
தீபாவளி பண்டிகை இந்தியாவில் இந்து மக்களால் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகை நாள் மகிழ்ச்சியை வழங்கினாலும், இந்நாளில் பட்டாசு வெடியினால் உண்டாகும் புகையில் அதிகளவு நச்சுத்தன்மை உள்ளது. இந்த புகையானது காற்றில் கலந்து அதை சுவாசிப்பதால் பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
அதுவும் குறிப்பாக பட்டாசுகளின் புகையானது ஆஸ்துமா நோய்களின் நிலைமையை இன்னும் மோசமாக்கும். எனவே அந்நாளில் ஆஸ்துமா அறிகுறிகள் தீவிரமாகாமல் தடுக்கவும், ஆஸ்துமா நோயாளிகள் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி என்பதையும் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: 365 நாட்களில் தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படும் அதிசய கோயில் பற்றி தெரியுமா? எங்கு இருக்கிறது?
தீபாவளி நாளில் ஆஸ்துமா பிரச்சனை அதிகரிப்பது ஏன்?
தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடி புகையால் காற்று மாசுபாடு அளவு அதிகரிக்கும். சொல்லப் போனால் பட்டாசுகளிலிருந்து வெளியாகும் புகையில் அதிக அளவு நச்சுத்தன்மை வாய்ந்த சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஈயம், தாமிரம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற துகள்கள் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும் பொருட்களாகும். எனவே இந்த புகையை சுவாசிப்பதன் மூலம் சுவாச மண்டலத்தை எரிச்சலடைய செய்யும், ஒவ்வாமையை ஏற்படுத்தும். முக்கியமாக ஆஸ்துமா பிரச்சனையை தூண்டிவிடும்.
பட்டாசு வெடிக்கும் போது அதிலிருந்து வரும் புகையானது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மோசமான பிரச்சினையை ஏற்படுத்திவிடும். மேலும் சிலருக்கு அந்த புகையானது அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் ஆஸ்துமா தாக்குதல் கூட தூண்டப்படும்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு 28 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்க தயாராகும் ராமர் நகரம்!
தீபாவளி அன்று ஆஸ்துமா நோயாளிகள் பின்பற்ற வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :
1. தீபாவளி நாளில் ஆஸ்துமா நோயாளிகள் மாலை வேளையில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அந்நேரத்தில் தான் புகை மற்றும் தூசிகள் அதிகமாக இருக்கும். எனவே நீங்கள் வீட்டிற்குள் இருப்பது தான் உங்களுக்கு நல்லது.
2. ஒருவேளை நீங்கள் வெளியே செல்ல வேண்டும் என்று கட்டாயம் ஏற்பட்டால் N95 முக கவசத்தை அணிந்து செல்ல மறக்காதீர்கள். இது காற்றில் இருக்கும் துகள்களை வடிகட்டி உங்களது சுவாசம் மண்டலத்தை பாதுகாத்துக் கொள்ளும்.
3. தீபாவளி நாளில் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். ஏனெனில் போதுமான அளவு நீர் குடித்தால் சுவாசம் மண்டலத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.
4. தீபாவளி அன்று அஸ்மா நோயாளிகள் அதிகப்படியான கொழுப்பு மற்றும் காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படும் மற்றும் ஆஸ்துமாவை தீவிரப்படுத்தும்.
5. அதுபோல நீங்கள் புகை பிடிப்பது ஆஸ்துமா பிரச்சனையை மேலும் மோசமாக்கும். எனவே நீங்கள் புகை பிடிக்காமல் இருப்பது நல்லது.
6. உடலை எப்போதும் சூடாக வைத்திருக்க கூடுதலான சூடான ஆடைகளை அணியுங்கள்.
7. உங்களுடன் உங்களது இன்ஹேலரை எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள்.
8. ஏசி அல்லது பேனுக்கு கீழே நேரடியாக ஒருபோதும் உட்கார வேண்டாம்.
9. தீபாவளி பண்டிகைக்கு முன் மற்றும் பின் மருத்துவரை சந்தித்து உங்களது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மறக்காதீர்கள்.
10. தூசி மற்றும் புகை நிறைந்த சூழலில் இருந்து விலகி இருங்கள்.
மேலே சொன்ன விஷயங்களை ஆஸ்மா நோயாளிகள் பின்பற்றினால் தீபாவளி பண்டிகையை நீங்கள் உங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சிகரமாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடலாம்.