தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வார காலத்திற்கு காய்கறி, மளிகை கடைகளை கூட திறக்க அனுமதி கிடையாது.
மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று முதல் இன்று இரவு 9 மணி வரை கடைகள் அனைத்தையும் திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
எனவே தமிழகம் முழுவதும் காய்கறி கடைகள், சந்தைகள், மளிகை கடைகள் முன்பு அலைமோதும் மக்கள் கூட்டங்களை காண முடிகிறது. கூட்டம், கூட்டமாக மக்கள் கடைகளில் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
பல இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பது கொரோனா தொற்றை அதிகரிக்க வழிவகுக்கும் என அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளை முதல் வாகனங்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அரசு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியான போதும் சற்றும் கூட்டம் குறைந்தபாடியில்லை.
இந்த மாதிரியாக சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் போட்டோக்களை பார்க்கும் போது கூட கொஞ்சமும் கொரோனா மீதும், உயிர் மீது பயமே இல்லையா? என கேள்வி எழுப்ப தோன்றுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்றும், இன்று இரவு 11.45 மணி வரையிலும் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தமிழகம் முழுவதும் செல்ல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூட்ட நெரிசலில் போட்டி, போட்டு ஊருக்குச் செல்ல முயல்வதும், நகரங்களில் இருந்து பலரும் கிராமங்கள் வரை கொரோனாவை சுமந்து செல்லும் அவலமும் உள்ளது கவலையை அதிகரிக்கச் செய்கிறது.