mk stalin
தொழில்முதலீடு - ஜப்பானில் ஸ்டாலின்
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தின் போது பல்வேறு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார். இதனையடுத்து 25 ஆம் தேதியன்று ஜப்பான் நாட்டின் ஒசாகா சென்றார். அங்கு பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
mk stalin
புல்லட் ரயிலில் ஸ்டாலின்
தனது இரண்டு நாள் ஓசாகா பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று புல்லட் ரயில் மூலம் டோக்கியோ வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து, இன்று (29.5.2023) காலை டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ (Mr. Ishiguro Norihiko) அவர்களையும், செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ (Mr. Kazuya Nakajo) அவர்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து,
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அளித்துவரும் ஆதாரவிற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.
தமிழகத்தில் தொழில் முதலீடு
இதனை தொடர்ந்து JETRO தலைவருடனான சந்திப்பின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது, நீங்கள் இதற்கு முன்பு NEC-இல் பணியாற்றியதாகக் கேள்விப்பட்டேன். நாங்கள் நாடு திரும்பும் முன்பு. நாளை அங்கு சென்று பார்வையிடலாம் என்று நினைக்கிறோம். JETRO இந்தியாவுடன் இணைந்து மிகவும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விரும்பும் ஜப்பானிய நிறுவனங்கள் தங்களது வர்த்தகச் செயல்பாடுகளை எளிதில் மேற்கொள்ள முக்கியப் பங்கை ஆற்றி வந்துள்ளது.
Industry 4.0-ஐ நோக்கி தமிழ்நாடு
இதனை மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆட்டோமொபைல், கனரக பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கும் விரிவுபடுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. Industry 4.0-ஐ நோக்கி தமிழ்நாட்டில் உள்ள அதிக அளவிலான சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களை முன்னேற்ற இந்தியாவின் ஐ.டி. திறன்களும் ஜப்பானின் உற்பத்தி நிபுணத்துவமும் உதவும் இதைப் போன்ற துறைகளில் நாப் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.
மாநாடு வெற்றி பெற வாழ்த்து
இச்சந்திப்பின்போது, JETRO தலைவர் திரு. இஷிகுரோ நோரிஹிகோ அவர்கள், தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அழைப்பு விடுத்ததற்கும். ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஆதரவிற்கும் தனது நன்றியை தெரிவித்ததுடன், சென்னையில் நடைபெறவுள்ள 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.