
பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தபோதும் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இரு கட்சிகளும் ஓராண்டுக்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. இரண்டு நிபந்தனைகளை முன் வைத்த பின்பே இபிஎஸ் பாஜக கூட்டணியில் இணைந்தார். அதில், முதலாவது அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவியை பறிக்க வேண்டும். இரண்டாவது, இபிஎஸ்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் பாஜக கூட்டணியிலிருந்து விலகி வேண்டும்.
இதில் முதல் நிபந்தனை அப்போதே நிறைவேறியது. பாஜக கூட்டணியில் இருந்த ஓபிஎஸூம், டி.டி.வி. தினகரனும் பாஜக கூட்டணியிலிருந்து அண்மையில் இருந்து அண்மலையில் அவர்களாகவே விலகினர். அவர்களை கூட்டணியில் மீண்டும் இணைக்க பாஜகவை சேர்ந்த பலரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எதுவும் நடக்கவில்லை. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என ஓபிஎஸும், இபிஸை முதல்வர் வேட்பாளராக ஏற்க மறுத்து வரும் தினகரனும் இனி பாஜகவில் இணைய மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க, இப்போது பாஜகவில் மீண்டும் இணையப் போவதாக தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.
‘‘அரசியலில் எதுவும் நடக்கலாம். என்.டி.ஏ கூட்டணியில் சேர்வதற்கான வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன’’ என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சின் பின்னணியில் பாஜக அடுத்த அரசியல் பிரளயத்துக்கு தயாராகி விட்டதாகக் கூறி அதிர்ச்சி கிளப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய நிர்வாகிகள், ‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவில் சீனியர்கள் பலர் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டியது போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள் என பலர் போட்டியிடத் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைப்பேன் என்று சொல்லி வந்த எடப்பாடி பழனிசாமி அதை தவறவிட்டார். அதிமுகவில் உள்ள சீனியர்களே அப்போது தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டிய நிலையில், ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை கொடுத்தவர்களுக்கே சீட்டைக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அப்படியும் யாரும் வெற்றி பெறவில்லை. அதனால், இப்போதும் அந்த வேட்பாளர்களில் பலர் இன்னும் கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். தவெக முதல்வர் வேட்பாளர் விஜய்தான் என்று அதிமுகவின் கூட்டணி ஏக்கத்தை மொத்தமாக உடைத்துப்போட்டு விட்டது தவெக. விஜயின் இந்த முடிவு எடப்பாடி பழனிசாமி தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.
தவிர, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமையே எப்போதுமே விட்டமினை இறக்கும். ஆனால், இந்த முறை எடப்பாடி பழனிசாமி விட்டமினை இறக்கத் தயாராக இல்லை. மாறாக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களிடம் ‘உங்களுக்குண்டான தொகுதி செலவுகளை எல்லாம் நீங்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டும். ரூ.20 கோடிகளை ரெடி பண்ணி வைச்சுக்கங்கோ… குறைந்தது 15 கோடியாவது தயார் செய்துவிடவேண்டும்’ என சொல்லிவிட்டார். தலைமை கொடுக்கும் என்று எதிர்பார்த்த சீனியர்களுக்கு இது பெரும் இடியாக தலையில் இறங்கியிருக்கிறது.
இதனால், ‘20 கோடி’ செலவு செய்து அமைச்சரானால் போட்டதை எடுத்துவிடலாம். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளைப் பார்த்தால் எம்.எல்.ஏ-வாகக் கூட முடியாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆகையால், ‘நாங்கள் போட்டியிடவில்லை. கூட்டணியைப் பார்த்துக்கொண்டு முடிவு செய்கிறோம்’ என்கிற மனநிலையில் இருக்கிறார்கள். ஜெயலலிதா இருக்கும்போது தேர்தலில் போட்டியிட கேட்டு பணத்தை கொட்டி சீட்டு கேட்க வரிசையில் நின்ற காலம் போய் இப்போது அதிமுகவில் சீட்டே வேண்டாம் என்கிற முடிவுக்கு முக்கிய நிர்வாகிகளே ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கட்சிக்குள் நிலைமை இப்படி இருக்க, கூட்டணியில் பிற கட்சிகளை இணைப்பதிலும் எடப்பாடி பழனிசாமி சுணக்கம் காட்டுகிறார். தேமுதிக, பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர முடியவில்லை. துரோகிகளுக்கு தேமுதிக பாடம் புகட்டும் என எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்து விமர்சித்து வருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா. பாஜக பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே அவர் என்.டி.ஏ கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது. பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமியை நம்பி அவர்கள் என்.டி.ஏ கூட்டணிக்கு வரத் தயாராக இல்லை. அன்புமணி, பாஜக சப்போர்ட்டில் தான் இந்தக் கூட்டணிக்கு வர விரும்புகிறார்.
இத்தனை பலவீனமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் பிரிந்து போன சசிகலா, ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் போன்றவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வதிலும் பிடிவாதம் காட்டுகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில், மோகன் பாவத், பையாஜி ஜோஷிக்கு அடுத்தபடியாக உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கியஸ்தர், மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நேரடித் தொடர்பில் உள்ள தலைவர் ஒருவரும், தமிழக ஆர்.எஸ்.எஸ்-ஸின் தலைவர் ஒருவரும் கூட்டாகச் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இருக்கிறார்கள்.
