
குஜராத்தை ஆண்ட முகமது பெகடா அல்லது முகமது ஷா- I காலை உணவாக 150 வாழைப்பழங்கள் சாப்பிடுவாராம். ஒவ்வொரு வாழைப்பழத்திற்கும் ஒரு கப் நெய், ஒரு வெண்ணெய் என்ற கணக்கில் சாப்பிட்டால் தான் அவருக்கு பசி அடங்குமாம். இது வெறும் காலை உணவு தான்.
இதே மாதிரி ஒவ்வொரு மன்னர்கள், நவாப்கள் தங்களுடைய உடல் வலிமையை அதிகரிக்க வெவ்வேறு வகையான உணவுகளை சாப்பிட்டனர். அதுமட்டுமின்றி மன்னர்களுடைய உணவு பழக்கங்கள் தனித்துவமானவை கூட. உங்களுக்கு தெரியுமா? சில அரசர்கள் சிட்டுக்குருவியை மட்டும் தான் உணவாக எடுத்து கொண்டார்கள். சிலர் தங்கத்தை சாம்பலாக்கி உண்டு வந்தனர். அவர்களைக் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
300 பெண் அடிமைகள்:
நம் நாடு சுதந்திரம் அடையும் முன் 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் காணப்பட்டன. அந்த சமஸ்தானங்களுக்கு அரசர்கள், நவாப்கள், நிஜாம்கள் இருந்தனர். ஒவ்வொருவரும் வித்தியாசமான உணவுப் பழக்கம், மதுப்பழக்கங்களை கொண்டிருந்தனர். அதில் பாட்டியாலாவின் அரசராக இருந்த பூபேந்திர சிங் குறிப்பிடத்தகுந்தவர்.
இவர் கிரிக்கெட் விளையாடுவதிலும் சிறந்து விளங்கினாராம். சுமார் 6 அடி உயரமும் 136 கிலோ எடையும் கொண்டிருந்த இவர், பாலுணர்வு மருந்துகளின் மீது பித்து கொண்டவராக இருந்தார் என வரலாற்றாசிரியர்கள் டொமினிக் லேபியர், லாரி காலின்ஸ் குறிப்புகளில் தெரியவருகிறது. இவருடைய அரண்மனையில் 350 பெண்கள் இருந்தனர்.
இதையும் படிங்க: இந்த ஒரு சிவன் கோயில் 1000 சிவன் கோயிலுக்கு சமம்.. எங்க இருக்கு தெரியுமா...?
தங்க சாம்பல் உணவு:
பாட்டியாலா அரசர் தன்னுடைய ஆற்றலை அதிகரிக்க முத்து, தங்கம், வெள்ளி மற்றும் பல்வேறு மூலிகைகளை கலந்து சாப்பிட்டு வந்தாராம். இவருக்காக சிட்டுக்குருவிகளின் மூளையை தனியே எடுத்து அதில் இருந்து சிறப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. சிட்டுக்குருவியே சிறிய உயிரினம் தான் அதனுடைய மூளையைப் பிரித்தெடுத்து, அத்துடன் கேரட்டைச் சேர்த்து ஒரு சிறப்பு மருந்து செய்து கொடுத்துள்ளார்கள்.
இதனால் வலிமையை அதிகரிக்கும் என நம்பிக்கை இருந்துள்ளது. இது தவிர அரசர் பூபேந்திர சிங் தங்கச் சாம்பலைத் தொடர்ந்து சாப்பிட்டுள்ளார். ஆனால் உடல்நலக்குறைவால் தான் இறந்துவிட்டார். எந்த தங்கமும், வெள்ளியும் அவர் ஆயுளையும், வலிமையையும் கூட்டவில்லை போலும்.
அவாத்தின் கடைசி நவாப் வாஜித் அலி ஷாவும் தன்னுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறப்பு மருத்துவர்களை நியமித்தார். அவர்களும் நாள்தோறும் புதுப்புது உணவுகளை தயார் செய்து கொடுத்தனர். அதில் நவாப் விரும்பிய உணவு ஸ்வரன் பாஸ்மா தான். அதனை அவர் பாலுடன் சாப்பிட்டு வந்தார்.
நவாப் வாஜித் அலி ஷாவுக்கு பிடித்த மற்றொரு உணவு முத்தஞ்சன். முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் பிற உலர் பழங்கள், குங்குமப்பூ நிற அரிசி போட்டு சமைக்கும் இனிப்பு உணவாகும். இது கோயா மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் பரிமாறப்பட்டது.
முத்தஞ்சன் இனிப்பு:
மத்திய கிழக்கிலிருந்து வந்த உணவாக முத்தஞ்சன் கருதப்படுகிறது. முகலாய சமையல்காரர்கள் தான் இந்தியாவில் முத்தஞ்சன் தயாரிக்கத் தொடங்கினர். அது அப்படியே பிரபலமடைந்தது. எழுத்தாளர் மிர்சா ஜாபர் ஹுசைன் தன்னுடைய 'கதீம் லக்னோ தி அக்ரி பஹார்' புத்தகத்தில் முத்தஞ்சன் குறித்து எழுதியுள்ளார். முகலாயர்கள் முதல் நவாபுகள் வரை எல்லோருக்கும் பிடித்த உணவாக முத்தஞ்சன் இருந்துள்ளது என்கிறார்.
இதையும் படிங்க: விலகியது 4000 ஆண்டுகள் மர்மம்.. கிசா பிரமிடு எவ்வாறு கட்டப்பட்டது?
நம் நாட்டு சுதந்திரத்தின் போது, ஹைதராபாத் நிஜாம், மிர் உஸ்மான் அலி, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார். அவருக்கு விதவிதமான உணவு, பானங்கள் மீது அளாதி விருப்பம். இது குறித்து டொமினிக் லேபியர், லாரி காலின்ஸ், 'நிஜாமின் உணவுமுறை நிலையானது' என எழுதியுள்ளார்கள். அதில் கிரீம், இனிப்புகள், பழங்கள், வெற்றிலை, அபின் போன்றவை அடங்கும். நிஜாம் அபின் என்ற போதைப் பொருளுக்கு அடிமை. அவரால் தினமும் ஒரு கப் அபின் குடிக்காமல் தூங்கமுடியாது. எப்பொழுதும் வெற்றிலையை மென்று சாப்பிடுவதும் அவர் வழக்கமாம்.