
பொதுவாக சுற்றுலா பயணிகள் கடற்கரைகளை விட அதிக பனிபொழியும் குளிர்பிரதேசங்களுக்குதான் முன்னுரிமை கொடுப்பார்கள். அந்த இடங்கள் வெளிநாடுகளில் இருந்தால் நமது நாட்டின் கோடைகாலத்தை சமாளிக்க அங்கு சென்று விடுவார்கள். அப்படி முற்றிலும் பனியால் மூடப்பட்ட, எந்த ஒரு நாட்டினருக்கும் விசா தேவையில்லாத ஒரு இடத்தை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்கப்போகிறோம்.
நான் இங்கே குறிப்பிடும்பகுதி நார்வே நாட்டில் உள்ள தீவுக்கூட்டமான ஸ்வால்பார்ட் ஆகும். பூமியின் வட துருவ பகுதியில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட் காண்பவர்கள் மனதை கொள்ளை கொள்ளும் பிரமிப்பூட்டும் ஒரு பகுதியாகும். பனிப்பிரதேசமான இந்த பகுதியில் காணும் இடமெல்லாம் வெள்ளைப்போர்வை போர்த்தியதுபோல் பனிதான் நிறைந்திருக்கும்.
ஆண்டின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டு இருக்கும் ஸ்வால்பார்ட்டில் 2023ம் ஆண்டின் நிலவரப்படி வெறும் 2,530 பேரே வசித்து வருகின்றனர். ஆண்டில் வெறும் 4 அல்லது 5 மாதங்கள் மட்டுமே இங்கு பகல் இருக்கும். கிட்டத்தட்ட 6 மாதங்கள் இங்கு இரவுதான் சூழ்ந்து இருக்கும். சூரியனை பார்க்கவே முடியாது. அதே வேளையில் கோடை காலங்களில் அதாவது சூரியன் எட்டிப்பார்க்கும் அந்த 4 மாதங்கள் ஸ்வால்பார்ட்டில் இரவு கிடையாது. 24 மணி நேரமும் பகல் மட்டுமே.
அந்த 4 மாதங்களில் ஸ்வால்பார்ட்டில் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகை ரசிக்கலாம். எங்கும் நிறைந்திருக்கும் பனிபோர்வை பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும். நீங்கள் ஆசிய, ஐரோப்பா அல்லது ஆப்பிரிக்கா எந்த நாடுகளை சேர்ந்தவர்களாகவும் இருந்தாலும் சரி ஸ்வால்பார்ட்டுக்கு செல்ல உங்களுக்கு விசா தேவையில்லை. அதுமட்டுமின்றி அங்கு விசா இன்றி நிரந்தரமாக குடியேறவும் முடியும்; அங்கு தங்கி இருந்து வேலை செய்யவும் முடியும்.
ஐயப்ப பக்தர்களே! குற்றாலம் மட்டுமில்ல தென்காசி பக்கத்துல இந்த 2 அருவிகளையும் மிஸ் பண்ணாதீங்க!
ஆனால் காண்பவர்கள் மனதை கொள்ளையடிக்கும் ஸ்வால்பார்ட் சாதாரண சுற்றுலா பயணிக்கு ஏற்ற இடம் இல்லை. ஏனெனில் பெரும்பாலான நேரங்களில் ஸ்வால்பார்ட்டில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரிக்கு கீழே சென்று விடும். சாதாரண வெப்பநிலையில் இருந்து வருபவர்கள் மைனஸ் 20 டிகிரி குளிரை தாக்குப்பிடிப்பது சாதாரண விஷயம் இல்லை.
ஆகவே மிகுந்த உடல்திடம், மனதிடம் கொண்டவர்கள் மற்றும் சவாலை விரும்புவர்கள் ஸ்வால்பார்ட்டின் சவால்களை ஏற்றுக்கொண்டு அங்குள்ள அழகை ரசிக்கலாம். மேலும் ஸ்வால்பார்ட்டில் நார்வே நிர்வாகம் போதுமான மருத்துவ வசதிகளை அமைக்கவில்லை. ஆகையால் கொஞ்சம் உடல்நிலை பாதித்தாலும் பெரும் சிக்கலாகி விடும். அத்துடன் அங்கு அவசர மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் உங்கள் சொத்தைதான் எழுதி வைக்க வேண்டும். அந்த அளவுக்கு கட்டணம் அதிகம்.
மேலும் ஆண்டுக்கு 5 மாதங்கள் மட்டுமே ஸ்வால்பார்ட் உயிர்ப்புடன் இருப்பதால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை இமாலய உச்சத்தில் இருக்கும். வீடுகளில் தங்குவதற்கான வாடகை கட்டணத்தை கேட்டால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள். இந்த சவால்களையும், அங்குள்ள கடுமையான காலசூழ்நிலையையும் சமாளிக்கும் ஆளாக இருந்தால் ஸ்வால்பார்ட் உங்களுக்கு ஏற்ற இடம்தான்.