது?
எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கண்டனம் வெறும் ரஜினிக்கான ஆதரவு மட்டுமல்ல, அது தவெகவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு கட்சித் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், மாற்றுக் கருத்துடையவர்களை விமர்சிக்கலாம். ஆனால், ஒரு மாபெரும் திரை ஆளுமையை 'பயம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி சிறுமைப்படுத்துவது அரசியல் நாகரிகமற்ற செயல் என்பதே எடப்பாடியின் வாதம்.
அரசியலில் நாகரிகம் என்பது எதிரிகளைக்கூட மரியாதையுடன் நடத்துவதுதான். ஆனால், தவெக நிர்வாகியின் பேச்சு, அந்தக் கட்சி இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பதையே காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருக்கலாம், ஆனால் அவரது செல்வாக்கு என்பது வாக்கு வங்கியைத் தாண்டியது. அவரைச் சிறுமைப்படுத்துவதன் மூலம் திமுகவையோ அல்லது அதிமுகவையோ வீழ்த்திவிடலாம் என்று புதிய கட்சிகள் நினைத்தால், அது அவர்களுக்குப் பின்னடைவையே ஏற்படுத்தும்.