
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளின் திட்டங்கள் கசிந்துள்ளன. இதுவரை இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு திமுகவின் தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் கூட்டணி அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்கள் தேர்வு ஒரு பக்கம் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அதேவேளை தேர்தல் அறிக்கையும் தயாராகிக் கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் தலைமையிலான தவெகவும் இந்த தேர்தல் களத்தில் குதித்து இருப்பதால் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சி கட்டிலைப் பிடிப்பதற்கு பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் கூட, தேர்தல் அறிக்கை தான் வெற்றியை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்காற்றும். அந்த வகையில் ஏற்கனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம்? என அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஒவ்வொரு தகவலையும் தெரிவித்து வருகிறார்.
அதேவேளை தவெக தேர்தல் அறிக்கை வரலாறு காணாத அளவில் இருக்கும் என அந்த கட்சி சார்பில் கூறப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தேர்தல் அறிக்கை குறித்து மேலோட்டமாக பேசியிருக்கிறார். திமுகவின் தேர்தல் அறிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும் என அவர் தெரிவித்த நிலையில், இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளனர். திமுகவை பொருத்தவரை கடந்த தேர்தலில் அறிவித்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், இலவச பஸ் பயணமும் மிகப்பெரிய வெற்றியையும் தேடித் தந்திருந்தது. இந்நிலையில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கு என்னென்ன வாக்குறுதி தரப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், மெகா திட்டம் ஒன்றை திமுக தரப்பில் செயல்படுத்த இருப்பதாகவும், அதற்காக முதற்கட்டமாக மக்களிடம் கருத்து கேட்கும் ஒரு திட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தகவல். இதற்காக பிரத்தியேக கைபேசி செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது திமுக. இதன் மூலம் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்ற தகவல் சேகரிக்கப்பட இருக்கிறது. அரசு ஊழியர்களைக் கொண்ட சிறப்பு குழு ஒன்று மக்களின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று ஒவ்வொரு குடும்பத்தோடும் பேச இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு படிவம் தரப்பட இருக்கிறது. அந்த படிவத்தில் உங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வந்ததா? பொங்கல் பரிசு கிடைத்ததா? உங்கள் குழந்தைக்கு உதவித்தொகை கிடைத்ததா? என்பது போன்ற தகவல் சேகரிக்கப்பட இருக்கிறது.
இந்த படிவத்தை எழுதி அரசு அலுவலர்களிடம் கொடுத்தால் உங்களுக்கு க்யூ ஆர் குறியீடு ஒன்று வழங்கப்படும். இதன் மூலம் உங்கள் கோரிக்கையின் நிலையை அறிந்து கொள்ளலாம். கோரிக்கையின் அடிப்படையில் உடனடியாக தீர்வு வழங்கப்படுவதுடன், பொதுவாக மக்கள் என்னென்ன விரும்புகிறார்களோ? அவை அனைத்துமே தேர்தல் வாக்குறுதிகளாக தயாராக இருக்கிறது. ஜனவரி 7ஆம் தேதி முதல் அரசு அலுவலர்கள் ஒவ்வொரு வீடாக வந்து இந்த விண்ணப்ப படிவங்களை வழங்க போகிறார்கள். இந்த விண்ணப்ப படிவம் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை முன் வைக்கலாம்.
இதற்கிடையே வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. இதையொட்டி வருகின்ற ஒன்பதாம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கமாக ரூ.3000 வழங்கப்படும். மகளிர் உரிமை தொகை தற்போது ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில தேர்தலுக்குப் பிறகு 1,500 ரூபாய் வழங்கப்படும் திட்டமும் உள்ளட்தாகக் கூறப்படுகிறது. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் போல் ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் காத்திருக்கிறப்பதாகவும் கூறப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு தொழிற்சாலைகள் தொடங்கும் திட்டமும் இருக்கிறது. பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தவும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரு லட்சம் பெண்களுக்கு தொழிலில் தொடங்குவதற்காக பத்தாயிரம் ரூபாய் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும் திட்டமும் வர இருக்கிறது. ஏற்கனவே ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு, ஒவ்வொருவருக்கும்
வங்கிக் கணக்குல டெபாசிட் செய்யும் திட்டமும் வர இருக்கிறது என்கிறனர் என்.டி.ஏ கூட்டணியினர். தவெக தரப்பில் ஏற்கனவே ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு, ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பு, ஒவ்வொரு வீட்டிற்கும் இருசக்கர வாகனம், பொருளாதார வளர்ச்சி அடையும் பொழுது ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கார் என்றெல்லாம் தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அதிமுகவை பொருத்தவரை மீண்டும் தாலிக்கு தங்கம், இலவசம் ஸ்கூட்டர், 150 நாள் வேலைவாய்ப்பு என பல திட்டங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அதிமுக தரப்பிலும் மகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாயாக தருவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கட்சியின் தேர்தல் அறிக்கையும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் அமையவுள்ளதால் மாபெரும் எதிர்ப்பார்களை கிளறி விட்டுள்ளன.