அப்போது அவர்கள், “ நாம் தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டுமானால், சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ், செங்கோட்டையன் என பிரிந்து சென்றவர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற வேண்டும். நீங்கள் எதற்கும் தடையாக மட்டும் இருக்காதீர்கள்' என எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். அதனை அடியோடு மறுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
பாஜக கூட்டணியை வைத்துக் கொண்டு அதிமுகவை கையில் கிடைத்த லாட்டரிச் சீட்டாக கருதி, அதிர்ஷ்டத்தில் கிடைத்தால் ‘முதலமைச்சர் பதவி, தோற்றால் எதிர்கட்சி தலைவர்’ என்கிற மிதப்பில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் முதலமைச்சராகவோ, எதிர்கட்சித் தலைவராகவோ பாஜக மீது சவாரி செய்ய நினைக்கிறார். அதற்கு மத்தியில் ஆளும்ம், பல மாநிலங்களை ஆளும், இந்தியாவில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் பாஜகதான் கிடைத்ததா? அப்படிப்பட்ட பாஜகவை, உலகமே போற்றும் பிரதமர் மோடியை, மத்திய அரசை ஒரு மாநில கட்சி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து, பழிகளை சுமத்தி, எதிர்கட்சி போல குடைச்சல்களுக்கு மேல் குடைச்சர்கள் கொடுத்து வரும் திமுக அரசை வீழ்த்தாமல் போனால் அது அவமானம், பெருந்தோல்வி என மோடியும், அமித் ஷாவும் கருதுகிறார்கள்.
திமுகவை தோற்கடிப்பதற்கு இடையூறாக இருக்கும் எந்த சக்தியையும் தூக்கி எறியவும், வெற்றி பெற கிடைக்கும் எந்த வாய்ப்புகளையும் வீணடிக்கக்கூடாது என்பதில் பாஜக டெல்லி தலைமை உறுதியோடு இருக்கிறது. அதிமுக கூட்டணி வேண்டும் என்பதால்தான் எடப்பாடி பழனிசாமியின் வற்புறுத்தலால் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கினோம். கூட்டணி குறித்து டெல்லிக்கு அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திச் சென்ற பிறகும், அதனை வேண்டா வெறுப்பாக கள்ளக் கூட்டணிபோல் மறைக்க முயற்சித்தது எல்லாம் பாஜகவுக்கு நெருடலாகத்தான் இருந்தது. ஆனாலும் அதையெல்லாம் வெளிப்படுத்தாமல் பல விஷயங்களில் சமரசப்படுத்திக் கொண்டது பாஜக தலைமை.
தேர்தல் நெருங்கும் நிலையில், சுணக்கம் காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. நொண்டிக் குதிரையை பந்தயத்தில் இறக்கி விட்டு வெற்றி பெற முடியாது என்கிற முடிவுக்கு வந்து விட்டது டெல்லி தலைமை. இப்படியெல்லாம் நடக்கலாம் என்றுதான் கூட்டணியை அறிவித்தபோதே எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் எனக்கூறாமல் நழுவினார் அமித் ஷா. இப்போது எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதங்கள், செயல்பாடுகளால் மாற்று வழியை யோசிக்கிறது பாஜக தலைமை. அதன் முதல் கட்டமாகத்தான் பாஜக கூட்டணியில் இருந்து விலகிச் சென்ற ஓ.பி.எஸை மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் நடந்து வரும் சில கணக்குகளை வைத்தே, ‘‘அரசியலில் எதுவும் நடக்கலாம். என்.டி.ஏ கூட்டணியில் சேர்வதற்கான வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன’’ என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஓரு சில நாட்களுக்கு முன்பு டிடிவி. தினகரனை சந்தித்துப்பேசினார் அண்ணாமலை. அந்தச் சந்திப்பின் மூலம் மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்குள் டி.டி.வி.தினகரன் வருவதற்கான ஆலோசனை நடைபெற்றுள்ளது. அவரும் சில விஷயங்கள் நடந்தால் கூட்டணிக்கு தயார் என கூறியுள்ளார். இவர்கள் மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தால், அதனை ஏற்பாரா? என்பது சந்தேகம்தான். ஆனால், இனியும் எடப்பாடி பழனிசாமியின் சம்மதத்திற்கோ. முடிவுகளுக்கோ செவி சாய்க்க பாஜக தயாராக இல்லை. ஆகையால், அதிமுகவை கையில் எடுத்து, புதிய தலைமையை ஏற்படுத்தி, பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து, கூட்டணியைப் பலப்படுத்தி சில அதிரடி முடிவுகளுடன் தேர்தலை எதிர்க்கொள்ள பாஜக தலைமை ஆயத்தமாகி வருகிறது. அதனையொட்டி திடுக்கிடும் ட்விஸ்டுகள் இனி அடுத்தடுத்து வெளியாகலாம்’’ என பகீர் கிளப்புகிறார்கள் உள்விவகாரங்களை நெருக்கமாக அறிந்த கமலாலய நிர்வாகிகள்.