மார்பிள் தொழிலுக்கு பெயர் பெற்ற கிஷன்கர் நகரில் எங்கு பார்த்தாலும் மார்பிள்கள் மிக அழகாய் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். மார்பிள்களே அங்கு பிரதான தொழில் என்பதால் பளிங்கு கற்களை வெட்டும்போது பல்லாயிரம் டன் கணக்கில் கழிவுகள் உருவாகி நகரையே அலங்கோலமாக்கியது. தொடர்ந்து நகரை மாசுபடுத்தி வரும் பளிங்கு கழிவுகள் நகர அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது.
இதனால் கிஷன்கர் நகர நிர்வாகமும், பளிங்கு தொழில் அசோஷியனை சேர்ந்தவர்களும் இணைந்து பளிங்கு கழிவுகளை ஒரே இடத்தில் கொட்ட முடிவு செய்தனர். அதன்படி பளிங்கு கழிவுகள் அனைத்தையும் சேகரித்து கிஷன்கர் நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள டம்பிங் யார்டில் கொண்டு கொட்டினார்கள். நகரத்தில் அரசு நிர்வாகத்துக்கு பெரும் தலைவலியாக இருந்த இந்த பளிங்கு கழிவுகள் இப்போது அவர்களுக்கு பெரும் வருவாய் ஈட்டி தரும் இடமாக மாறியுள்ளது. அதாவது பளிங்கு கழிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்துள்ளதால் அந்த இடம் முழுவதுமே பனி போர்த்தியதுபோல் மிக அழகாக காட்சியளிக்கிறது. இதை பார்க்கும்போது இது ராஜஸ்தானா? இல்லை காஷ்மீரா? என்ற பசுமையை நமக்குள் கொண்டு வந்து விடுகிறது.