Hotel Bed Sheets: சிறிய ஹோட்டல் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரை பெரும்பாலும் வெள்ளை நிற பெட்ஷீட்களையே பயன்படுத்துவதற்குப் பின்னால் உளவியல், சுகாதாரம் மற்றும் வணிகம் சார்ந்த முக்கிய காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒரு ஹோட்டல் அறைக்குள் நுழைந்தவுடன் முதலில் கண்களில் படுவது பளிச்சென்ற வெள்ளை நிற பெட்ஷீத்தான். அறையின் சுவர் நிறம், அலங்காரம் அல்லது மரச்சாமான்கள் மாறினாலும், பெரும்பாலான ஹோட்டல்களில் படுக்கை விரிப்பு மட்டும் வெள்ளை நிறத்திலேயே இருக்கும். இது வெறும் அலங்காரத் தேர்வு அல்ல. விருந்தினர்களின் மனதில் சுத்தம், பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் உளவியல் காரணங்களுக்காக உலகம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் இந்த முறையைப் பின்பற்றுகின்றன. வெள்ளை நிறம் அமைதியையும், சுத்தமான சூழலையும் உணர்த்துவதால் பயணக் களைப்பை குறைக்கவும் உதவுகிறது.
24
சுத்தத்தை நிரூபிக்கும் எளிய வழி
வெள்ளை நிற பெட்ஷீட்டில் சிறிய கரை கூட உடனடியாக தெரிந்துவிடும். இதனால் விருந்தினர்களே அந்த அறையின் சுத்தத்தை எளிதாக மதிப்பிட முடிகிறது. நிறமுள்ள பெட்ஷீட்களில் கறைகள் மறைந்துவிடும் வாய்ப்பு இருந்தாலும், வெள்ளை நிறத்தில் அது சாத்தியமில்லை. இதனால் சுகாதார தரத்தை பராமரிக்க ஹோட்டல்களும் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவாகிறது. இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கிறது.
ஹோட்டல்களில் தினமும் நூற்றுக்கணக்கான பெட்ஷீட்கள் துவைக்கப்படுகின்றன. வெவ்வேறு நிறங்களில் இருந்தால் தனித்தனியாக துவைக்க வேண்டிய சிரமம் இருக்கும். ஆனால் வெள்ளை நிற பெட்ஷீட்களை ஒன்றாக அதிக வெப்பநிலையில் சுத்திகரிப்பு திரவங்களுடன் துவைக்க முடியும். இதனால் கிருமிகள் அழிக்கப்படுவதோடு, பராமரிப்பு செலவும் குறைகிறது. மேலும் நீண்ட காலம் புதிய தோற்றத்தையும் தக்க வைத்துக்கொள்ள முடிகிறது.
1990களின் இறுதியில் சர்வதேச நட்சத்திர ஹோட்டல்கள் வெள்ளை நிற பெட்ஷீட்டை ஆடம்பரத்தின் அடையாளமாகப் பயன்படுத்தத் தொடங்கின. அதன் பிறகு இது உலகளாவிய தரமாக மாறியது. வெள்ளை நிறம் அறையை அதிக வெளிச்சமாகவும், விசாலமாகவும் காட்டுகிறது. அதனால் சிறிய அறைகளும் பெரியதாக தோன்றுகின்றன. இன்றைக்கு ஹோட்டல் தொழிலில் வெள்ளை பெட்ஷீட் என்பது ஒரு சாதாரண துணி அல்ல. அது சுத்தம், தரம், நம்பிக்கை மற்றும் உயர்தர விருந்தோம்பலின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.